Monday 7 October 2013

திடீர் சுற்றுலா ...1

பசுமைக் குடில் வெள்ளரி சாகுபடி 

நேற்று ( 6-10-13 ) BHELல் என்னுடன் என் துறையில் பணியாற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்.

காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமீய சேவை திட்டத்தின்  கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முள்ளூர் வழியான்பட்டி கிராமத்திற்குச் சென்றோம்.

அங்கு நண்பர் முத்துகுமரேசனின்  பசுமைக் குடில் அல்லது பசுமை வீடு
 ( Green House Farm ) முறையில் சாகுபடி செய்யப்படும் வெள்ளரித் தோட்டத்தில் ஓர் அரைமணி நேரம் கழித்தோம்.



பத்து ஏக்கர் நிலத்தில் செய்யப்படக்கூடிய வெள்ளரி சாகுபடியை இவர் அரை ஏக்கர் நிலத்தில் செய்கின்றார். நாள் ஒன்றுக்கு 800 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை  வெள்ளரிக் காய் இவர் தோட்டத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றது. வருடம் முழுக்க இங்கு வெள்ளரி சாகுபடி நடப்பது சிறப்பு.





நண்பர் எங்களுக்கு தன்  தோட்டத்தை சுற்றிக் காமித்து பசுமைக் குடில் பற்றிய விவரங்களையும், புறஊதா கதிர்களைத் ( UV radiations ) தவிர்க்கும் பாலிதீன் கூரைகளையும், சீதோஷ்ணத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கருவிகளையும் காண்பித்து எங்களுக்கு சாப்பிட வெள்ளரிக்காய்களையும், பருக லெமன் ஜூசும் தந்தார்.

அங்கு அவர் நடத்தும் தவ மையத்தில் வந்திருந்த கிராம பெண்களுக்கு மாலா சிறிது நேரம் வாழ்க்கை விளக்கம், இறைநிலை விளக்கம் தந்தாள். 

இந்த பசுமைக்குடில் விவசாயத்தில் கடும் மழை, வெய்யில், பூச்சி தாக்குதல் போன்ற தொந்தரவுகள் இல்லை. மேலும் சொட்டு நீர் பாசனத்தால் பயிர்களுக்குத் தேவையான உரம் வீணாகாமல் கிடைத்து விடுவதால் மிகவும் தரமான விளைச்சல் கிடைக்கின்றது.






பசுமைக் குடில் விவசாயம் பற்றி  தமிழகத்தில் இப்போதுதான் ஓரளவு 
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நண்பர் முத்துகுமரேசனின் முயற்சிகளுக்கு 
பாராட்டுகளும், நன்றியையும் தெரிவித்தோம்.


அங்கிருந்து நண்பர் முத்துகுமரேசனையும், அவரது துணைவியாரையும் எங்களுடன் அழைத்துக் கொண்டு 11-30 மணிக்கு ஆவுடையார்கோவில் அடைந்தோம்.

No comments:

Post a Comment