மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.
ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். ”ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்” என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் தேடிப் போனார். அவர் காலில் வீழ்ந்து வணங்கி, ”ஐயா… ஜென் தத்துவத்தை எனக்கு விளக்க வேண்டும்…’ என்றார்.
‘ஜென் தத்துவம் என்றால்…’ என்று தொடங்கிய குரு, ‘நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா…’ என்றார். வந்தவருக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. எரிச்சலாகவும் இருந்தது. ‘என்ன மனிதர் இவர்…? இவரைப் போய் மிகப்பெரிய ஆள் என்கிறார்களே… அடிப்படை நாகரிகம் தெரியவில்லையே… எனக்குத் தேவை என்றால் நான் போய்க்கொள்ள மாட்டேனா… இவர் ஏன் இதைச் சொல்கிறார்… மிகப்பெரிய தத்துவ ஞானங்களைச் சொல்வார் என்று நம்பி வந்தால், படிப்பறிவு இல்லாதவரைப் போல் நடந்து கொள்கிறாரே…’ என்றெல்லாம் மனத்துக்குள் சலித்துக் கொண்டவர், வேறு வழியின்றி எழுந்து போய் விட்டு வந்தார்.
‘புரிந்ததா…?’ என்றார் குரு. ‘இதில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது…’ என்பதைப் போல அவரைப் பார்த்தார் வந்தவர். ‘அரசனோ, மிகப் பெரிய அறிஞனோ, அல்லது ஒன்றும் தெரியாத முட்டாளோ, ஊரையே விலைக்கு வாங்கும் அளவுக்குப் பணக்காரனோ, அல்லது அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவனோ, எவராக இருந்தாலும், இப்போது நீ போய் செய்துவிட்டு வந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியுமா? எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் சமமானவர்கள்.
அப்படி இருக்கையில் மனிதர்களுக்குள் வேறுபாடு என்பது எப்படி இருக்க முடியும்?
‘அது மட்டுமல்ல… நான் உன்னைச் செய்யச் சொன்னது அற்பமானதுதான். ஆனால், அது எவ்வளவு முக்கியமானது…..? உனக்கு, நீதான் போய் அந்த வேலையைச் செய்ய வேண்டும்… எனக்கு நான்தான் போக வேண்டும். அதிகாரிக்காக, அவனுடைய வேலைக்காரனையோ, பணக் காரனுக்காக ஓர் ஏழையையோ அனுப்ப முடியுமா? எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும்.’ வந்தவர் வாயடைத்துப் போய்விட்டார்.
மிக ஆழமான கருத்துக்களை, இந்தக் கதை நமக்கு விளக்கிவிடுகிறது. மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை; அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். அதற்கு மற்றவர் தடையாக இருக்கக்கூடாது. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருக்கும் சூழலைக் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது?
No comments:
Post a Comment