Tuesday, 15 November 2016

ஞானக்காடு


என்னுடன் BHELல் வேலை பார்த்த நண்பர் கோபமாக ஓர் e mail அனுப்பியிருந்தார். "தினமும் ஞாவயலுக்கு வந்து ஏமாந்து போகின்றேன். டெஸ்லாவை அம்போவென்று  நீங்களும் விட்டு விட்டீர்கள். 
வயல்  புதர் மண்டி காடாக மாறும் முன் அழகு படுத்துங்கள். விரைவில் ஞான வயல் தோட்டமாக, பூங்காவாக மாற வேண்டும் " என அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். 

இங்கு எனது புதல்வன் திருமணம் காரணமாக வயல் பக்கம் வராமலேயே  போய்விட்டது.

நவம்பர் 20 தேதிக்கு மேல் வயலுக்கு வருவேன் என உறுதி கூறுகின்றேன்.
நன்றி. வாழ்க வளமுடன்!

Thursday, 6 October 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 5 ( டெஸ்லா - 2 )

தாமஸ் ஆல்வா எடிசன் 


டெஸ்லா  பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன் எடிசன் பற்றி கொஞ்சம் ஞாபகப் படுத்திக்க கொள்ளலாம்.

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்  - கிட்டத்தட்ட 1300 கண்டுபிடிப்புகள். அவற்றில்  1093 க்கு  காப்புரிமை 
( Patent Rights ) பெற்றவர.

8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவரை  ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.

 பார்க்கும் எதையும்   சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.

ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.

ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்தி ரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.

அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்காத  மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

மேற்சொன்னவை அனைத்தும் நமக்குத் தெரியும்  

                      - தெரியாத எடிசனின் மறுபக்கம் பற்றியும் பார்க்கலாம்.

ஒரு மேடையில் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னது -

 “வியாபாரத்திலும், தொழிற்துறையிலும் திருடாதவர்கள் யாரும் இல்லை,

 நான் திருடியிருக்கிறேன். 

மற்றெல்லோரையும் விட எனக்கு எப்படித் திருடுவது என்று தெரியும்?”

எடிசனிடம்  ஏமாந்தவர்தான் நம் டெஸ்லா.

அவரைப் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.



Tuesday, 4 October 2016

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டு தினம்

இன்று அறிவு  திருக்கோவில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.




இந்த நல்ல நாளில் இத் திருக்கோவிலின் வளர்ச்சிக்காக 
அயராது  தொண்டாற்றிவரும் அத்துணை அருட் தொண்டர்களின் 
பாதம் பணிந்து 
வாழ்த்தி வணங்குகின்றேன்,
வாழ்க வளமுடன்!

To see earlier posts click here 


Saturday, 1 October 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 5 ( டெஸ்லா - 1 )

நிகோலா  டெஸ்லா  @ நயாகரா 

ராபர்ட் மோஸஸ் மின் நிலையம் மியூசியம் பார்ப்பதற்கு முன் உலகத்தார்க்கு தெரியாமல் மறைக்கப்பட்ட நிகோலா டெஸ்லா என்ற மாமனிதரை, இன்று நாம் பயன்படுத்தும் AC  மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வடிவமைத்தவரைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் யார் எனக் கேட்டால் மார்க்கோனி என்போம்.
உண்மையில் கண்டு பிடித்தது டெஸ்லாத்தான்.  மார்க்கோனி ரேடியோவைக் 'கண்டுபிடிப்பதற்கு' இரண்டாண்டுகளுக்கு முன்னரே டெஸ்லா ரேடியோவைப் பற்றி ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.1892ம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளிலே டெஸ்லா வானொலிக்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பொருத்தி, வானொலியை உருவாக்கியிருந்தார். அதற்குரிய வரைபடங்களையும் அவர் தயாரித்திருந்தார். அத்துடன் அவற்றை அமெரிக்கக் காப்புரிமை நிலையத்தில் (Patent Office) பதிவும் செய்திருந்தார். டெஸ்லாவின் கண்டு பிடிப்பு, லேப் அனைத்தும். தீக்கு இரையானது. தீ வைத்தவர் யார் தெரியுமா?  எடிசன் தான் என்றும் சொல்கிறார்கள். ( எடிசன் - டெஸ்லா சண்டை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் )

ஆனால், டெஸ்லாவின் அதே வரைபடங்களின் அடிப்படையை வைத்துக் கொண்டு, மார்க்கோனி 1895ம் ஆண்டில் வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் முழுவதும் அறிவித்தார். இதை எதிர்த்து டெஸ்லா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார். ஆனால், டெஸ்லாவின் வழக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தள்ளுபடி செய்யப்படது. 

