Wednesday 10 July 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 7


இறைநிலை 

"என் இனிய மாணவச் செல்வங்களே!  நாம் இப்போது இறைநிலை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள இருக்கின்றோம் இதற்காகத்தான் பஞ்சபூதங்கள், பிரபஞ்சம் மற்றும் விண்  பற்றி சிறிது தெரிந்துகொண்டோம்.
பிரமாண்ட பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பூமி ஒரு தூசி போல என புரிந்துகொண்டோம். இந்த பூமியிலேதான் எத்தனை வகை தோற்றங்கள், தாவரங்கள், உயிரினங்கள்! இவையெல்லாம் எப்படி தோன்றின என சிந்தித் திரிக்கின்றீர்களா? இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்கும், சொல்லுங்கள் பார்க்கலாம்" என  அம்மா கேட்க

ஒரு மாணவி " ஒன்றுமில்லாததிலிருந்து ( space ) ஒரு மகா வெடிப்பு (Big Bang ) நிகழ்ந்து அதிலிருந்து எல்லாமே தோன்றின என்று எங்களுக்கு பாடமே இருக்கிறது" என்கிறாள்.

" விஞ்ஞானிகள் இப்படித்தான் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி   சொல்கின்றார்கள். இப்போது காணும்  அனைத்துமே அதாவது காடுகள் மலைகள், கடல்,  மரங்கள்,  பறவைகள், மனிதர்கள் என எல்லாமே பிரபஞ்சம் தோன்றும் முன் எங்கிருந்தன? " என அம்மா கேட்க

" ஆலம்விதைக்குள் ஆலமரத்தின் தோற்றம் அடங்கியிருப்பதுபோல பிரபஞ்சத்தின் எல்லா தோற்றங்களும் அந்த ஒன்றுமில்லாததில் இருந்திருக்கும் "  என இன்னொரு மாணவி பதில் அளிக்கிறாள்


" சரியாகச் சொன்னாய். இது மாத்திரம் அல்ல..பூமி தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றிக்கொள்ளும் ஒழுங்குமுறை, ஆண்டுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவரும் தன்மை, பருவநிலை மாற்றங்கள்,  மாம்பழ சீசன், பாகற்காயின் கசப்பு, மகான்களின் ஞானம் என எல்லாமே பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன் அந்த ஒன்றுமில்லாத ஒன்றில்தானே அடங்கியிருக்கக்கூடும்.' என அம்மா சொல்ல அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர்.

"எல்லா அறிவும், ஒழுங்குத்தன்மையும் அடங்கியிருந்த அந்த ஒன்றை ஒன்றுமில்லாதது என எப்படி சொல்லமுடியும். அதை பேரறிவு உடையதாகக் கருதலாம் அல்லவா?   அடுத்து நம் பூமியை எடுத்துக் கொள்வோம்.  பூமி
  6க்கு பின்னால் 24 சைபர் ( 6000000000000000000000000)  கொண்ட எண்ணிக்கையில் உள்ள கிலோ எடை இருக்கின்றது.  இந்த பூமி எதன்  மீது மிதந்து கொண்டு தன்னையும், சூரியனையும் சுற்றி வருகின்றது? " என் அம்மா வினவ

"Space ல் மிதக்கின்றது " என எல்லா மாணவிகளும் பதில் சொல்கின்றனர்.

" சரியாகச் சொன்னீர்கள் பூமி மாத்திரம் அல்ல...கோடானு கோடி நட்சத்திரங்கள், மண்டலங்கள் ஏன் இந்த பிரபஞ்சமே Space ல் தான் மிதக்கின்றது. இப்போது சொல்லுங்கள் - எதற்கு வலிவு அதிகம் - இந்த பிரபஞ்சத்திற்கா அல்லது அதைத் தாங்கி நிற்கும் Space க்கா ?"

"Space க்குத்தான்" என மாணவிகள் சொல்ல

" இந்த Space ஐ எல்லாம் வல்ல வெளி என சொல்லலாம் அல்லவா, சரி, இந்த
Space எனும் வெளி எங்கெல்லாம் இருக்கின்றது?" என அம்மா கேட்கின்றார்கள்.

" அணுவில் எலக்ட்ரானுக்கும், புரோட்டானுக்கும் நடுவே மற்றும் நட்சத்திரங்கள், கோள்களுக்கிடையே இருக்கின்றது" என்கின்றனர் மாணவியர்.

" அழகாகச் சொன்னீர்கள். பிரபஞ்சத்தைத் தாங்கியும், சூழ்ந்திருப்பதும் இதே வெளிதான். வெளி இல்லாத இடமே இல்லை. இந்த வெளிதான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னும் இருந்தது இப்போதும் இருக்கின்றது. இதை சுத்தவெளி என அழைக்கின்றனர்.  - சுத்தவெளி என்றும் இருப்பது, சுத்த வெளியில் எல்லா அறிவும் அடங்கியுள்ளது, சுத்த வெளி எல்லாம்வல்லது.
சுத்தவெளி தூணிலும் உள்ளது, துரும்பிலும் உள்ளது. உங்களிடம் உள்ளது, பார்க்கும் எல்லாவற்றிலும் உள்ளது. எனவே சுத்தவெளியை தெய்வம் எனலாம் அல்லவா!"

மாணவிகள் தலையாட்டுகின்றனர்.

" சுத்தவெளி எனும் மூலத்திலிருந்துதான் பிரபஞ்சம் எனும் ஞாலம் தோன்றியுள்ளது இந்த சுத்தவெளி எங்கும் இறைந்திருப்பதால் இதை இறைநிலை என மகரிஷி அழைக்கின்றார்கள்.  சிறப்பாக மூலத்தின் தன்மாற்றமே ஞாலம். மூலத்தை உணர்ந்தவர்கள் மெய்ஞானிகள் என்றும் ஞாலத்தை உணர்ந்தவர்களை விஞ்ஞானிகள் என சொல்லலாம் அல்லவா!
இறைநிலை பற்றிய சிந்தனை விஞ்ஞானத்தின் மூலம் உங்களுக்கு கிடைத்துவிட்டது இதுவரை நான் சொன்னதில் ஏதாவது சந்தேகம் இருந்தால்
கேட்கலாம்" என அம்மா முடிக்க

" ஏன் சுத்தவெளி பிரபஞ்சமாக மாறியது?" - பல மாணவிகள் ஒருங்கே கேட்கின்றனர்

-தொடரும் 


" இறைவன் என்ற ஆதிபரம்  
எடுத்த பலப்பல கோடி உரு 
நிறைந்த பெரிய மண்டலமே 
நெடிய விரிந்த பேரண்டம் "

ஞாலத்திலிருந்து மூலத்தை அறிவது விஞ்ஞானம் 
மூலத்திலிருந்து ஞாலத்தை அறிவது  மெய்ஞ்ஞானம்   

2 comments:

  1. can you translate the last two lines for me please...

    ReplyDelete
    Replies
    1. ஞாலம் UNIVERSE
      மூலம் - Premordial Absoulute Space - சுத்தவெளி

      The Scientist starts from universe and understands the Space.

      The Seers(rishis) starts from divine philosophy to explain universe.

      Delete