Saturday, 7 February 2026

அகத்தியர்


அகத்தியருக்கு தமிழ் கற்றுத் தந்த கந்த குரு

சிவபெருமான் திருமணத்தின் பொருட்டு கைலாயத்திலிருந்து வந்தான். வந்து இமாசலத்தில் இறங்கினான். மேனையும், பிற பெண்களும் சிவபெருமானுடைய திருவடியைத் தாம்பாளத்தில் வைத்து, நல்ல பசுமாட்டுப் பாலால் கழுவிப் பாதபூஜை செய்து, வணங்கிப் போனார்கள்.

திருக்கல்யாணத்திற்குக் கோடிக்கணக்கான பேர்கள் வந்திருந்தார்கள். ஆண்டவன் திருமணம் ஆகையால் தேவலோகத்திலுள்ள தேவர்கள் வந்து விட்டார்கள். பூலோகத்திலுள்ள மக்கள் வந்து விட்டார்கள். இமாசலத்தில் கூட்டம் மிகுதியாகி விட்டது. அந்தப் பாரம் தாங்க முடியாமல் இமாசலம் அமிழ்ந்தது. வடக்கே தாழ்ந்தவுடன் தென்பால் உயர்ந்தது. தேவர்களுக்கு அதைக் கண்டு பயம் வந்து விட்டது. ‘தென்னகத்தில் உள்ளவர்கள் எளிதில் ஒரு தாவுத் தாவிச் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்களா?' என்று தேவர்கள் கவலைப்பட்டார்களாம். தக்கயாகப் பரணி என்னும் நூலில் உரை ஆசிரியர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். 'தவம் செய்யாமல், தானம் செய்யாமல் தென்னாட்டிலுள்ள தமிழர்கள் தேவலோகத்திற்கு வந்து விடுவார்களே!' என்று தேவர்கள் அஞ்சினார்களாம். எல்லோரும் அஞ்சிச் சிவனே சிவனே என்றார்கள்.

“இன்னோர் எவரும் சிவனேஎன் றிரங்க லோடும்
முன்னோனும் அன்ன செயல்கண்டு முறுவல்
எய்தி அன்னோர் குறைநீத்திட நந்தியை நோக்கி
ஆழி தன்ஓர் கரத்தில் செறித்தானைத் தருதி என்றான்.”

(திருக்கல்யாணம். 49.)

(முன்னோன் - சிவபிரான். ஆழி - கடலை. செறித்தானை - அடக்கிய அகத்திய முனிவனை. தருதி - அழைத்து வா.)

இறைவனிடம் தங்கள் கவலையைத் தேவர்கள் சொன்னார்கள். சிவபெருமான் தெற்கே ஓர் இமாசலத்தை உண்டாக்கி நிலத்தைச் சீர்படுத்துவான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வண்டி ஒரு பக்கம் ஓரையடித்தால் மற்றொரு பக்கத்தில் ஒரு பாறாங் கல்லைப் போடச் செய்வது போல இறைவன் சமன் செய்வான் என்று எண்ணினார்கள். ஆனால் இறைவன் செய்தது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. “தன்னுடைய கரத்தில் கடலை அடக்கிக் குடித்த அகத்தியனைக் கூப்பிடு” என்றான். அகத்தியர் கட்டை விரல் அளவுதான் இருப்பார் என்று சொல்வார்கள்.

சிவபெருமான் அகத்தியரைப் பார்த்து, "நீ போய்த் தென் நாட்டில் பொதிய மலையில் இருப்பாயாக” என்றான். அகத்தியர் அதைக் கேட்டு, "எம்பெருமானே, தங்களுடைய திருமண முகூர்த்தத்திற்காக எல்லா இடங்களிலிருந்தும் பலர் இங்கே வந்திருக் கிறார்கள். நான் எப்போதும் இங்கே திருவடித் தொண்டு செய்து கொண்டு கிடப்பவன். என்னை அனுப்புவதற்கும் இந்த முகூர்த்தத்தையே பார்த்தீர்களா? இந்தக் காட்சியைக் காணாமல் போகச் சொல்கிறீர்களே!" என்று வருத்தத்துடன் சொன்னார்.

"உலகத்தவர்கள் ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருப்பார்கள். நான் அத்தகையவன் அல்லன். நீ பொதிய மலைக்குப் போய் இரு. எனக்கு இங்கே திருமணம் நடக்கின்ற காட்சியை, அதே சமயத்தில் உனக்கு அங்கே காட்டுகிறேன். கூட்டம் இல்லாமல் தனியாக அந்தக் காட்சியைக் கண்டு இன்புறலாம்" என்று இறைவன் அருளினான்.

அடுத்தபடி அகத்திய முனிவர், "அதற்கு மேலே மற்றொரு குறையுண்டு" என்றார். “என்ன குறை?" என்று இறைவன் கேட்டான். “எனக்குத் தமிழ் தெரியாதே! போகிற இடம் தமிழ் வழங்கும் இடமாயிற்றே!” என்று முனிவர் சொல்ல, மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறைவன் தமிழைச் சொல்லிக் கொடுத்தான். சொல்லிக் கொடுத்தவன் மிக மிகப் பெரிய தமிழாசிரியன். கற்றுக் கொண்டவரும் மிகச் சிறந்த முதல் மாணாக்கர்; அந்தக் காலத்துக் கற்பூரம் போலத் திடீரென்று பற்றிக் கொள்ளும் அறிவுச் சிறப்பு உடையவர். சுடரால் கொளுத்துவதற்கு முன்னால் திடீரென்று பிடிக்கும் கற் பூரம் போல் அவருடைய அறிவு இருந்தது. இந்தக் காலத்துக் கற்பூரம் அப்படி இல்லை. இந்தக் காலத்திலுள்ள சில மாணவர்களுக்கு இந்தக் காலத்துக் கற்பூரத்தை உவமை சொல்லலாம்.