ஆனால் 1904 ஆம் வருடம் அரசியல் செல்வாக்கு பெற்றவரும்,எடிசனின் பிரியத்திற்கு உரியவருமான மார்க்கோனி தான் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று அமெரிக்கா அறிவித்தது. அதற்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.


இவர் வேறு என்னென்ன கண்டு பிடித்தார் என்பதை தெரிந்து கொள்ளும் முன் 
நயாகராவுக்கும், டெஸ்லாவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்றும் உலகிலேயே அதிக அளவு நீர் மின்சாரம் ( Hydro electrical power )  அமெரிக்கா, கனடா இடையே ஓடும் நயகாரா அருவியின் மூலம் கிடைக்கிறது. 


நீரில் இருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை உலகிற்க்கு சொல்லி கொடுத்தவரே டெஸ்லா தான். அதுவும் உலகின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையத்தை நயாகராவில் தன்  நண்பர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் உதவியுடன் 1881ல் அமைத்து மின்புரட்சியை துவக்கியவர்.

டெஸ்லாவைப் பற்றி நான் B E  ( எலெக்ட்ரிக்கல் ) படிக்கும்போது ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் நயாகராவில் அவர் சிலையைக் கண்டபோது 
என் ப்ரொபசர் பாலசுந்தரம் தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும் அவருடன் இருந்த டெஸ்லா பற்றியும் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் சொன்னது கொஞ்சம் ஞாபகம் வந்தது.

டெஸ்லா பற்றி தெரிந்து கொள்ளலாமா...

Wednesday, 28 September 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 4

R i n b o w     Bridge  



வானவில் பாலம் என அழைக்கப்படும்  இந்த பாலம் நயாகரா ஆற்றின் மீது அமைந்து அமெரிக்கா - கனடா நாடுகளை இணைக்கின்றது. 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் தண்ணீர் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில், 950 அடி நீளத்தில் இருக்கின்றது.

இந்த பாலத்தின்  அடியில் தண்ணீர் 30 மைல் வேகத்தில்,  ஒவ்வொரு நிமிடத்துக்கும் 4 முதல் 6 மில்லியன் கன  அடி  தண்ணீர்   கடந்து செல்கின்றது.
( ஒரு 10 நாளுக்கு இந்த அளவு தண்ணீர் தமிழ்நாட்டுக்குக் கிடைச்சா போதும்..நாலு போகம் விளைவிக்கலாம் ! )

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வண்ண ஒளியூட்டப்பட்ட நயாகரா அருவிகளும், வாணவேடிக்கைகளும்   பார்க்க இந்த பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குவிவார்களாம் .

நாங்க நிக்கற படகுக்கு கீழே 175 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருக்குதாம்... 

( கனடா பகுதியிலிருந்து குதிரை லாட அருவிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்குமாம். நாம் இந்தி, தமிழ் படங்களில் பார்த்த நயாகரா வீழ்ச்சி பெரும்பாலும் கனடா பகுதிகளில் எடுக்கப் பட்டதாகும். கனடா விசா இல்லாததால் அந்தப் பகுதிக்குப் போக முடியவில்லை ). 

Tuesday, 27 September 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 3

கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )





