Monday, 27 October 2025

வாய்க்கொழுப்பு


 வாய்க்கொழுப்பு சீலையில வடியுது என்பது இலங்கையில் பரவலாகப் பேசப்படும் ஒரு சொற்றொடர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பேசப்படும் ஒரு பழமொழி “வாய்க்கொழுப்பு சீலையில் (சேலையில்) வடியுது”. இப்படி முகநூலில ஓர் அன்பர் சொல்வதோடு இந்த பழமொழி எப்படி வந்தது என்பது குறித்து தான்றிந்த ஒரு வேடிக்கையான கதையையும் தருகிறார்

அந்தக் கதை இதுதான்

ஒரு கிராமத்திலுள்ள விவசாயியின் மனைவி ஒரு நாள் இறந்து போனாள். விவசாயிக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. பிள்ளைகுட்டிகளும் இல்லை. அதனால் அவனே தனியாக சமைத்துச் சாப்பிட்டான்.

அவனுக்கு குழம்பு வகைகளும் காய்கறிகளும் வைக்கத்தெரியும்.ஆனால் சாதம் வடிக்கத்தெரியாது.அவன் சாதம் வைத்தால் குழைந்து விடும், அல்லது பருக்கையாகக்கிடக்கும்.

ஒரு நாள் அவன் சாதம் வடிப்பது எப்படி என்று பக்கத்து வீட்டுக் கிழவியிடம் கேட்டான். அவள் அவனது பரிதாப நிலையை பார்த்து நான் சாதம் வடித்து தருகிறேன். பார்த்து படித்துக்கொள் என்று சொல்லி செய்து காட்டினாள்.

கிழவி அடுப்பில் உலை வைத்து அரிசியை அளைந்து போட்டாள். உலை கொதித்தது.

கிழவி தரையில் குந்தியிருந்து அடுப்பில் விற்கைத் தள்ளினாள். நெருப்பு சரியாகப் பற்றவில்லை. அவள் ஊது குழலை எடுத்து வாயில் வைத்து ”ப்ப்ப்ப்பூத்து ப்ப்ப்ப்ப்பூத்து” என ஊதினாள். அந்த நேரத்தில் அவளுக்கு பின்புறம் வாயு பிரிந்தது.

இதைப்பார்த்த விவசாயி,”ஏய் பாட்டி.. வாயு வாயிலிருந்து மட்டும் போனால் போதாதா.? பின்னாலேயும் போகணுமா?”என்று குறும்பாகக் கேட்டான்.

விவசாயி இப்படிக்கேட்டதும் கிழவிக்கு கோபம் வந்தது. உலையில் வெந்தும் வேகாமலும் இருந்த சாதத்தை அவன் மேல் துண்டில் கொட்டிவிட்டு விடுவிடுவென வேகமாகப்போய்விட்டாள்.

அவனோ,”பாட்டி கோபப்படாதே. தெரியாமல் பேசிட்டேன்.மன்னிச்சுக்கோ!”என்றான். கிழவி கேட்கவில்லை.வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

விவசாயி மேல் துண்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு அவள் பின்னே நடந்தான். அவனது துண்டிலிருந்து சூடான கஞ்சித்தண்ணீர் சொட்டு சொட்டாய் வடிந்தது.

இதைப்பார்த்த இன்னொரு கிழவி ”இது ஏனப்பா? இப்படி ஏன் வடியுது?” என்று கேட்டாள்.

விவசாயி,”வாய்க்கொழுப்பு சீலையில வடியுது!”என்றான் அப்பாவித்தனமாக!

கொழுப்பு பிடித்த கதைதான்

No comments:

Post a Comment