அகத்தியர் உடனே புறப்பட்டுப் பொதிய மலைக்கு வந்தார். பூமி சமனாயிற்று. கல்யாணக் காட்சி அவருக்குக் கிடைத்தது. கல்யாணம் எவ்வளவு நாள் நடந்திருக்கும்? நம்முடைய நாட்டில் முன் காலத்தில் ஐந்து நாட்கள் திருமணம் நடக்கும். சிவபெருமானுக்கு, அதிகமாகப் போனால் ஐம்பது நாள்கள் நடந்திருக்கலாம். இறைவன் திருமணக் கோலத்தில் எல்லோரும் இமயமலை வந்தக் காரணத்தினால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்து போயிற்று; அதைச் சமனாக்கவே அகத்தியர் தெற்கே வந்தார். திருமணம் ஆனவுடன் மீண்டும் அங்கே போக வேண்டும் அல்லவா? 'எப்போது திருமணம் நிறைவேறும்? நாம் எப்போது இறைவனிடம் போவோம்?' என்று ஆசையோடு இருந்தவர் அல்லவா? போனாரா?

அவர் போகவில்லை. காரணம் என்ன? 'அங்கேயும் சிவ பெருமான் இருக்கிறார். இங்கேயும் இருக்கிறார். அங்கே வாழ முடியாது; பனிக்கட்டி நிரம்பி இருக்கிறது. இங்கேயோ நல்ல தமிழ் இருக்கிறது. நல்ல அருவி இருக்கிறது. சந்தனமும், தென்றலும் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சிவபெருமானை இங்கே தரிசிக்கலாம். இப்படி எல்லா விதமான நன்மைகளும் இருக்கும் இடத்தை விட்டு எதற்காக அங்கே போக வேண்டும்?’ என்று எண்ணி அவர் அங்கேயே தங்கி விட்டார். இந்தச் செய்தியைப் பழைய திருவிளையாடல் புராணத்தில் பெரும் பற்றப் புலியூர் நம்பி பாடுகிறார்.

"ஆவியந் தென்றல் வெற்பின்
கத்தியன் விரும்பும் தென்பால்
நாவலந் தீவம் போற்றி."

(ஆவியந் தென்றல் வெற்பு - வாவிகளையும் தென்றலையும் உடைய பொதிகை மலை.)

என்று சொல்கிறார். தென்பால் நாவலந் தீவு என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். அதைத்தான் இப்போது தென்னிந்தியா என்று சொல் கிறோம்.

அகத்தியர் இங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்தார். அப்போது மற்றோர் எண்ணம் வந்தது. சில காலம் தங்கி விட்டுப் போவதற்கு அவர் ஓரளவு தமிழ் கற்று வந்தார். இப்போதோ இங்கேயே நிலைத்து விடலாம் என்று எண்ணினார். இங்கேயே தங்கிவிட வேண்டுமென்றால் தமிழறிவு நன்றாக இருக்க வேண்டும். சிவபெருமானைக் கேட்பதா? உயர்நிலைப் பள்ளியில் பயிற்று வித்த தலைமையாசிரியரைப் போலச் சிவபெருமான் இருந்தார். அதற்கு என்ன செய்வது என்று யோசனை செய்தார். அவரை விடப் பெரிய ஆசிரியர் யாராவது இருக்கிறாரா என்று எண்ணிப் பார்த்தார் அகத்தியர்.

அந்தச் சிவபெருமானுக்கே உபதேசம் பண்ணினவன் குமரகுருபரன். ஆகவே மேல்படிப்பை முருகனிடம் கற்றுக் கொள்ளலாம் என்று அகத்தியர் நினைத்தார். முருகனோ பரமேசுவரனைப் போன்ற மேல் மட்டத்திலுள்ளவருக்குத் தான் உபதேசம் செய்வான். அவன் அகத்தியருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பானா என்ற சந்தேகம் உண்டாகும். முருகப் பெருமான் சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்ததைப் போல அகத்தியருக்கும் செய்திருக்கிறான். தமிழைக் கற்றுக் கொடுத்தான். சிவபெருமானுக்கு இரண்டு செவிகளும் குளிரும் படியாக முருகன் உபதேசம் பண்ணினான். அப்படியே அகத்தியருக்கும் இரு செவிகளும் குளிரும் படியாகத் தமிழைச் சொன்னானாம்.

“சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு
செவிகளிலும் இனியதமிழ் பகர்வோனே!"

(திருப்புகழ்)

முருகனிடம் தமிழ் பயின்றதால் அகத்தியருக்கு மிகுந்த புலமை உண்டாகி விட்டது. இலக்கண நூல் இயற்றும் வன்மை அவருக்குக் கிடைத்தது. அகத்தியம் என்ற இலக்கணத்தை அவர் இயற்றினார். பொதிய மலையில் ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்டு வாழலானார். தொல்காப்பியர் முதலியவர்கள் அவரிடம் பாடம் கேட்டார்கள். இவை யாவும் முருகன் திருவவதாரத்துக்குப் பின் நிகழ்ந்தவை.

No comments:

Post a Comment