மெயிட் ஆஃப் த மிஸ்ட்  பயணம் முடிந்து மேல் தளத்திற்கு வந்து அங்கிருந்து மறுபடியும் நயாகரா வீழ்ச்சியை மீண்டும்  ரசித்துவிட்டு  ஒரு trolley எனப்படும் mini busல் ஏறி பிரைடல் வெய்ல்  அருவியின் மேல் பகுதிக்கு வந்தோம். ஒரு நீண்ட கியூவில் நின்று டிக்கட் வாங்கி லிப்ட் மூலம் 175 அடி இறங்கி அருவியின் கீழ் பகுதிக்கு வந்தோம். இங்கு நாம் அணிந்துகொள்ள மஞ்சள் நிற ரெய்ன் கொட்டும், ஸ்பெஷல் காலணிகளும் தருகிறார்கள். அவற்றை அணிந்துகொண்டு பல மரப்படிகளை ஏறி, இறங்கி  Hurricane Deck என்ற தளத்திற்கு வந்தோம். இந்த deck  நீர்வீழ்ச்சியின்  கீழ் பகுதியிலிருந்து 150 அடி உயரத்தில் மிக பத்திரமாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி 6 மீ தொலைவு மட்டும்தான். பேரிரைச்சலோடு ( இடி முழக்கமென  கூட சொல்லலாம் ) கொட்டும் அருவி இந்த இடத்தில் நம்மை முழுக்க, முழுக்க நனைத்து விடுகின்றது. நயாகராவில் நீர்வீழ்ச்சி குளியல் இங்கு சாத்தியமாகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆனந்த பரவசம் அடையும் இடமெனக் கூட சொல்லலாம்.




ஆங்காங்கே தோன்றும் வட்ட வடிவ வானவில்கள் நமக்கு மேலும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

.மறக்க முடியாத  கேவ் ஆப் த வின்ட்ஸ் எனும் 

இப்பயணத்தை முடித்து விட்டு  மறுபடியும் லிப்ட் மூலம் மேலே வந்து trolley க்காக காத்திருந்த நேரத்தில் நனைந்திருந்த உடைகள் முற்றிலும் காய்ந்து விட்டன. இப்போது trolley அருவியைச் சுற்றி பல sight seeing பகுதிகளைக்  காண்பித்துவிட்டு நுழைவாயில் அருகே நின்றது.

நாங்களும் இறங்கி அடுத்து பிட்ஸ்பர்க்  திரும்ப எண்ணினோம். மணி மாலை 4 ஆகி இருந்தது. ராபர்ட் மோசஸ் (Robert Moses) மின் நிலையத்தில் உள்ள மியூசியம் மிகச் சிறப்பாக இருக்குமெனச் சொல்லி ஸ்ரீராம் எங்களை அங்கு அழைத்துச் சென்றான்.

அடுத்து  மியூசியம்...அதற்குமுன் you tube ல்  

கேவ் ஆப் த வின்ட்ஸ்  clippings பார்க்க  இங்கே  சொடுக்கவும்.

Monday, 26 September 2016

இன்ப அதிர்ச்சி

இன்று ( 25-9-16 ) மதியம்  எங்கள் வளர்ப்பு மகள்களாகத் திகழும் ஸ்ரீப்ரியா & ஜெயந்தி சகோதரிகள் எங்கலைப்  பார்க்க  பாஸ்டனிலிருந்தும், கனடாவிலிருந்தும்  வந்திருந்தார்கள். Ms ஜெயந்தி ஸ்ரீராம் தற்போது மகன் ஸ்ரீவத்ஸன்  மற்றும் கணவருடன் கனடாவில் வசிக்கிறாள். அவளது அக்கா Ms  ஸ்ரீப்ரியா நாகராஜ் மகன் அமோக் மற்றும் மகள் ஆர்ணாவுடன்  பாஸ்டனில் இருக்கிறாள். ஸ்ரீப்ரியா தங்கை ஜெயந்திக்கு US விசா கிடைத்த கையோடு அவளையும் ஸ்ரீவத்ஸனையும் அழைத்துக் கொண்டு எங்களை வந்து பார்த்தது இன்ப அதிர்ச்சிதான்.


ஜெயந்தி, ஸ்ரீப்ரியா, மாலா & ஜேபி 

ஸ்ரீவத்ஸனுடன் 
அவர்கள் வந்த நேரம் உமா வெங்கடேஷுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து
மகிழ்ச்சியை அதிகப் படுத்தியது.


5 மணி நேரம் அவர்கள் எங்களோடு பழைய நினைவுகளைப்  பகிர்ந்து கொண்டு, ஹாஸ்பிடலில் உமாவையும், குழந்தையையும் பார்த்துவிட்டு இரவு பாஸ்டன் திரும்பினார்கள்.

( 4 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீப்ரியா மாலா பற்றி எழுதியது படிக்க  இங்கே சொடுக்கவும்.)

