Thursday 16 May 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 6

தெய்வம்  

" என் இனிய மாணவச் செல்வங்களே! உங்களில் பெரும்பாலானோர்கள் தினமும் சாமி கும்பிடுவதாகச் சொன்னீர்கள். நீங்கள் வணங்கும் சாமிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் " என அம்மா கேட்க 

" நான் அஷ்ட லக்ஷ்மிகளை வணங்குகிறேன். எனக்கு எல்லா வகையான செல்வங்களும் வேண்டும் " என ஒரு மாணவி சொல்ல இன்னொருத்தி 
" எனக்கு திருப்பதி பெருமாள்தான் இஷ்ட தெய்வம். அவரை வணங்கினால் எல்லாமே நமக்கு கிடைக்கும்." என்கிறாள். 

இப்படி பலரும் பல தெய்வங்களைப் பற்றி, அவர்கள் சார்ந்த மத நம்பிக்கைகளை ஒட்டி நிறைய சொல்கின்றார்கள். 

"அப்படியெனில் இவ்வளவு தெய்வங்கள் இருக்கின்றனவா ?" என அம்மா கேட்க 

" இல்லையில்லை. தெய்வம் ஒன்றுதான். நம் வசதிக்காக பல   பெயர்களில், உருவங்களில் வழிபடுகின்றோம் " என்கிறாள்  மாணவி.

"  நன்கு சொன்னாய். உங்கள் பள்ளியில் பாடப்படும் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான -

ஈஸ்வர் அல்லா தேரே நாம் 
சப்கோ சன்மதி தே பகவான்  

பாடலின் அர்த்தமும் இதுதான். 

கடவுள் ஒன்றுதான். கடவுள் தன்மையை விளக்க பல ஆயிரம் பெயர்களை ஞானிகள் வைத்தனர்.  இதைத்தான் நம் பாரதியாரும் 

'நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே' 


என தெளிவு படுத்துகின்றார் 

தெய்வத்தின் தன்மை கூறும் ஒவ்வொரு பெயரையும் தனித்தனி தெய்வமாக வழிபட்டு விருப்பு, வெறுப்புகளால் அறியாமை இருளில் அவதி படுகின்றனர் பெரும்பாலான மக்கள். 

'தெய்வம் பலப்பல சொல்லிப் 
பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் 
உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும் 
ஓர் பொருளானது தெய்வம்'  என்ற பாரதியின் கருத்துகளை  
எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். " என்கிறார்கள் அம்மா.

" அந்த ஒரே தெய்வம் எது?" என மாணவிகள் கேட்க 

" அழகாகக் கேட்டாய். உலகில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கேள்வியைக் கேட்டு தெளிவு பெற்றால் இன்று மனித குலத்தில் உள்ள  அத்துணை குழப்பங்களும், துன்பங்களும் நீங்கி விடும். இதற்காக 
தெய்வநிலை பற்றி தெளிவாக உணர்ந்த அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு திட்டம் தந்தார்கள். 



அதன்படி ஆன்மீக நாட்டமுடைய, சமுதாய சேவையில் ஆர்வமுள்ள அறிஞர்கள் ஒன்று கூடி மதத்தலைவர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டவேண்டும்.  அந்த கூட்டத்தில் இரு முக்கிய வினாக்களை எழுப்பி ஆராய வேண்டும். அந்த வினாக்கள் - 
1. தெய்வம் என்பது ஒன்றா? பலவா? 
2. மனிதகுலத்திற்கு தெய்வம் ஒன்றுதான் என்றால், இன்று நாம் காணும்  பிரபஞ்சத்தில் எந்தப் பேராற்றலைத் தெய்வம் என்று எடுத்துக்கொண்டு , உணர்ந்து, தெளிந்து அறிவில் முழுமை பெறுவது?

இந்த இரண்டு கேள்விகளையும்  இந்த கூட்டத்தில் ஆராய்ந்து இதுதான் தெய்வம் என்று தெளிவாக முடிவெடுத்து இன்றுள்ள மதங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'ஒரே கடவுள், ஒரே மதம்' என்ற உலகப் பொதுவான சமுதாயத்தை உருவாக்கலாம்." என மகரிஷியின் திட்டத்தை அம்மா  சொல்கிறார்கள். 

" அந்த கூட்டம் எப்போது நடந்து நாங்கள் எப்போது தெய்வம் பற்றி தெரிந்து கொள்வது?' என மாணவிகள் அலுத்துக் கொள்கின்றனர்.

" கவலையே படாதீர்கள். இப்போதே நீங்கள் தெய்வம் பற்றி விளங்கிக்  கொள்ளலாம். தெய்வம் இருப்பது எங்கே?" என அம்மா கேட்க 

" அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்." - என ஒரு பெண் சொல்ல இன்னொரு இஸ்லாமியப் பெண்  " அல்லா எங்கும் நிறைந்தவர். அவர் இல்லாத இடமே இல்லை" என்கிறாள்.  " The Kingdom of God is within you என பைபிள் சொல்கிறது " என்கிறாள் இன்னொருத்தி.

" உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மதங்களில் பெரும்பாலானவை  கடவுளைப் பற்றி பேசுகின்றன. சில மதங்கள் கடவுள் பற்றி எதுவுமே சொல்லவில்லை. கடவுளை நம்பும் மதங்கள் பொதுவாக கடவுளைப் பற்றி என்ன சொல்கின்றன?" என அம்மா கேட்கின்றார்கள்.

மாணவிகள் சொன்ன பதில்களைத் தொகுத்து " எல்லா மதங்களும் 
1. கடவுள் எல்லாம் அறிந்தவர், 
2. கடவுள் எல்லாம் வல்லவர் மற்றும் 
3. கடவுள் என்றும் இருப்பவர் என்பதை சொல்கின்றன அல்லவா! " என 
அம்மா சொல்ல மாணவிகள் சரியென தலையாட்டுகின்றனர். 

" இப்போது நாம் எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல, என்றும் இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளப்போகின்றோம்!" என அம்மா சொல்ல 
மாணவிகளுக்கு ஆர்வம் அதிகமாகின்றது.

-  தொடரும்  

" ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி 
அலையும் அறிவிலிகாள் - பல் 
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் 
உண்டாம் எனல் கேளீரோ? "                                            - பாரதியார் 


"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே."                                                     - திருமூலர் 


No comments:

Post a Comment