Wednesday 12 December 2012

கடவுளை காணவேண்டும்


ஒரு ஊருலெ ஒரு சித்தர் இருந்தார். 
சூஃபி சித்தர். ஞானம் பெற்ற ஒரு சித்தர் அவர். 

 ஒருநாளு அந்த நாட்டு மன்னன் அவரை பாக்குறதுக்காக வந்தான்.

" என்ன வேணும் உனக்குன்னு"  கேட்டார். 

'நான் கடவுள பாக்கனும் அதுக்கு நீங்கதான் உதவி பண்ணனும்' அப்படீன்னான் அவன்.

 சித்தர் கொஞ்சம் யோசனை பண்ணுனார். 

'சரி, போய்ட்டு நாளைக்கு வா’ன்னாரு. 

 அதேமாதிரி மன்னன் போய்ட்டு அடுத்த நாள் வந்தான். 

'இங்கெ என்னோட ஒருவாரம் தங்கியிருக்கவேணும்' ன்னு சொன்னார்.

 'சரி’ன்னான். 
ஒரு பிச்சைப்பாத்திரத்த தூக்கி கையில கொடுத்தார். 
அவனுக்கு ஒண்ணும் புரியலே.இருந்தாலும் வாங்கிட்டான். 

வாங்கிட்டு , 'இத என்ன செய்யனும்' அப்படீன்னு கேட்டான். 

'ஒண்ணும் செய்யவாணாம், இத எடுத்துட்டு பக்கத்துல உள்ள கிராமங்களுக்கு போ, வீடு வீடா பிச்சையெடுத்துட்டு வா..அப்படி வந்த பொறவுதான் உனக்கு சாப்பாடும் ஓய்வும் கிடைக்கும்; ஒருவாரம் அப்படி செய்யி. அதுக்கப்புறம் – எட்டாவது நாளு – நாம கடவுள பத்தி யோசிக்கலாம்' அப்படீன்னாரு சித்தரு.

 இப்படி அவர் சொன்னத கேட்டதும் அரசனுக்கு அதிர்ச்சியாயிட்டது. ஒருமாதிரியா ஆயிட்டான். தன்னுடைய சொந்தநாட்டுல சொந்தக்குடிமக்கள்ட்டெ போயி பிச்சையெடுக்குறதா அப்படீன்னு யோசனை பண்ணினான். 

அதுக்கப்புறம் மெதுவா அந்த சித்தரைப் பார்த்தான். 'ஐயா, சொந்தநாட்டுலேயே பிச்சையெடுக்குறதுன்னா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, வெட்கமா இருக்கு, வேணும்னா வெளிதேசத்துலெ எங்கேயாவது போயி பிச்சையெடுக்கவா?'ன்னு கேட்டான். 

 இதுக்கு அந்த சித்தர் சம்மதிக்கலே. 

'இதோபாரு, உன்னால பிச்சையெடுக்க முடியலேன்னா பேசாம திரும்பி அரண்மனைக்கே போயிடு, அதுக்கப்புறம் கடவுளைப்பத்தியெல்லாம் பேசுறதுக்கு என்னை தேடிட்டி வரப்படாது' அப்படீன்னுட்டார். 

மன்னன் தயங்குனான். இருந்தாலும் மனசை சரிபண்ணிட்டு சம்மதிச்சான். 'சரிங்க, ஒருவாரம் இங்கே தங்குறேன். நீங்க சொல்லுறமாதிரி பக்கத்து கிராமங்களுக்கு போறேன், வீடு வீடா பிச்சையெடுக்குறேன், வர்றேன்' அப்படீன்னான். 

ஒருவாரம். தெருத்தெருவா பிச்சைபாத்திரத்தோட அலைஞ்சான். சொந்த ஊருல, சொந்த குடிமக்கள்கிட்டே பிச்சையெடுத்தான். ஏழுநாள் முடிஞ்சது. 

எட்டாவது நாளு அந்த சித்தர் மன்னனைக் கூப்புட்டார். 'இப்படிவா’ன்னார். வந்தான். 'இனிமே நீ கடவுள பத்தி எங்கிட்டே கேட்கலாம்'னார்.

' இனிமே கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்லே சுவாமி'ன்னான் இவன். 

ஒருவாரம் பிச்சையெடுத்தபிறகுதான் கடவுள காணமுடியும்டு நான் கனவுகூட காணலேன்னான். 

'அப்படீன்னா நீ பிச்சையெடுத்த காலத்துலெ என்னதான் நடந்தது? அப்படீன்னு கேட்டார்' சித்தர். சுவாமி.. 

'ஒருவாரகாலம் பிச்சையெடுத்ததுலெ என்னுடைய ஆணவம் அழிஞ்ச்சிட்டுது, அது இப்ப இருக்குற இடமே தெரியலே, இப்ப அத காணவே காணோம். பிச்சைக்காரனா இருந்தப்ப பெற்றதை மன்னனா இருக்கும்போது பெறமுடியாதுங்கறதை புரிஞ்சிக்கிட்டேன்'. அப்படீன்னான் மன்னன்.

அடக்கம் பிறந்தவுடன் தெய்வீகக் கதவுகள் திறந்துகொள்கின்றன அப்படீங்குறார் ஓஷோ. 



நம்மாள் ஒருத்தன், ஆணவம் அழியனும்கிறதுக்காக ஒரு திருவோட்டை எடுத்துக்கிட்டு தெருத்தெருவா பிச்சையெடுக்க ஆரம்பிச்சான். 

என்ன, தெய்வீகக் கதவுகள் திறந்துதா? அப்படீன்னு கேட்டார் ஒருத்தர். 

தெய்வீகக் கதவுகள் திறக்குறதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக் கதவு சாத்திக்கிட்டுதுன்னான்.

 என்னடா சொல்றேன்னார். 

இனிமே வீட்டுக்குள்ளேயே வரவேணாம், இதையே தொழிலா வச்சுக்கோ அப்படீன்னு எங்க வீட்டுலெ சொல்லிப்புட்டாங்க சார் அப்படீன்னான்’

 – தென்கச்சி கோ.சுவாமிநாதன்.





No comments:

Post a Comment