Tuesday 10 December 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 12


ஆன்மா 



"  கரு மையம் பற்றி சொன்னீர்களே, இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு? " என்று ஒரு மாணவி கேட்க

" நன்கு சிந்திக்கின்றாய், பாராட்டுக்கள்! மகரிஷி அவர்கள் ஒரு கவிதையில் 
'காந்தநிலை அறியாமல் கடவுள்நிலை அறிவதோ 
கருமையம் அறியாமல் அறிவினை அறிவதோ 
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும் 
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!'
என்கிறார். அதனால்தான் நான் உங்களுக்கு காந்தம் பற்றியும், கரு மையம் பற்றியும் முடிந்தவரை எளிமையாக விளக்கி வருகின்றேன். ஏதேனும் புரியவில்லை அல்லது மேலும் விளக்கங்கள் தேவையானால் அவ்வப்போது கேளுங்கள்" என்கிறார் அம்மா.

" இப்போதுதான் கரு மையம் என்ற பொருளையே நாங்கள் தெரிந்து கொண்டோம். மேலும் சொல்லுங்கள் அம்மா!" என்கிறார்கள் மாணவிகள்.

" காந்த அலைகளின் திணிவுதான் நம் உடலில் கருமையமாக இருக்கின்றது. இறைநிலை பற்றி ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன் - அது காந்த  ஆற்றலாக இருப்பதினால் இறைத்தன்மைகள் அத்தனையும் கருமையத்திற்கு உண்டு.இறைநிலை போலவே இதற்கு தன்னிருக்க ஆற்றலும் உண்டு, விளக்கும் ஆற்றலும் உண்டு. மகரிஷி இதனை எளிமையான உதாரணத்தால் விளக்குவார்கள் - ஒரு பசுவைக்  கண்களால் பார்க்கிறோம். பசு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பு நம் கண்களில் சிறியதாக ஒரு கொசு அளவிலே தெரிகின்றது. ஜீவகாந்தத்தின் மூலம் அந்த கொசு அளவுள்ள பசு உருவம் மேலும் சுருங்கி ஒரு புள்ளி அளவில் மூளையில் பதிவாகின்றது. மேலும் ஜீவகாந்தம் திணிவு பெற்ற இடமான கருமையத்திலும் இந்த பசு காட்சியும் பதிவாகின்றது.   சில நாட்கள் கழித்து  நாம் என்ன பார்த்தோம் என்று சிந்திக்கும்போது கருமையத்தில்  பதிவான பசு உருவம் ஜீவா காந்தமான மன அலைகள் மூலம் மூளை செல்களில்  மோதி பசுவின் உருவத்தை எண்ணமாக மனத்தால் பார்க்கின்றோம். நீங்கள் எத்தனை தடவை பசுவை நினைத்தாலும் கரு மையம் பசுவின் உருவத்தை விரித்துக் காட்டும். புரிகின்றதா?" எனக் கேட்கிறார்கள் அம்மா.

" நாங்கள் இதுவரை இது மூளையின் செயல் என்று நினைத்துகொண்டிருந்தோம். அப்போது மூளையின் வேலை என்ன?"  என வினவுகிறார்கள் மாணவிகள்.

" மூளை பற்றி உங்கள் பாடத்தில் நிறைய சொல்லியிருக்கின்றார்கள். சொல்லாத கரு மையம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். எனினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். இறந்த உடலில் மூளை இருக்கின்றது. அந்த மூளையில் பதிவான எல்லாவற்றையும் விரித்துப் பார்க்க முடியுமா?" என அம்மா கேட்க 

" அது எப்படி முடியும்? உயிர்தான் இல்லையே.." என பதில் சொல்கின்றனர் மாணவிகள்.

" ரொம்ப சரி. உயிர்தான் ஜீவகாந்தமாக, மனமாக செயல்படுகின்றது என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டீர்கள்.  உயிர் பிரிந்துவிட்டதால் காந்தத் திணிவான கருமையமும் உடலை விட்டு பிரிந்து விடுகின்றது. அழிவு  என்பது பரு உடலுக்குத்தான். கரு மையம் அழிவதில்லை. " என்கிறார்கள்  அம்மா.  

"அப்போது அந்த அழியாத கருமையம் என்ன ஆகும்?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" இந்த கேள்வியை எதிர்பார்த்தேன். இதுபற்றி 'பிறப்புக்கு முன் மற்றும் இறப்புக்குப் பின் உயிரின் நிலை'  பற்றி பேசும்போது தெரிந்து கொள்ளலாம். கரு மையம் என்பது எல்லாவற்றையும் சுருக்கிப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது. தேவைப்படும்போது பதிவுகளை   விரித்து எண்ணங்களாக மலர்த்திக் காட்டுகின்றது. இன்னும் சொல்லப் போனால் சிற்றுயிரிலிருந்து  ஆறாம்  அறிவு பெற்ற மனிதன் வரையில் மாற்றமடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்புப் பெட்டகமே கருமையமாகும்" என்கிறார்கள் அம்மா.

" புரிகிற மாதிரி தெரியுது.   ஓர் உதாரணத்தோடு விளக்கினால் நன்றாக இருக்கும்" என்கிறாள் ஒரு மாணவி.

" இன்று நாம் எல்லோருமே செல்போன் பயன்படுத்துகின்றோம். அதில் உள்ள சிப் (சிம்  மற்றும் மெமரி கார்ட் )  போன்று நம் உடலில்  கரு மையம்.  பேட்டரியில் சார்ஜ் உள்ளவரை போன் வேலை செய்யும். நமக்கு போனில் யாருடன் பேசவேண்டும் என்பதை அதில் உள்ள பதிவுகளைப் பார்த்து தேர்ந்தெடுக்கின்றோம் அல்லவா அந்த வேலையை நம்மிடம் மனம் செய்கின்றது. மெமரி கார்ட்தான் நம் மூளை. பேட்டரிதான் உயிர்." என்கிறார்கள் அம்மா.

" நன்கு புரிகின்றது" என்கிறார்கள் மாணவிகள்.

" அப்படியானால் இந்த கருமையத்திற்கு உள்ள வேறு பெயரினை உங்களால் சொல்ல முடியுமா? " எனக் கேட்கிறார்கள் அம்மா.

 மாணவிகள் ஆர்வமாக யோசித்துக்கொண்டிருக்கும்போது அம்மா சொல்கிறார்கள் - 

" நம்மிடம் திணிவு பெற்று விளங்கும் கருமையமான காந்தம் 'ஆன்மா' எனவும் அழைக்கப் படுகின்றது. இந்த ஆன்மா என்ற காந்தத்திற்கு என்றுமே அழிவு என்பதில்லை."

மாணவிகள் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

 - தொடரும் 

" காந்த  ஆற்றல் உட்பொருள்
   கருமையத்துட்பொருள் 
   கடவுள் எனும் இறைவெளியே "  - மகரிஷி 

No comments:

Post a Comment