தபூசங்கர் காதல் டானிக் by சந்தானம்
காதல் கவிதை என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டினால் கிடைக்கக்கூடிய அபூர்வ வஸ்து என்ற மாயையை உடைத்தவர்... காதலும் தமிழும் மட்டுமே போதும் ஒருவன் கவிஞராகலாம் என நம்பிக்கையூட்டி, பல இளைஞர்களின் கைகளில் எழுதுகோலை ஏற்றி வைத்தவர் `காதல் கவிஞர்' தபூ சங்கர்! ‘‘மச்சான்... காதல்ங்குறது...’’ என ஹீரோக்களின் காதலுக்குத் தூதராகவும் துரோகியாகவும், தன் காதல் தேனடைக்காக ஒற்றைக் காலில் நிற்கும் கொக்காவும் மாறி மாறி, சமகால இளைஞர்களின் காதல் டானிக்காகத் தன் வசனங்களை மாற்றியவர் நடிகர் சந்தானம். ஒருவேளை சந்தானத்தின் காதல் டானிக்கை, தபூ சங்கரின் பேனாவில் ஊற்றிக் கவிதைகள் பிழிந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தபோது உருவான கவிதைகள் இவை.

பார்த்தாவிற்கு
சரவணன் கூலிங் பியரைக்
காட்டுவது மாதிரி
காதல் எனக்கு
உன்னைக் காட்டியது ஜாங்கிரி!
***
இராணுவத்தில் சேர
அடம்பிடிக்கும் உன் தம்பியை
நினைத்து வருத்தப்படுகிறாய்
இராணுவத்தில் அழிந்தவர்களைவிட
உன் அழகின் ஆணவத்தில்
அழிந்தவர்கள்தான் அதிகம் என
உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன்?!

பிளாக்கில் டிக்கெட் விற்கும் நிலைக்கு
நான் ஆளாவேன் என்று
சத்தியமாக நினைத்துப் பார்த்தேன்
ஆனால்
சத்தியம் தியேட்டர் வாசலிலேயே விற்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
***
என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்
ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
‘‘அம்முக்குட்டி செல்லக்குட்டி
ஜாங்கிரி பூந்தி உம்மா” என
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
***
ஒரு
வண்ணத்துப்பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது,
“ஏன் இந்த அடை... தேனடை...
நகர்ந்துகொண்டே
இருக்கிறது” என்று!

`திமிங்கலம்... நீ அவள் அழகை எடுத்து கன்னங்களில் வை...
பேயி... நீ போய் அவள் கன்னங்களில் இருக்கும்
அழகை எடுத்து அவள் கூந்தலில் வை!
மண்டகசாயம்... நீ அவள் கூந்தலில் இருக்கும்
அழகை எடுத்து மீண்டும் அவள் கண்களிலேயே வை!’ என
உன் அழகை இப்படி அலைக்கழிக்கிறாயே?
பேசாமல் இந்த `அழகு மூட்டை’
என் வீட்டிலேயே இருந்திருக்கலாம்!
****
ஆச்சாரமாக இருக்கும் உன் குடும்பத்திற்கு
பீச் ஓரமாக இருக்கும்
என் குடும்பம்
செட் ஆகாது என
உன் அப்பா மங்கூஸ் மண்டையன் அசிங்கப்படுத்திவிட்டார்
ஒன்றரைக்கு ஒன்றரை ரூமில்
ஒரேயொரு
சேரைப் போட்டு
அங்கேயே சுத்தி சுத்தி வேலை செய்யும்
உன் அப்பாவிற்கே
இவ்வளவு அதுப்பு இருக்கிறது என்றால்,
தினமும் நீ போகும் எல்லா இடத்திற்கும்
உன் பின்னாலேயே
ஹட்ச் டாக்கைப் போல சுற்றிக்கொண்டிருக்கும்
எனக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்?
நான் தெரியாமல்தான் கேட்கிறேன்,
‘அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?’’

உன் தோழிகளைப் புகழ்ந்து
ஒரேயொரு முறை பேசியதற்காக
தினமும் என்னுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாயே,
சுபாஷ் சந்திரபோஸ்
சண்டைக்கு ஆள் போதவில்லை என்று
கூப்பிட்டாரே...
அப்போது போனாயா?
***
சர்க்கரைப் பொங்கலும் வடகறியுமாக
நம் ஜோடி இருக்க
அந்த ஹோட்டல்காரன் சீனுவைத்தான்
திருமணம் செய்வேன் என்று
அடம்பிடிக்கிறாய் நீ!
இந்த வெட்டுப் புலியா
அந்தச் செத்த எலியா,
இந்த பாட்ஷாவா
அந்த ஆண்டனியா,
பாலா பீரா
என உன்னுடன்
சண்டை போட விரும்பாத நான்
உன் சம்மதத்துடன்
சமாதிக்குள் குடியேறுகிறேன்!
****
எல்லாப் பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள,
நீ மட்டும் உதட்டின் அழகை மறைக்க
லிப்ஸ்டிக் பூசுகிறாய்.
ஒன்றை மட்டும் சொல்கிறேன்
உன் லிப்ஸ்டிக்கை அழிக்க நினைப்பவனை காதலிக்காதே
உன் ஐ-லைனரை
அழிக்க நினைக்காத
என்னைக் காதலி

No comments:
Post a Comment