Wednesday, 27 November 2024

சுஜாதா பதில்கள்

 கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்

என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்
பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்
எப்படி?

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’.

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்
என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்
ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.
இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக
இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்)
பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி.
ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே
சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.

பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம்
தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள்
பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே
பொருந்தும். சிவனுக்கு எப்படி?

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள
கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?
உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத்
தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள்
நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

No comments:

Post a Comment