Tuesday, 6 November 2012

நமக்கு நாமே மின்சாரம்


வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக்கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும்  (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .


கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.


நன்றி  -  உண்மை 








நன்றி  - தினமணி 


1 comment: