Astrology may be interesting but not real science...
சுஜாதா அவர்கள் கேள்வியையும் கேட்டு பதிலையும் தருகிறார்... கொஞ்சம் விஞ்ஞானம்...புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சிக்கத்தான் வேண்டும்...
கேள்வி : அஸ்ட்ரானமி அறிவியல் தான். ஆனால், அஸ்ட்ராலஜி? ஜோஸ்யம்? அதிலும் அஸ்ட்ரானமி போலவே பல விஷயங்கள் சொல்லுகிறார்கள். கிரகங்களின் பேரையெல்லாம் சரியாகச் சொல்லி, அவை நம் வாழ்க்கையின் சம்பவங்களைப் பாதிக்கின்றன என்று சொல்லுகிறார்கள். கிரகணங்களைக் கரெக்டாகச் சொல்கிறார்கள். அது அறிவியலா?
ஜோஸ்யம், வாரபலன் என்பது எல்லாம் அறிவியல் இல்லை. ஏன் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கலிலியோ சூரியன் பூமியைச் சுற்றவில்லை;பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்று அவர் வாழ்நாளில் சொன்ன சித்தாந்தம் அறிவியலின்படி உண்மை. ஆனால், கலிலியோ சொன்ன மற்ற பல விஷயங்கள் இன்றைய ஜோஸ்யத்தைவிடப் பொய்யானவை. இன்றைய ஜோஸ்யத்திலாவது கொஞ்சமேனும் பலிக்கிறது. அரைகுறையான சில உண்மைகள், அவர்கள் சொன்னபடி ஸ்டாடிஸ்டிக்ஸ் விதிகளின்படி பலிக்கிறது. கலிலியோ சொன்னதில் அபத்தங்களே அதிகம் இருந்தன. கடல் அலைகள் பூமி அசைவதால், ஜலம் தளும்புவதால் ஏற்படுவது என்று கலிலியோ சொன்னார். அபத்தம். இருந்தும் விஞ்ஞானி என்கிறோம். கடலங்குடி சாஸ்திரிகளை விஞ்ஞானி என்று சொல்லவில்லை.
காரணம் குறிக்கோள் வித்தியாசம். கலிலியோ அவர் காலத்தில் கருவிகள் இல்லாததால் பல விஷயங்களைத் தப்பாகச் சொன்னார். ஆனால் அவர் உத்தேசத்தில் அறிவியல் இருந்தது.
இன்றைய ஜோதிடக்கலை, 'சனி வக்ரமாக அமையும்போது காரியத்தடை, தோல்விகள், தொழிலில் இழப்பு போன்ற அனுகூலமற்ற காரியங்கள் உண்டாகும்; நாட்டுக்குச் சோதனை ஏற்படும்' என்று சொல்வது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்துமாயின் ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று ஒப்புக் கொள்ள முடியும். சிலருக்கு மட்டும் பலித்து, சிலருக்குப் பலிக்காமல், அப்படிப் பலிக்காததற்குக் காரணம் சொல்ல விதி விலக்குகள் என்று சப்பைக்கட்டு கட்டி, 'குரு கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்து விட்டான்;அதனால் கான்ஸல்' என்று சமாதானம் சொல்லும்போது, விரும்பியதை நோக்கி விஞ்ஞானத்தை வளைக்கும்போது, அது விஞ்ஞான முறையிலிருந்து வழுவுகிறது. இவ்வளவு தான் வித்தியாசம்.
விஞ்ஞானத்தில் விதிகளுக்கு ஒரு விதமான பிரபஞ்சத்தனம் உண்டு. யுனிவர்ஸாலிட்டி. அப்படி இல்லை எனில் இன்னும் விஞ்ஞானம் செய்ய வேண்டும். இந்த பிரபஞ்சத்தனம் வரும் வரையில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். பரிசோதனை செய்வதுதான் விஞ்ஞானம் என்று அவசியமில்லை.
இன்றைய க்வாண்டம் இயற்பியல், காஸ்மாலஜியில் பிரபஞ்ச சக்திகளைப் பற்றி புதிதாக ஒன்று சொல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அத்தனை கோடான கோடி துகள்களையும் ஒரு மெல்லிய சரடு - மிக மிக மெல்லிய சரடு இணைக்கிறது என்று ஒரு தியரி சொல்கிறது. அந்த சூப்பர் சரடு கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியாத அத்தனை நுட்பமான சரடு. அதன் நுட்பம் எப்படி? பூமியைவிட ஓர் அணு எத்தனை சின்னதோ அந்த அளவுக்கு அந்தச் சரடு அணுவைவிடச் சின்னது. நம்மால் பார்க்கவே முடியாது. நிஜமாகவே சரடு விட்டிருந்தாலும் அதைச் சோதித்துப் பார்க்க இயலாத நுட்பம். இதுமட்டும் ஜோஸ்யம் போல் ரீல் இல்லையா என்று கேட்கலாம்.
இந்தச் சரடு எதற்காக அமைத்தார்கள்? வாரபலன் எழுதுவதற்கு அல்ல. பிரபஞ்சத்தின் நான்கு ஆதார சக்திகளை ஒருங்கிணைத்து பார்க்க. ஐன்ஸ்டீன் முதல் பலர் முயன்று தோற்ற யுனிபைடு பீல்டு தியரி இப்போது இந்தச் சரடு சித்தாந்தத்தின் மூலம் கைவசமாகும் போலத்தோன்றுகிறது. வெளிப்படையாக நாம் காணும் சில க்வாண்டம் விளைவுகளை ஒருமித்து விளக்குவதற்கு இந்த மாதிரி ஒரு சரடைக் கற்பனை பண்ணிக் கொண்டால் எல்லாக் கணக்கும் சரியாக வருகிறது. அதனால் ஒரு சரடு இருக்கலாம் என்று சித்தாந்தம் அமைக்கிறார்கள். சரிப்பட்டு வரவில்லையெனில் தூக்கி எறிந்து விடுவார்கள். எப்போதும் மறுக்கப்படத் தயாராக இருக்கும் சித்தாந்தங்கள் கொண்டதுதான் உண்மை அறிவியல். அதனால் கற்பனையும் விஞ்ஞானம் தான்.
எலக்ட்ரானைப் பார்க்க முடியாது. ஆனால், ஒரு எலக்ட்ரான் டெலிவிஷன் திரையின் மீது மோதும்போது ஏற்படும் ஒளி வித்தியாசங்கள் தான் டெலிவிஷன். விளைவை நோக்க முடியும். அந்த விளைவு எப்போதும் -நாம் இருந்தாலும் இறந்தாலும்- ஒன்று தான். ஜோதிடத்தின் விளைவுகள் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுகிறது.
அதனால் அது பொய்யான விஞ்ஞானம்.

No comments:
Post a Comment