Sunday, 25 September 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 2


மேலிருந்து அருவிகளை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு படகு மூலம் ( குட்டி ஷிப் ) மூன்று அருவிகளின் மிக அருகே சென்று பிரமித்தோம். இந்த பயணத்தை 'மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)' என அழைக்கிறார்கள். கனடா பகுதியிலிருந்தும் இம்மாதிரி படகுகள் அருவிகளை அருகே காட்டுகின்றன.


மெயிட் ஆஃப் த மிஸ்ட்  படகு பயணத்திற்கு காத்திருந்தபோது  நிறைய இந்தியர்களை,  பெற்றோர்களை அழைத்துவந்த பல ஸ்ரீராம்களைப் பார்த்தோம்.


படகுப் பயணத்தின் டிக்கட்  கொடுத்து ரெய்ன் கோட் ( அமெரிக்கப் பகுதிக்கு நீல நிறம் ) அணிந்து படகின்( ஷிப்பின் ) மேல் தளத்தில் வசதியாக நின்று கொண்டோம். மறக்க முடியாத, அற்புத பயணம். அருவியை நெருங்கும்போதே முழுக்க நனைந்து விட்டோம். குற்றாலக்  குறவஞ்சி பாடலின் 

'தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

வரிகள் ஞாபக்கத்திற்கு வந்தது. அருவிக்கு அருகே செல்லச் செல்ல அருவிகளின் வானலாவத் திரை எழும்பி ஆதவனை அணைத்து விடுமோ என்பது போல இருந்தது.




அமெரிக்க அருவி வழியாகச் சென்று குதிரை லாட பிரமாண்ட அருவியைக் காண்பிகின்றனர். அருவியின் கீழிருந்து பார்க்கும்போது வெள்ளை வெளேரென வெண்திரை - பூமிக்கும், ஆகாயத்திற்குமாக ! அருவியின் நீர்த் திவலைகள் வெகுவேகமாக நம் மீது மோதுவதால் போட்டோக்கள் எடுப்பது சிரமம்தான். எடுத்த சில போட்டோக்களை இங்கு  பதிவு செய்துள்ளேன்.









கனடாப் பகுதியிலிருந்து வரும் மெயிட்  ஆஃப்  த மிஸ்ட்  படகில் வருபவர்கள் பச்சை வர்ண ரெய்ன் கோட் அணிந்து வருகிறார்கள்.

மெயிட் ஆஃப் த மிஸ்ட் பயணம் பற்றிய பல வீடியோ க்ளிப்பிங்ஸ் you tube ல்  உள்ளது. அதில் ஒன்றின் link .





Saturday, 24 September 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - 1


நான்  BHELல்  இருந்தபோது US செல்லவேண்டிய official trip சில காரணங்களால் ஐரோப்பா போகும்படியாகி விட்டது.  US  சென்று வந்த  எனது நண்பர்கள் நயாகரா சென்று வந்த அனுபவங்களை சொல்லும்போது நிச்சயம் நாமும் இங்கே சென்று வந்தாக வேண்டும் என்ற எண்ணம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது.

செப்.11ம் தேதி காலை 8-30 மணிக்கு பிட்ஸ்பர்க்கிலிருந்து புறப்பட்டு 11-45க்கு நயாகரா வந்து சேர்ந்தோம். கையில் கொண்டுவந்திருந்த கட்டுசாதத்தை சாப்பிட்டுவிட்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அருவிச் சாரல் தூவானமாக எங்களை நனைக்க ஆரம்பித்தது.



இது அருவியா, நீர் வீழ்ச்சியா, பேரருவியா - முதல் காட்சியே மலைக்க வைத்தது.

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்த சில விவரங்களை  மறுபடியும்  இங்கே படிக்கலாம் -

உலகப் புகழ் பெற்ற இந்த பேரருவி கனடா - அமேரிக்கா எல்லையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குறைந்தது 1 கோடி மக்கள் இதை பார்க்க வருகின்றார்களாம். நயாகரா ஆறு இரு பிரிவாகப் பிரிந்து 85% நீர் கனடா பகுதியில் குதிரை லாட ( horse  shoe ) அருவி என்ற பெயரில் வீழ்கிறது. பாக்கி 15% தான் அமெரிக்கன் அருவியாக அமெரிக்கப் பகுதியில் வீழ்கிறது. இது தவிர பிரைடல் வெய்ல்  என்ற ஒரு சிறிய அருவியும் இருக்கின்றது . இந்த 15%  அமேரிக்கா   பக்கம்தான் நாங்கள் போயிருந்தோம்.

