Friday 29 August 2014

குரு - சீடன்....16


பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடிவந்தனர். 

"முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும்", என்றனர். 

ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த குரு, "யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள்", என உத்தரவிட்டார். 

முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில், கிளியைக் கொன்று விட்டு குருவிடம் திரும்பினான். 

குரு அவனிடம், 'உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது," என அனுப்பி விட்டார். 

இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி, அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் குரு, "நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள்", என்று திருப்பி அனுப்பினார்.  

மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். " எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால், யாரும் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால், இதைக் கொல்ல முடியாது", என்று சொல்லி குருவிடம் கிளியை ஒப்படைத்தான். 

அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின், தன் யோகசக்தியால் மூன்று கிளிகளையும் வரவழைத்து அவர்களின் சுயரூபத்திற்கு மாற்றினார். 

கந்தவர்களாக மாறிய கிளிகள், குருவை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.

No comments:

Post a Comment