Tuesday, 23 October 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 19

சின்ன வயசுல நான் ஆவலோட எதிர்பாக்குற பண்டிகை சரஸ்வதி பூஜைதான்...
பூஜைக்கு முதல்நாளே தென்னைமரம் ஏறி குருத்தோலை வெட்டி அதில் தோரணம் செய்ய ரெடியாயிடுவோம். பக்கத்து வீட்ல இருந்த ஐயர் ஒருத்தர் ஓலையில அழகா கிளி பண்ணுவார். சமையல் கட்டுல பெரிசா ஊஞ்சல் இருக்கும்.
அதை கழட்டிவிட்டு அந்த இடத்தை பூஜைக்காக அம்மா தயார் பண்ணுவாங்க. நாலு பக்கமும் கயிறு கட்டி அதில் தென்னந்தோரணம் அதில் நடுநடுவே மாவிலைத் தோரணம் கட்டுவோம்.
சந்தனம் அரைக்கிற கட்டையை வச்சு - அதுக்குன்னே ஒரு வட்டமான கல் இருக்கும் - அதில சந்தனம் அரைச்சு வீட்ல இருக்குற எல்லா கதவுகளுக்கும், மேஜை, நாற்காலி, சைக்கிள், பெட்டிகள்  விடாம  ஃ  மாதிரி பொட்டு  வச்சு அதுல குங்குமம் வைப்போம்.

அப்புறம் சாமி ரூம்ல இருக்குற நூத்துக்கணக்கான சாமிபடங்களை துடைச்சு அதிலேயும் சந்தன போட்டு வைப்போம். சரஸ்வதி படத்தை கழட்டி பூஜை நடத்துற இடத்துக்கு எடுத்துவந்து பூ அலங்காரம் பண்ணுவோம். எங்க வீட்ல இருந்தது ரவிவர்மா வரைஞ்ச படத்தோட பிரிண்ட். அதுல சரஸ்வதி பாறையில உக்காந்துருப்பாங்க. "வெள்ளைத் தாமரைப்பூவில் வீற்றிருப்பாள்" என்ற பாடலுக்கு பொருத்தமில்லாமல் பாறை மேல சாமி உக்காந்திருக்கேன்னு யோசிப்பேன். இதற்கான விளக்கம் ரொம்ப நாளைக்கப்புறம்தான் கிடைச்சது.- ." அதாவது கல்விச் செல்வம் அழியாதது..கல் போல உறுதியானது..ஆனால் பொருட்செல்வம் பூ போல வாடிவிடும் அதனால் லக்ஷ்மிக்கு செந்தாமரைப்பூ சீட்
கொடுத்தாங்க..பின்னாடி வந்தவங்க சரஸ்வதியும் எவ்வளவு நாள் கல் மேல உக்காந்திருப்பாங்கன்னு யோசிச்சு மென்மையான வெள்ளைத் தாமரை சீட் கொடுத்துட்டாங்க"

எல்லோருடைய பள்ளிக்கூட புத்தகங்கள், வீட்ல மற்றும் தொழில் சம்பந்தமான பொருட்கள் அத்தனையும் பூஜையில வைப்போம். வீட்ல வெள்ளியிலான எழுத்தாணியும், செப்பு தகடுகளும் இருக்கும். அதையும் பூஜையில  வைப்பாங்க..முக்கியமா கருப்புகலர்ல ஒரு சின்ன மரப்பெட்டி இருக்கும்..அதுல பழங்கால நாணயங்கள் இருக்கும்..அதையும் பூஜையில வைப்போம்.


அம்மாவுக்கு, அண்ணிகளுக்கு சமையல் வேலைகள் ரொம்ப அதிகமாக இருக்கும் - முக்கியமா முக்காலி கிண்டுற வேலை ரொம்ப நேரம் பிடிக்கும். ரொம்ப  டேஸ்டியான உளுந்து களி! சிவராமனுக்கு பேரே 'முக்காலி சிவராமன்!' ( அவன் சின்ன வயசுல எனக்கு எழுதின லெட்டர்ல முக்காலி சிவராமன்ன்னு கையெழுத்து போட்டு அனுப்பியிருக்கான், அந்த லெட்டர் பத்திரமா என்கிட்டே இருக்கு ). அப்புறம் வடை, சுண்டல்ன்னு பலவித நைவேத்தியம் பண்ணி படைப்பாங்க.. அப்பா அம்மாவைவிட்டு படைக்க சொல்லுவாங்க.


தீபாராதனை எடுத்தப்புறம் ஒவ்வொருத்தரா சாமிக்கி சரணம் பண்ணிக்கிரப்ப அப்பா ஒவ்வொருத்தர் கையிலேயும் பணம் கொடுத்து அந்த கருப்பு பெட்டியில வைக்க சொல்லுவாங்க..( சமீபத்துல மாயூரம் போனப்ப அண்ணன் வீட்ல பூஜை அறையில இருந்த
 அந்த கருப்பு பெட்டியை தொட்டு வணங்கிவிட்டு வந்தேன் )


அப்புறம் விஜயதசமி அன்னிக்கு மறுபடியும் சாமிக்கு படைச்சு புத்தகங்களையெல்லாம் எடுத்து படிக்கணும்..

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நிறைய பெற்றோர்கள் குழந்தைகளோட வருவாங்க..அப்பல்லாம் LKG கிளாஸ் கிடையாது.. அஞ்சு வயசானால் ஒண்ணாங்கிலாஸ் ல  சேரலாம். கனவசப்பா வாத்தியார் அன்னிக்கி கோட்டு போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வருவாரு. அரிச்சுவடி புத்தகத்தை குழந்தை கையில கொடுத்து " ஹரி நமோத்து சிந்தம்" ன்னு சொல்ல சொல்லி சிலேட்டுல  'ஆனா' போட கத்து கொடுப்பாரு. குழந்தைகளை சேர்க்கவந்தவங்க ஸ்கூல்ல இருக்குற எல்லா குழந்தைகளுக்கும் மிட்டாய், பிஸ்கட், பழங்கள்ன்னு கொடுப்பாங்க.


நவராத்திரி, கொலு இன்னும் இது தொடர்பான பல மலரும் நினைவுகள் எக்கச்சக்கமா இருக்கு..நேரம் கிடைக்கும்போது சொல்றேன்..

போன வருஷம் ஆயுத பூஜைக்கு மெயிலில் வந்த படம் கீழே -


3 comments:

  1. looks like முக்காலி is favorite of your house... you can add முக்காலி சுந்தரராமன் also to the list :)

    ReplyDelete
  2. wait a minute....isn't முக்காலி the stool??

    ReplyDelete
  3. Reading this post eating super delicious yummmmmy முக்காலி and Sundal :)

    ReplyDelete