Thursday, 7 November 2024

மழை அறிகுறி

நூல் : முக்கூடற் பள்ளு

சூழல் :  மழை அறிகுறிப் பாடல் (30)

(மழை வரும் நேரம், பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தமாகப் பாடும் ‘சிந்து’)

 

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளு, உழவையும் அத்தொழிலை வாழ்வாகக் கொண்டோரையும் துல்லியமாகக் காட்டுவது. அதிலும், அப்பாடல்களில் வரக்கூடிய ஓசையும் நயமும் அற்புதமானவை. திருநெல்வேலி ஜில்லாவில் சீவலப்பேரி என்று வழங்கும்  முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர்மீது பாடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே முக்கூடல்.

 

ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்றுதே குறி

மலையாள மின்னல், ஈழமின்னல்

சூழ மின்னுதே!

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்

காற்று அடிக்குதே - கேணி

நீர்ப்படு சொறித் தவளை

கூப்பிடுகுதே

சேற்று நண்டு சேற்றில் வளை

ஏற்று அடைக்குதே - மழை

தேடி ஒருகோடி வானம்

பாடி ஆடுதே!

போற்று திருமால் அழகர்க்கு

ஏற்றமாம், பண்ணைச் சேரிப்

புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்

துள்ளிக் கொள்வோமே.

               பாடியவர் : தெரியவில்லை

 

உரை ( அல்லது ) விளக்கம்

 

Ø  ஆற்றில் நாளை வெள்ளம் வரப்போகிறது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.

Ø  மலையாள நாடு (கேரள நாடு) இருக்கின்ற மேற்குத் திசையிலிருந்தும், இலங்கை நாடு (ஈழநாடு) இருக்கின்ற கிழக்ககுத் திசையிலிருந்தும் மின்னல்கள் சூழ்ந்து மின்னுகின்றன.

Ø  நேற்றும் இன்றும் காற்று பலமாகச் சுழன்று அடிக்கிறது.

Ø  கிணற்றுத் தண்ணீரில் கிடக்கும் சொறித்தவளைச் சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.

Ø  மழை வெள்ளம் வந்து நிரம்பினால் சேற்றில் வாழும் நண்டு என்ன ஆகும்? அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்றை கொண்டே தன்னுடைய வளையை (வாசலை) அடைக்கிறது.

Ø  மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடி பறவைகள் விண்ணில் மகிழ்ச்சியாகப் பாடித் திறிகின்றன.

Ø  எல்லோரும் போற்றி வழிபடுகின்ற அழகர் கோயில் திருமாலை பண்ணையில் வேலை செய்து சேரியில் (சேர்ந்து) வாழ்கின்ற பள்ளர்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேறறு ஆடிப் பாடுவோம், துள்ளி ஆடுவோமே.




No comments:

Post a Comment