Saturday 10 August 2013

WEEKEND WISDOM



"தந்தையே! எனக்கு ஞானம் பிறந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?"  கிளிமூக்கை அசைத்தபடியே சுகப்பிரம்மர் வியாசரிடம் கேட்டார்.

"சுகா! ஞானம் பிறக்க வேண்டுமானால் ஒரு குருவின் அருள்தேவை. நீ ஞானவான் ஆகிவிட்டதாக உன் குரு அறிவிக்க வேண்டும்!."

"எனக்குத் தெரிந்த குரு யாருமில்லையே! நீங்களே சொல்லுங்கள். நான் யாரை குருவாக ஏற்பது?."

"மிதிலை மன்னர் ஜனகரைப் பார். அவர் ஒப்புக்கொண்டால், உனக்கு ஞானம் பிறந்து விட்டதாக அர்த்தம். அவர் இல்லறத்திலும், அரசாங்கத்திலும் இருந்தாலும் பற்றற்றவர். கர்மயோகி."

" சரி..உடனே அவரைச் சந்திக்கிறேன்"

சுகர் மிதிலையை அடைந்து ஜனகரை வணங்கினார். 

"தாங்கள் யார்? என்ன விஷயமாக வருகிறீர்கள்?"

" பெயர் சுகர், தந்தை வேதம் வகுத்த வியாசர், நான் ஞானவானாகி விட்டேனா என்று அறிந்து கொள்ள வந்தேன்.தங்களையே குருவாக ஏற்று அதைத் தெரிந்து வரும்படி தந்தையின் கட்டளை!"

" அப்படியா? அரண்மனைக்குள் வரும் போது என்ன பார்த்தீர்கள்?"

"தூண்கள், படிக்கட்டுகள், தரைத்தளங்கள் ஆகிய சர்க்கரைத் துண்டுகளைப் பார்த்தேன். ஆங்காங்கே சர்க்கரைத் துண்டுகளாய் நிற்கும் காவலர்களைக் கண்டேன். இப்போது, ஒரு சர்க்கரைத் துண்டுடன் இன்னொரு சர்க்கரைத் துண்டாய் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்."

" சுகப்பிரம்மரே! தாங்கள் ஏற்கனவே ஞானியாகத்தான் இருக்கிறீர்கள்! நீங்கள் செல்லலாம்,"..விடை கொடுத்தார் ஜனகர். 

 இந்த உலகில்  நாம் வாழும் வீடும், கட்டிய கட்டடங்களும் ஒருநாள் சர்க்கரை போல் கரைந்து போகும். மனிதராகிய நாமும் மண்ணோடு மண்ணாய் கரைந்து போவோம். இதை யார் உணர்ந்து நடந்து கொள்கிறானோ, அவர்கள் எல்லாருமே ஞானிகள் தான்!

No comments:

Post a Comment