Saturday 10 August 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 8


எல்லாம் வல்ல தெய்வம் 

"ஏன் சுத்தவெளி பிரபஞ்சமாக மாறியது?" என மாணவிகள் வினவ

" இந்த கேள்வியைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். உங்கள் சிந்தனை மிக உயர்ந்துவிட்டது. பாராட்டுக்கள்! சுத்தவெளிதான் அனைத்துமாக மாறியது என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டுவிட்டீர்கள். சுத்தவெளி ஏன், எப்படி அனைத்துமாக மாறியது என்பதை எளிமையாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் மகரிஷி அவர்கள் தந்துள்ளார்கள். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னால் மகரிஷி அவர்களின் இறைவணக்கப் பாடல் ஒன்று சொல்லுங்கள் " என அம்மா கேட்கிறார்கள்.

பல மாணவிகள் ஒன்று சேர்ந்து


"எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்

வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில்அவன்
 அவன் யார்? நீயார்? பிரிவேது?

அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி. "   

பாடலைப் பாடுகின்றார்கள்

" மிக எளிமையான இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியினையும், இவ்வளவு நேரம் நாம் பேசியதையும் இணைத்து சிந்தித்துப் பாருங்கள்." என அம்மா சொல்ல

" தெய்வம் அதுவா அல்லது அவனா? " என கேட்கிறாள் ஒரு மாணவி.

" இறைவன் என்ற சொல்லையும் ஆண்பாலில் அவனைப் பெரும்பாலும் அழைக்கப்  பழகிவிட்டதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. நாம்தான் சுயமாய் சிந்திக்கக் கற்று தெளிந்து விட்டோமே! இறைவன், தெய்வம் என்ற சொற்களெல்லாம் இனி எங்கும் நிறைந்துள்ள இறைநிலை என்பதையே குறிக்கும். வேறு சந்தேகம் இருக்கின்றதா?" என அம்மா கேட்கிறார்கள்.

" அவனின் இயக்கம் அணுவாற்றல் - இந்த வரிகளைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் " என மாணவிகள் கேட்கிறார்கள்.

" சுத்தவேளிக்கு பேராற்றலும், பேரறிவும் உள்ளது என்பதை உணர்ந்தோம். அந்த சுத்தவெளிதான் தன்னைத்தானே இறுக்கிக்கொண்டு  துகள்களாக,பரமாணுக்களாக மாறுகிறது என்பதையும் தெரிந்துகொண்டோம். சுத்தவெளியின் தன்மைகளான  பேராற்றலும், பேரறிவும் பரமாணுக்களுக்கு இருக்கும்தானே! மேலும் பரமாணுக்களின் கூட்டுதான் பஞ்சபூதங்களும், ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். இப்போது இந்த வரிகள் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்" என அம்மா சொல்ல

" நான் அவன்தான். அவன் நான்தான். எல்லாம் சுத்தவெளிதான்." - என மாணவிகள் பதில் சொல்கின்றனர். 

" சரி, சுத்தவெளிக்கு அதாவது இறைநிலைக்கு உடல் உண்டா, குடல் உண்டா?"

" சுத்தவெளியின் மிக, மிக, மிக சின்னத் தோற்றமான நமக்குத்தான், ஜீவராசிகளுக்குத்தான் உடலும், குடலும் உண்டு.  இறைநிலைக்குக் கிடையாது."

" நன்று. இறைநிலைக்கு  விருப்பு, வெறுப்பு உண்டா?"

" கிடையாது."

" இறைநிலைக்கு இன்பம், துன்பம் உண்டா?"

" இல்லை"

" இறைநிலைக்கு தேவைகள் உண்டா?"

" கிடையவே கிடையாது"

" இப்போது சொல்லுங்கள் -  எல்லா அண்டங்களையும் ஓர் ஒழுங்காற்றலுடன் இயக்கி காத்துவரும்  எல்லையற்ற இறைநிலைக்கு நாம் எதைக் கொடுக்க முடியும்? எப்படி கொடுக்க முடியும்?" - அம்மா கேட்கிறார்கள்.

மாணவிகள் சிந்திக்கின்றனர். 

" இறைநிலையின் பின்னப் பகுதிகளான ஜீவராசிகளுக்கும், நம் சக மனிதர்களுக்கும் உடல், குடல், தேவைகள் உண்டல்லவா? அவர்களுக்குத் தேவையானவற்றை நம்மால் கொடுக்க முடியும் அல்லவா?" -  அம்மா கேட்க மாணவிகள் மெளனமாக யோசிக்கின்றனர்.

" கோவில்களில் உள்ள சிலைகளில் கடவுளைக் கண்டு காணிக்கைகள் செலுத்தும் நாம் கஷ்டப்படும் மனிதர்களிடம் உறையும் இறைநிலையைக் காண மறந்துவிடுகின்றோமே! நன்கு சிந்தியுங்கள் மாணவச் செல்வங்களே! இப்போது சுத்தவெளி ஏன், எப்படி எல்லாமாக மாறியது பற்றிப் பார்க்கலாம்."

- தொடரும்  

தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்

தெய்வமிலை என்போன்
அச்சொல் விளங்கான்

தெய்வ மென்று கும்பிடுவோன்
பக்தன், அந்தத்

தெய்வத்தையறிய முயல்வோனே
யோகி,

தெய்வ நிலையுணர்ந்தவனே
தேவனாம், அத்

தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்

தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே

தெய்வத் தொண்டாற்றுபவன்
மனிதன் காணீர்


                                                                                    - வேதாத்திரி மஹரிஷி 

.

1 comment:

  1. I like this இறை வணக்கம் பாடல் very........ much, and i learnt new poem by maharishi.. Thanks again Uncle!

    ReplyDelete