சாரல் அதிகமாக இருந்ததாலும், காற்றின் வேகமும் போட்டோக்கள் எடுக்கும் வாய்ப்பினை குறைத்து விட்டன. you tube ல் நீர்வீழ்ச்சி பற்றி நிறைய வீடியோ கிளிப்பிங்ஸ் உள்ளன. சாம்பிளுக்கு கீழே உள்ள linkல் கொஞ்சம் பார்க்கலாம் 

click  link 

மற்றைய விவரங்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். நயாகரா பற்றி  

கவிஞர் வைரமுத்து எழுதியது கீழே -


ஓ.. நயாகரா!

இது என்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

இது
எழுந்து நிற்கும் நதியா?
தண்ணீரின் வீசுவரூபமா?

நக்கீரா!
இதை நீர்வீழ்ச்சி என்பது
பொருட்குற்றம் அல்லவா?

நீருக்கு இது வீழ்ச்சியல்ல
எழுச்சி!

உன் பழமொழி
பொய்யடா தமிழா!
இதோ
இங்கே நெருப்பில்லாமல்
புகைகிறதே!

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?
இது என்ன

வானுக்கும் பூமிக்கும்
வைரநெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?

கண்டேன்
கண்களுக்குள் மழை!

கேட்டேன்
காதுக்குள் கச்சேரி


தொட்டேன்
ஜீவனுக்குள் சில்லிப்பு

உண்டேன்
பல்லிடுக்கில்  பனிக்கட்டி

முகர்ந்தேன்
இனந்தெரியா ஈரமணம்

ஓகோ!

கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும்
அருவியின் கண்ணும் உள!

அருவியே! அருவியே!
அடர்ந்த அருவியே!

உன்னை எழுதும் போது
கூறியது கூறுலும்
குற்றமென்றாகாது!


அடுத்து 

மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist) ,



கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds ) ,



வானவில் பாலம் (Rainbow Bridge)  &


ராபர்ட் மோசஸ் (Robert Moses) மின் நிலையம்



Thursday, 22 September 2016

பிட்ஸ்பர்க் - 4 ஊர் வலம்

செப். 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை நயாகராவிற்கு புறப்பட்டு நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு  அன்று இரவே பிட்ஸ்பர்க் திரும்பினோம்.

அடுத்த நாள் திங்கட்கிழமை ப்ரவீண்  - ஆஷா தம்பதியருடன் ஆன்மீக விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அவர்களுக்கு எளிய முறை உடற் பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.

அவர்கள் வீட்டைச் சுற்றி walking சென்று வந்தோம். அழகான, சுத்தமான, இதமான சூழ்நிலை...Fall  பருவம் ( autumn season )  ஆரம்பிக்கும் வேளை...மரத்திலுள்ள இலைகள் பல்வேறு நிறங்கள் மாறி உதிரும் காலம் தொடங்குகின்றது. அடுத்த மாதம் பார்த்தால் இலைகள் நிறம் மாறி மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, பழுப்பு எனப்பார்க்குமிடமெல்லாம் மரங்கள் அழகாக தோன்றுமாம். அதுவும் பிட்ஸ்பர்க்  அழகாகக் காட்சி தருமாம்.

அடுத்த மாதம் அது பற்றி எழுதுகிறேன்...

ஆஷா வீட்டிற்கு முன்னால்  

பக்கத்து சாலையில் 

நிறம் மாறிக்கொண்டிருக்கும் மேப்பிள் மரத்தருகில் 


ஆஷா வீட்டு ஜன்னலுக்குப் பின் அழகான  red cardinal bird
 திங்கட் கிழமை  மாலை பிட்ஸ்பர்கிலிருந்து  கிளம்பி பால்டிமோர் வந்தடைந்தோம்.

பிட்ஸ்பர்கில் எங்கள்  மண நாள் கொண்டாட்டம்  மற்றும் பல மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த ப்ரவீண் - ஆஷா தம்பதியினருக்கு நன்றி...நன்றி..நன்றி!

அடுத்து நயாகரா...   


