Wednesday, 27 November 2024

சுஜாதா பதில்கள்

 முதலைக் கண்ணீருக்கும், அரசியல்வாதிகளக்கும் என்ன சம்பந்தம்? முதலைக் கண்ணீர் என்றால் என்ன?

வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், தாங்கள் மக்களை ஏமாற்றிச் சேகரித்த முதலை இழக்காமல் இருப்பதற்காக ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் வடிக்கும் கண்ணீர்தான் அது.

‘தள்ளாத வயது’ என்பது எது?
இளம் வயதுதான். உப்பு, சர்க்கரை, எண்ணெய் -எதையும் நீக்கித் தள்ளாமல் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முதுமை இவற்றையெல்லாம் விலக்கித் தள்ளுகிறது.

அறிவு முதிர்ச்சிக்கும், வழுக்கைக்கும் தொடர்பு உண்டா?
உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாகத் தேங்காயைப் பொறுத்தவரை வழுக்கை, அதன் முதிர்ச்சியின்மைக்கு அடையாளம்.

ஆங்கிலத்தில் ‘WAR’ என்றால் தமிழில் ‘போர்’. அதே மாதிரி ஆங்கிலத்தில் ‘POUR’ என்றால் தமிழில் ‘வார்’ (வார்த்தல்) என்றாகிறது. இதுபோல வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா?
‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரியும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள். தமிழ்ப் பனியில் தெலுங்குப் பனி செய்தால் மலையாளப் பனி வரும்.

பழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது?
வாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.

குற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது? –
மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!

சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான்:
‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?

உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது.
நற்பயன் தரக் கூடியது எது?
‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

என் கணவருக்கு டயபடிஸ் இருந்தால் எனக்கு வருமா ?
வராது. சண்டைதான் வரும். ‘டயபடிஸ் இருக்கிறது என்று சொல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு விட்டீர்களே?’
‘கல்யாணம் பண்ணிக்கிறப்ப எனக்கே தெரியாதுடி!’
‘டீ போட்டுப் பேசாதீங்க!’
‘நீ குடிக்க டீ போடு முதல்ல…’ – இப்படி….

டயபடிஸ் என்பதற்கு என்ன அர்த்தம்?
முழுப்பெயர் டயபடிஸ் மெலிட்டஸ் (diabetes mellitus). டயபடிஸ் என்பது ஒரு கிரேக்க வார்த்தை. வடிகால், நீர் நீக்கி – உடலில் நீரை சைபன் போல் வடித்து விடுகிறதே… அதனால்!

மெலிட்டஸ் என்றால்?
தேன்! மொரார்ஜி தேசாய்க்கு முன்பேயே, 1684-லேயே வில்லிஸ் என்கிற இங்கிலீஷ்காரர் டயபடிஸ்காரரின் மூத்திரத்தை நாக்கில் தொட்டுப் பார்த்துத் தேனாக இனிப்பதைக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார். ‘மூத்திரப் பேய்‘ என்கிற பெயரும் இட்டார் – இது வந்தவர் நிறைய மூத்திரம் போவதால்.

No comments:

Post a Comment