Tuesday, 2 September 2014

பகவத்கீதை.....32

பாரதியார்:

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது.
அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள் கருதலாயினர். அவர்களைத் தௌஒவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் 'தொழில் செய்' 'தொழில் செய்' என்று போதிக்கின்றார். இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.
பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. 'ஸம்சயாத்மா விநச்யதி' - 'ஐயமுற்றோன் அழிவான்' என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

No comments:

Post a Comment