Monday, 29 October 2012

பெண்கள் - 2


கூட்டுக் குடும்பம்... தனிக்குடித்தனம்...எது பெண்கள்சாய்ஸ்?

எம்.செந்தில்குமார்                         நன்றி  - புதிய தலைமுறை வார இதழ் 


இன்றைய குடும்பத் தலைவிகளின் எதிர்ப்பார்ப்புகள் என்ன? ஆசைகள் என்ன?


நிர்வாகவியலைக் கற்றுத்தர பல பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இருக்கின்றபோதும் ஆண்டாண்டு காலமாய்  இல்லங்களில் இலவசமாகவே நிர்வாகவியலை கற்றுத் தந்தவர்கள் நமது குடும்பத்  தலைவிகள். அஞ்சறைப்பெட்டிகளிலும், மளிகைச் சாமான் டப்பாக்களிலும் ‘சிறுவாடு’ வங்கிகளை நடத்தும் பெருமை இவர்களுக்கே உண்டு. இன்றும் அரசுக்கு நிகராக மாத பட்ஜெட் போட்டு, குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக விளங்குகிறார்கள் நம் குடும்பத்தலைவிகள். இவர்கள் குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 500 குடும்பத்தலைவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே குடும்பத் தலைவிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன  என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சர்வே துளிகள்:

  • சர்வே எடுக்கப்பட்ட இல்லத்தரசிகளில் இளங்கலை பட்டதாரிகளாக 32% பேரும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 30% பேரும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 20% பேரும் இருந்துள்ளனர்.  பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் 7% பேர் மட்டுமே. பத்தாம் வகுப்புக்குக் கீழே படித்தவர்கள் 11% பேர்.
  • திருமணம் முடிந்து வேலைக்கு செல்லாததற்குக் காரணம் குடும்பச்சூழ்நிலை என 40% பேரும், ஆர்வம் இல்லை என 34% பேரும், தன்னுடைய கணவருக்கு விருப்பம் இல்லை என 26% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • தங்களுடைய மனக்குழப்பங்களையும், கருத்துக்களையும் தங்கள் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாக 68% குடும்பத் தலைவிகளும், கணவரிடம் பகிர்ந்துகொள்வதாக 23% குடும்பத் தலைவிகளும், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதாக 9% குடும்பத் தலைவிகளும் தெரிவித்துள்ளனர்.
  • வீட்டில் கைத்தொழில் ஏதும் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை என 72% பேரும், ஆம் என 28% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • ஓய்வு நேரத்தில் தூங்குவதாக 40% பேரும், தொலைக்காட்சி பார்ப்பதாக 36% பேரும், புத்தகங்கள் படிப்பதாக 6% பேரும், ஓய்வு நேரமே கிடைப்பதில்லை என்று 18%பேரும் தெரிவித்துள்ளனர்.
  • தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என 72% பெண்களும், உண்டு என 28% பெண்களும் கருத்து கூறியுள்ளனர்.
  • வாரப் பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் உள்ளதா  என்ற கேள்விக்கு ஆம் என 67% இல்லத்தரசிகளும், இல்லை என 33% இல்லத்தரசிகளும் பதிலளித்துள்ளனர்.
  • 61% குடும்பப் பெண்கள் தங்களுடைய கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றனர். அதாவது மேற்கொண்டு படிக்க விரும்புகின்றனர். 39% குடும்பப் பெண்களுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை இல்லை.
  • தனிக்குடித்தனம் நடத்தவே 72% பெண்கள் ஆசைப் படுகின்றனர். 28% பெண்கள் மட்டுமே கூட்டுக் குடும்பத்தை விரும்புகின்றனர்.
  • மாதந்தோறும் குடும்ப வரவு - செலவுக் கணக்குகளை எழுதி வைப்பதாக 56% பெண்களும், எழுதி வைப்பதில்லை என 44% பெண்களும் தெரிவித்துள்ளனர்.
  • உங்கள் கோபத்தை யாரிடம் அதிகம் காட்டுவீர்கள் என்ற கேள்விக்கு குழந்தைகள் மீது என 50% பெண்களும், கணவர் மீது என 35% பேரும், மனதுக்குள்ளேயே புழுங்கிவிடுவதாக 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • தினந்தோறும் சிறு உடற்பயிற்சிகள், யோகா போன்றவை செய்வதுண்டா என்ற கேள்விக்கு, இல்லை என 91% குடும்பப் பெண்கள் தெரிவித்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும் குடும்பப் பெண்கள் 9% மட்டுமே.
  • மின்சாரத்தைச் சிக்கனமாக செலவழிப்பது குறித்த விழிப்புணர்வு 92% குடும்பத்தலைவிகளுக்கு இல்லை. 8% பெண்கள்மட்டுமே இது குறித்த விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்.
  • மின்சாரம் இல்லாதபோது எப்படி சமையல் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு மின்சாரம் இருக்கும்போதே தேவையானவற்றை தயார் செய்து விடுவதாக 72% குடும்பத் தலைவிகள் பதிலளித்துள்ளனர். 20% குடும்பத்தலைவிகள் மின்சாரம் வரும்வரை காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அம்மி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் 8% குடும்பத்தலைவிகள் மட்டுமே.

