Tuesday, 2 December 2014

BLESSINGS ....10



தவத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது. அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். ""இறை அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. தொடர்ந்து இறை அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், உடல்நலமும், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு வாழ்த்தி கொள்ள வேண்டும். 

நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும். முதலில் தனக்குத் தானே வாழ்த்தி கொள்ள வேண்டும், பின்னர் மனைவி,குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் வாழ்த்த வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது. 


எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். ஒரு செடியைப் பார்த்துக்கூட வாழ்த்தி மகிழலாம். அவ்வாறு வாழ்த்தும் போது, அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும். அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக, அழகு மிக்கவர் களாக திகழ்வார்கள்.

தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து "வாழ்க வையகம்', "வாழ்க வளமுடன்' என வாழ்த்த வாழ்த்த, அந்த வாழ்த்து அலைகள் உலக மனித சமுதாயத்தின் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து, உலகம் முழுமைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். 


No comments:

Post a Comment