Thursday, 10 October 2013

திடீர் சுற்றுலா ...4

கல்லிலே கலைவண்ணம் கண்டான் 

கோவிலின் நுழைவாயிலிலே துவாரபாலகர்களுக்குப் பதிலாக கலைநயம் மிக்க வீரபத்திரர் சிலைகள் மூலஸ்தானத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளே சந்நிதிக்கு முன் பல மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டபத்தின் மேலே கொடுங்கை எனும் அமைப்பு ( sun shade என சொல்லலாமா)- மரத்தாலே செய்யப்பட்டது போல அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. கொடுங்கையின் உட்புறம் பார்த்தால் சரங்கள், சட்டங்கள், இவைகளைப் பிணைத்திருக்க திருகு ஆணி, நட்டு, வாஷர் என எல்லாமே கருங்கல்லில் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை செதுக்கிய கல்தச்சர்கள் திறமையை வியக்காமல் இருக்க முடியாது.

அந்த காலத்தில் கோவில் கட்டும்போது சிற்பவேலைக்காக சிற்பிகளை ஒப்பந்தம் செய்யும்போது அவர்கள் " `தாரமங்கலம் தூண்கள், திருவலஞ்சுழிப் பலகணி, திருவீழிமிழலை வவ்வால் நெத்தி மண்டபம், கிடாரன்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக " மற்றவைகளை செய்கிறோம் என்பார்களாம்.

உலகப் புகழ் பெற்ற ஆவுடையார்கோவில் கொடுங்கை போட்டோ கீழே உள்ளது.


கொடுங்கை 

கொடுங்கை உட்புறம் 



கொடுங்கை - திருகாணி, நட்டு, வாஷர் அமைப்புகள் 

இந்த கொடுங்கைகள் கருங்கற்களால் செய்யப்பட்டது என்பதை நம்பாமல் ஓர் ஆங்கிலேயன் தன்  துப்பாக்கியால் இதை சுட்டுப் பார்க்க  புல்லட் துளைத்து சென்ற துவாரம் ஒரு கொடுங்கையில் இருக்கின்றது. அந்த துவாரம் மூலம் சிற்பிகள் இந்த கொடுங்கைகளை ஒரு அங்குல கனத்திற்கு கல்லை இழைத்து செய்திருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது தமிழரின் திறமைகளை வியக்காமல் இருக்க முடியாது. 

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கொடுங்கைகளைப் பற்றி உலகுக்கு 
தெரியப் படுத்தாமல் இருக்கிறோமே  என்ற ஆதங்கமும் ஏற்படுகின்றது.

அடுத்து குதிரை சாமி சிற்பம் - சிவனே குதிரை மேல் அமர்ந்து மாணிக்கவாசகருக்காக குதிரைகளை அழைத்துவந்ததாக குறிக்கும் சிலை.


குதிரை சாமி 

குதிரையின் ஆபரணங்கள், ஓடிவந்த களைப்பு குதிரையின் மூக்கில், வாயில் தெரியும்படியாக செதுக்கிய சிற்பியின் திறன், இரும்போ என நினைக்கத்தோன்றும் வழு,வழுவென இருக்கும் சாமி கையில் இருக்கும் ஈட்டி, சாமியின் கை, கால்களில் நரம்புகள் எல்லாமே ஒரே கல்லில் செய்யப்பட்டுள்ளது - ரசிக்க கலைக்கண் வேண்டும்!

கல் வளையங்களுடன் கூடிய மேற்கூரை. எப்படி பொருத்தினார்களோ!

கல் சங்கிலிகள் கூடிய விதானம் 

நாங்கள் அங்கிருந்தது ஓர் ஒன்றரை மணி நேரம்தான் . அதில் பூஜை நடப்பதை பார்க்க முக்கால் மணி நேரம் செலவாகி விட்டது. மீதி நேரத்தில் பார்த்தது மிகவும் கொஞ்சம்.

ஆயிரம் லிங்கங்களுடன் உள்ள இரண்டு தூண்கள்,  27 நட்சத்திர உருவங்கள், பல வகையான குதிரைகள், பல்வேறு டிசைன் பார்டர்களுடன்  உள்ள தூண்கள், தூண்களில் ஆண், பெண்  சிலைகள( எல்லாமே ஒரே கல்லில் வடித்தது ) , மேல் கூரையில் அந்தகால ஓவியங்கள் என பலவற்றைப் பார்க்காமலே மதிய உணவை முடித்துக்கொண்டு மதியம் இரண்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம்.

( போட்டோக்கள் நெட்டில் சுட்டது! )

3 comments:

  1. photography not allowed in temple??
    learned a new tamil word today - கொடுங்கை :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

      சிற்பங்களின் பராமரிப்பும் போதுமான அளவு இல்லை.

      Delete
    2. sadly that's true of many places in india...
      we have so many beautiful places steeped in history and architecture but not maintained and well known

      Delete