ஆய்வும், தீர்வுகளும்:

  • தற்போதைய இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் கல்வி கற்றவர்களாக இருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி. 61% பெண்கள் பட்ட மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் குடும்பச்சூழ்நிலை என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கற்களாக உள்ளது. கணவருக்கு   விருப்பம்   இல்லை  என க்   குறிப்பிட்ட அளவு இல்லத்தரசிகள்கூறியிருப்பது, இன்னும் பெண்கள் மாறவில்லையோ என யோசிக்கவைக்கிறது. கல்வி என்பது என்றும் அழியாச் செல்வம். குடும்ப உறுப்பினர்களுக்குத் தெளிவாக புரிய வைத்தால் எதுவும் சாத்தியம்.
  • அதேபோல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் குறைவாகவே உள்ளனர் என்ற தகவல் பெண்கள் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
  • தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் பெண்களிடம் இல்லை என்பது வருத்தமூட்டும் செய்தி. பொது அறிவை வளர்த்துக் கொள்ளாமல் வீடே கதி எனக் கிடக்கும் குடும்பத் தலைவிகள் அறியாமையின் பிறப்பிடமாக மாறி விடுகின்றனர். படிப்பறிவு இருந்தும் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் பெண்களிடையே இல்லாதது அவலம்.
  • வார இதழ்கள் படிக்கும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல் மூலம் குடும்பத் தலைவிகளிடம் வாசிக்கும் பழக்கம் உள்ளது என்பது நமக்குத் தெரிய வருகிறது. ஆனால், செய்தித்தாள்கள் ஏனோ அவர்களுக்கு கசக்கின்றது. மேலும் திரைப்படங்கள், சீரியல் போன்றவற்றிற்கு அதிகமான நேரத்தை இல்லத்தரசிகள் ஒதுக்குகின்றனர். இவற்றைப் பார்க்கும்போது, இல்லத்தரசிகளுக்கு அதிக ஓய்வு நேரம் இருப்பது புலனாகிறது. எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை தூக்கம், சினிமா எனப் பொழுதுபோக்காமல் எளிதான கைத்தொழில், மேற்படிப்பு போன்றவற்றிற்கு குடும்பத் தலைவிகள் பயன்படுத்தலாம். தனிக்குடித்தனம் ஆசை இன்னும் நம் பெண்களை விட்டு அகலவில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்ததால் ஏற்படும் பாதிப்புகளை ‘முதியோர் இல்லங்கள்’ என்ற பெயரில் இன்றும் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்தான், பெண்களின் உண்மையான நிர்வாகத்திறன் வெளிப்படும். தாத்தா, பாட்டி போன்ற உறவுகளை இழந்துவரும் இன்றைய தலைமுறைக்கு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வைக்க கூட்டுக் குடும்பமே சரியான வழி.
  • பாதி குடும்பத் தலைவிகள் வரவு - செலவுகளை திட்டமிடுவதில்லை. வரவு செலவுகளை திட்டமிடுதல் என்பது ஒரு குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் முக்கியமான ஓர் அம்சம். ஒரு முறை மாத பட்ஜெட் போட்டுப்பாருங்கள். வீண் செலவுகள் எவை, முக்கியத் தேவைகள் எவை என்பது உங்களுக்கே புரியும்.
  • குழந்தைகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதாக பெரும்பாலான குடும்பத் தலைவிகள் கூறியுள்ளது அறியாமை. கண்டிப்பு என்ற பெயரில்,பல பெற்றோர்கள் தங்கள் கோபத்தை குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதால்தான் மனதளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கோபத்தின் வடிகாலாக குழந்தைகளை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.
  • உடற்பயிற்சி செய்யும் குடும்பத் தலைவிகள் மிக மிகக் குறைவு என்பது அதிர்ச்சி தரக்கூடிய தகவல். ஓடி, ஆடி வேலை செய்த அந்தக் காலப் பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது தேவைப்படவில்லை. அம்மிக்கல்லை படத்தில் கூட பார்த்திராத நமக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். கண்டிப்பாக குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது ஒரு சின்னத்திரையில் ஒரு சீரியலின் ஒரு எபிசோட் நேரமே.

No comments:

Post a Comment