Sunday, 13 April 2025

மெட்ராஸ் பாஷை

இந்த மெட்ராஸ் பாஷையை பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாக்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன் வரலாறை பார்ப்பதற்கு முன் சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்களுக்கான அர்த்தங்களை பார்ப்போம்.

சென்னை பாஷையில், உருதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலச்சொற்கள் அதிகமிருக்கும். காரணம் ஆங்கிலேயர்களிடம் கூலிகளாக வேலை செய்தவர்கள் அங்கு எஜமானர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வீட்டிலும் பயன்படுத்தினார்கள்.

அங்கு மேடம்… மேடம்… என பெண்களை அழைப்பதை சுருக்கி ஆங்கிலேயர்கள் மேம்… மேம் என அழைத்தனர். அதை பார்த்து மக்கள் வீட்டுப் பெண்களிடம் அப்படியே கூப்பிட நாளடைவில் இன்னாமே…போமே… வாமே… என்றானது.

அந்தாண்ட… இந்தாண்ட…

அந்த எண்டிலிருந்து இந்த எண்ட் வரை என்பதுதான் சுருங்கி அந்தாண்ட இந்தாண்ட என்றானது.

அஞ்சலை,

வழக்கமாக வடசென்னையில் அஞ்சலை என்ற பெயர் பிரசித்தம். சூர்யா நடித்த ஒரு படத்தில் அஞ்சலை.. அஞ்சலை… அஞ்சலை என்ற பாட்டே உண்டு

அந்த பெயர் எப்படி வந்தது என்றால் ஆங்கிலேயர்கள் வீட்டில் மனைவியை ஏஞ்சல்… ஏஞ்சல்… என கொஞ்சுவதிலிருந்து உருவானது.

கம்னாட்டி,

”ஹே நாட்டி கேர்ல்” என ஆங்கிலத்தில் சிலர் கொஞ்சுவதை பார்த்திருப்போம், இதுதான் எஜமானர்கள் விசுவாசமான குறும்புக்கார வேலைக்காரனை ”கம் நாட்டி பாய்” என அழைக்க அதுவே காலப் போக்கில் கம்னாட்டி என ஆனது.

போடா கஸ்மாலம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்தது.

கசியும் மலம் போன்ற அருவருப்பானவனே என்பதுதான் கஸ்மாலம்.

உடான்ஸ், பீலா, டபாய்க்கிற, கலாய்க்கிற, சோமாரி, நாஷ்டா, டோமர் என பல சொற்கள் சுவாரசியமாக பயன்படுத்தப்பட்டு வருபவை.

”பேமானி” என்பார்கள் பேமானி என்பது அபிமானி என்ற சொல்லின் எதிர்ப்பதம். அபிமானி என்றால் நம்பத்தகுந்தவன், பேமானி என்றால் துரோகி

பெரும்பாலும் இந்த சொற்கள் உருது வழி வந்தவை.

இவற்றில் சில தமிழ் தூய தமிழ் சொற்களும் அடங்கும்.

பன்னாடை, குந்து.. போன்றவை அவற்றில் சில

”சர்தான் சித்த நேரம் குந்து மே” என்பார்கள்

உட்காரச் சொல்வதைத்தான் குந்து என்கிறார்கள் என்பது நாமனைவரும் அறிந்த விடயம். அது எப்படி உருவானதென்றால் நாற்காலி போன்ற இருக்கைகள் உருவாகாத காலத்தில் நின்றுகொண்டே பேசும் விருந்தாளிகளை குந்தியிருங்கள் என சொல்ல ஆரம்பித்தனர். இதன் உண்மையான சொல் குண்டியிரு…. குண்டியால் இரு என்பதன் அர்த்தம் இது. நாளடைவில் இது மருவி குந்தியிரு என்பதாகி பின் குந்துவாகிவிட்டது. இதைத்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.

பன்னாடை என்பது இயற்கை வடிகட்டி.. தென்னங்கள்ளை இறக்கும் போது அதில் இருக்கும் புழுக்களை, தூசி தும்புக்களை வடிகட்ட பயன்படுத்துவது வழக்கம். அது கெட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை கீழேவிடுவதால் அதுபோல கெட்ட விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்பவனை பன்னாடை என திட்டுவது வழக்கம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மெட்ராஸ் பாஷை என்பது நகைச்சுவை. நடிகர்களால்தான் அதிகம் பேசப்பட்டு வந்தது. அது கிண்டலுக்குரிய பாஷையாக அல்லது அதை பேசினாலே சிரிப்புவரும் பாஷையாக தமிழ் சினிமாவில் உலவி வந்தது மிகுந்த ஆச்சர்யமான ஒன்று. சினிமாவின் கர்ப்பகிரகமாக சென்னை இருக்கும் போதே சென்னை பாஷை ஏதோ அன்னியமாக வேற்றுகிரக பாஷை போல உருவாக்கம் கண்டது ஆச்சர்யம் தான்.

No comments:

Post a Comment