Tuesday 30 July 2013

தமிழ் அமுதம் ...1



கேள்வி:

படைப்பது மட்டுமே என் வேலை; பதில் சொல்வதல்ல என்கிறார்களே சில எழுத்தாளர்கள்...?

வைரமுத்துவின் பதில்:

சோழமன்னனின் தமிழ் அவை. நளவெண்பாவை அரங்கேற்றுகிறான் புலவன் புகழேந்தி. தளைதட்டாத வெண்பாச்சுவையில் தரைசுற்றிக் கிடக்கிறது தமிழ்க் கூட்டம்.

மாலைப்பொழுதின் மனோகரம் சொல்லவந்த புலவன் _‘‘மல்லிகையே வெண்சங்கா வண்டூத’’ என்கிறான். அதாவது _ மல்லிகைப்பூக்களில் தேன் குடிக்கும் வண்டினங்களைப் படிமப்படுத்தியவன் ‘மல்லிகைப் பூக்களைச் சங்குகளாக்கி வண்டுகள் ஊதி ஒலிசெய்யும் பொழுது’ என்கிறான்.

‘நிறுத்து’ என்கிறான் ஒட்டக்கூத்தன்.

‘‘சங்கூதுகிறவன் சங்கின் பின்புறமிருந்து ஊதுவதே மரபு. மல்லிகைப்பூக்களின் மேற்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கூதுவதாய்ச் சொல்வது காட்சிப்பிழை; இது வெண்பா அல்ல; வெறும்பா.’’

ஒரு ஞான நிசப்தம் நுரைகட்டி நிற்கிறது சபையில்.

புகழேந்தி பதிலிறுக்கிறார்:

‘‘ஒட்டக்கூத்தரே உட்காருமய்யா! கள் குடிப்பவனுக்குத் தலை எது கால் எது என்று தெரியாதய்யா.’’

படைப்பது மட்டுமன்று; பதில் சொல்லும் பொறுப்பும் உண்டு படைப்பாளிக்கு.


( குமுதத்தில் வந்த வைரமுத்துவின் பதில்கள் பகுதியிலிருந்து )

No comments:

Post a Comment