''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம்
சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம்
சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே
தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி
சொல்கிறது.
ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால்
ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம்
இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும்
வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது
நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு
அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே
இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப்
போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று
போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு
தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல
இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம்
போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ
இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில்
இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம்
உணர்த்துகிறது.
'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம்
சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’
என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு
அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’
என்று அர்த்தம்.
நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்-
அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால்
ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று
நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து
கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’
இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'
No comments:
Post a Comment