Thursday 28 December 2023

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

No comments:

Post a Comment