Saturday, 17 September 2016

பிட்ஸ்பர்க் - 3 பார்க்குமிடமெல்லாம் பாலங்கள்

பிட்ஸ்பர்க் நகர் மலைப் பிரதேசமாக இருப்பதால் சாலைகள் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக செல்கின்றன.

கோவிலிலிருந்து நேரே நகரின் மையத்தில் உள்ள PPG  Place க்குச் சென்றோம்.

@ PPG  Place


அழகான ஐந்து வானுயர்  கட்டிடங்கள் சுற்றிலும் அமைய நடுவில்  செயற்கை நீரூற்றுக்கள் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக உள்ளது,
நீரூற்றுக்குப் பின்னால் இரண்டு அழகான PPG கட்டிடங்கள் 
நீரூற்றுக்கு நடுவே இன்னொரு  போஸ் 









PPG  கட்டிடங்களுக்கு அருகே இன்னொரு அழகான கட்டிடம் 

 மிதி  ரிக் ஷா 


நாங்கள் சென்றது சனிக்கிழமை என்பதால் மக்கள் இப்பகுதியில் உள்ள கேளிக்கை இடங்களில் நடனமாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் இங்கிருந்து விட்டு நகரின் தோற்றத்தை மேலிருந்து பார்க்க குன்றின் மீது  சென்றோம்.

பிட்ஷபார்க் நகரத்தின் பின்னணியில் போஸ் 

மூன்று ஆறுகள், 29 பெரிய பாலங்கள், 425 சிறிய பாலங்கள் என நகரில் நிறைய பாலங்களை பார்க்க முடிகின்றது. ஒவ்வொரு பாலமும் ஒவ்வொரு டிசைன்.
கேண்டிலீவர்,  சஸ்பென்ஸன், ஹேங்கிங், பீம், ஸ்டோன், etc  என பற்பல வடிவங்களில் பாலங்கள். City of Bridges  எனவும் இந்த நகர் அழைக்கப்படுகின்றது.

Wednesday, 14 September 2016

பிட்ஸ்பர்க் - 2 கோடீஸ்வரர்

5 கி.மீ. நடைக்குப் பிறகு ஆஷா வீட்டிற்கு வந்து முகத்தில் உள்ள சாயங்களைக் கழுவி விட்டு மிகுந்த புத்துணர்ச்சியுடன் உலகின் மிகப் பெரிய பணக்காரரை, 
அதுவும் உலகின் செல்வ செழிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 
பார்க்கப் புறப்பட்டோம்

ஆம், பணக்கார சாமியான வெங்கடாசலபதியைத் தரிசிக்க பிட்ஸ்பர்க் கோவிலுக்குச் சென்றோம். திருப்பதி மாதிரி மலைப்பாதையில் சென்று கோவிலுக்கு வந்தோம். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்திருந்தனர். இந்த கோவில்தான் அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் இந்து கோவிலாகும். ஆந்திர பிரதேச அரசாங்கமும், திருப்பதி தேவஸ்தானமும் பொருளுதவி செய்து 1977ல் கும்பாபிஷேகம் செய்திருக்கின்றார்கள.


மகனுடன் மணநாள் தம்பதி 


ஜேபி, ப்ரவீன் ஆஷா, மாலா, ஆஷா ப்ரவீன் 


கோவிலில் நுழைந்ததும் விநாயகர் சந்நிதி பிறகு படியேறியதும் பெருமாள் சந்நிதி. இருபுறமும் தனியே தாயார் மற்றும் ஆண்டாள் சந்நிதிகள். அர்ச்சகர் தீபம் காட்டி, தீர்த்தம் தந்து, சடாரி சாத்தி பிரசாதம் ( திராட்ஷை, முந்திரி, பாதாம்)
தருகிறார்.

இங்கேயும் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அதற்கென தனி இடம் உள்ளது.




கீழே வந்து கோவில் காண்டீனில் சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் ,
லட்டு, காராபூந்தி சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் நயாகரா பயணத்திற்காக 
கட்டுசாதமாக புளியோதரை, தயிர்சாதம் பேக் செய்து வாங்கிக் கொண்டோம்.

பிறகு கோவிலிலிருந்து பிட்ஸ்பர்க் நகரை முழுதும் பார்க்க இன்னொரு குன்றின் உச்சிக்கு பயணமானோம்.