சின்மயானந்தர் |
* பார்வையும், அறிவுக்கூர்மையும் இருக்கும் இளமைப்பருவத்தில் ஆன்மிக
நூல்களைப் படிப்பது நல்லது. வயதான காலத்தில் உடலிலும் மனதிலும் சோர்வு
ஏற்பட்ட பிறகு எதிலும் ஆர்வம் இருக்காது.
* பாலில் உறையிட்டு வைத்து மெதுவாகத் தயிராக்குவது போல, கொஞ்சம் கொஞ்சமாக
ஆன்மிக விஷயத்தை கிரகித்துக் கொள்ளவேண்டும். ஒரே சமயத்தில் அதை அறிந்து
கொள்ள முடியாது.
* மனிதன் எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் மனதை அலைக்கழித்துக் கொண்டே
இருக்கிறான். தரக்குறைவான எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு பரபரப்பு
அடைகிறான். ஆண்டவன் தந்த மனமாகிய தோட்டத்தை பண்படுத்த வேண்டிய அவன்,
செல்வமாகிய பணத்தோட்டத்தை வளர்க்கும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறான்.
* காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் அமர்ந்து தியானம் அல்லது வழிபாட்டில் ஈடுபடுங்கள். அது மனதைப் பண்படுத்தும்.
* பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், அதன் நற்பலன் எல்லை கடந்தது.
* இளமைக்காலம் உன்னதமான காலம். அதில் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள
தேவையான அவகாசம் இருக்கிறது. வாழ்வில் வளர்ச்சி பெற நினைத்தால் இளமையைச்
சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* மனதில் உறுதி நிலைத்து இருக்குமானால், எந்தச் செயலையும் விடாமுயற்சியுடன் செய்து வெற்றிச்சிகரத்தை தொட்டுவிட முடியும்.
* மனதில் தேவையற்ற கலக்கமோ, குழப்பமோ இருக்கக் கூடாது. கம்பீரமான தோற்றம்,
திட்டமிடுதல், தெளிவு, பாரபட்சம் இல்லாத கண்ணோட்டம் ஆகிய நற்குணங்கள்
மனதைச் செப்பனிட உதவும்.
* உலகத்தோடு ஒட்டி உறவாடுங்கள். உலக இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால்,
அதற்கு அடிமையாக மாறிவிடாதீர்கள். உணவு நன்றாக இருந்தாலும் அதன் சுவை
உங்களை வென்றுவிட ஒருபோதும் அனுமதிக் காதீர்கள்.
* அமைதியை நாடுகின்ற வேண்டுகோளாக பிரார்த்தனை இருக்கவேண்டும். சிறு சிறு
விஷயங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நினைப்பது கொஞ்சமும் சரியாகாது.
* ஐம்புலன்களாலும் நாம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆனால், அவை வெறும்
கருவிகளே. இவற்றை இயக்கும் எஜமானராக இருப்பது மனம். அது காட்டிய பாதையில்
புலன்கள் செல்கின்றன.
* மனிதன் மட்டுமே மனதால் புலன்களை இயக்குகிறான். விலங்குகள் புலன்களைப்
பயன்படுத்தினாலும் கூட, அறிவால் அவற்றை ஆளும் சுதந்திரத்தைப்
பெற்றிருக்கவில்லை.
* மனதுக்குப் பூட்டுப் போட்டு எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குக் கீழ்
கொண்டு வரமுடியும். அதன் மூலம் வாழ்வில் சிறந்த பலன்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment