Saturday, 17 January 2026

தியானம்

ஒருவர் தனியாக ஒரு இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறாரா?

என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

நமக்கு தெரிந்த வரைக்கும் தூக்கம் என்றால் தலை அடிக்கடி சாயும்.

பிறகு நிமிரும்.

தியானம் என்றால் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கும்.

தூக்கத்திற்கும் தியானத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

ஒரு முட்டாள் தூங்கப் போனால் முட்டாளாகவே திரும்பி வருகிறான். அதே முட்டாள் தியானம் பண்ண போனால் அவன் ஞானியாக திரும்பி வருகிறான்.

அது இருக்கட்டும் ஞானிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

நாம் ஒரு அழகான ரோஜா பூவை பார்க்கிறோம்.

எவ்வளவு அழகாக இருக்கிறது என்று வியக்கிறோம்.

ஒரு ஞானி அதை ரோஜா பூவை பார்க்கிறார் அவரும் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நினைக்கிறார்.

உலகப் பொருள்களை நாம் எப்படி ஐம்புலன்கள் மூலமாக உணர்வோமோ அப்படித்தான் ஞானிகளும் உணர்வார்கள்.

அதில் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

அல்வா சாப்பிடுகிறோம் அது நமக்கு மட்டும்தான் இனிக்குமா? ஞானிகளுக்கெல்லாம் என்ன கசக்குமா?

அப்படி இல்லை.

அதில் வித்தியாசம் இல்லை.

அப்புறம் ஞானிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

அந்த வேறுபாடு எந்தக் கட்டத்தில் ஆரம்பமாகிறது என்று தெரியுமா?

இப்போது மறுபடியும் அந்த ரோஜாப்பூவிடம் செல்வோம்.

ஞானி அதைப் பார்க்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறது என்று நினைக்கிறார்.

அதன்பிறகு அவர் அதை நினைப்பதில்லை.

வேறு வேலையைப் பார்க்க போய் விடுவார் அல்லது இயற்கையின் ஆற்றலை பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுவார். அவ்வளவுதான்.

ஆனால் நாம் அப்படிச் செய்ய மாட்டோம்.

நாம் என்ன செய்வோம் தெரியுமா? முதலில் இந்த ரோஜாப் பூவைப் பார்ப்போம்.

எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நினைப்போம்.

அந்த அழகை ரசிப்போம்.

பின்னர் அந்த மலர் நம்மிடம் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைப்போம் .

அப்புறம் அந்த மலர் நமக்கு வேண்டுமென்று நினைப்போம்.

அதற்கு அடுத்த கட்டம் அந்த மலர் இல்லை என்றால் நம்மால் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்து விடுவோம்.

உடனே அந்த மலரை அடைவதற்கு முயற்சி செய்வோம்.

அதற்கு யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மேல் நமக்கு கோபம் வரும்.

அந்த கோபத்தின் காரணமாக நமது விவேக புத்தியை இழப்போம்.

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுவோம்.

அதன் காரணமாக ஞாபகமறதி ஏற்படும்.

அதாவது முன்பு விவேக புத்தி மழுங்கி இருந்தது.

அது இப்போது அடியோடு இல்லை என்கின்ற நிலை ஏற்படும்.

அதன் காரணமாக நமது புத்தியை இழப்போம்.

கடைசியிலே அழிவோம்.

இந்த நிலைமை நமக்கு வந்துவிடக்கூடாது.

நமக்கு கெடுதல் செய்யக் கூடிய ஆசைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

எந்த ஆசைக்கும் முதலில் வலு கிடையாது.

அதைப்பற்றி நாம் நினைக்க நினைக்கத்தான் அது மேலும் சக்தி அடைகிறது.

இளம் தளிராக இருந்தது.

பெரிய மரமாக வளர்கிறது.

ஞானிகள் இந்த அளவுக்கு அதை வளர விடுவது இல்லை.

அதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

No comments:

Post a Comment