Monday 7 August 2023

மகரிஷி அவர்களுடன்............4 ( 5500th BLOG POST )



1980  ம் ஆண்டு மகரிஷி அவர்கள் திருச்சிக்கு முதன்முறை வந்தபோது திருச்சி நகரில் கிளை சங்கம் ஆரம்பித்தார்கள். அதன் பகுதியாக பெல் டவுன்ஷிப்பிலும் நிகழ்ச்சி நடத்தினார்கள். 

கிளை சங்கங்கள் எல்லாம் மனவளக்கலை மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெல் மனவளக்கலை மன்றம் 1984 ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி முறைப்படி மகரிஷி அவர்களால் துவக்கப்பட்டது.

பெல் டவுன்ஷிப் மத்திய அரசு நிறுவனத்திற்குட்பட்டதால் மன்றம் நடத்த இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் நாற்பதுக்கும் மேற்பட்ட பல அமைப்புகள் இடம் கேட்டு நிர்வாகத்தினை வற்புறுத்தியதால்  யாருக்குமே இடம் தரப்படவில்லை. 

பெரும் முயற்சிக்குப் பிறகு 1987 ம் ஆண்டு பெல் பாய்லர் பிளான்ட் நடுநிலைப் பள்ளியில் வாரந்தோறும் புதன் கிழமை மாலை 6 மணி முதல்  8 மணி வரை பயிற்சிகள்  தர ஒப்புதல் வாங்கினோம்.

மன்றத்தினைப் பற்றி விளம்பரப்படுத்த அப்போது கையேடுகள்/சர்குலர்கள் இல்லாததால் மகரிஷி அவர்களை அணுகினோம்.

பெல் மன்றம் என்றாலே மகரிஷி அவர்களுக்கு அவ்வளவு அன்பு, கருணை..! அறிஞர்கள் நடத்தும் மன்றம் என வெகுவாகப் பாராட்டுவார்கள். " நீங்களே ஒன்று தயார்  செய்யுங்கள். எல்லா மன்றங்களுக்கு பயன்படட்டும் " என எங்களுக்கு அன்பு கட்டளையிட்டார்கள். 

" நாங்கள் வாரம் ஒருநாள் மட்டும்தான் பயிற்சி தருகிறோம். இது மற்ற  மன்றங்களுக்கு பொருந்தாதே " என்று சொன்னபோது மகரிஷி அவர்கள் 
" நீங்கள் முதலில் உங்களுக்கு ஏற்றவாறு தயார் செய்யுங்கள். அதனை மற்ற மன்றங்கள் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுவார்கள். நீங்கள்தான் எதனையும் சிறப்பாக  செய்வீர்களே! " எனப் பாராட்டுடன்  அனுமதி அளித்தார்கள். நாங்களும் அப்போதைய சங்கம்/மன்ற செயல்பாடுகள் அனைத்தும் விளம்பரக் கையேட்டினில் வரும்படி எழுதி அக்கையேட்டினை மகரிஷி அவர்களின் ஒப்புதலுக்காக தபாலில் அனுப்பினோம். படித்துப்பார்த்த மகரிஷி அவர்களுக்கு மிகுந்த மன நிறைவு - " Approved " என அதில் தன் கையொப்பம் / தேதியிட்டு எங்களுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

இதனைக் கீழே காணலாம் -


இக்கையேட்டினை ஆறு பக்கங்கள் வருமாறு அச்சிட்டு முதல் பிரதியினை மகரிஷி அவர்களிடம் தந்தோம். மறுபடியும் மகரிஷி அவர்களின் பாராட்டு மழையில் நனைந்து மிகவும் உற்சாகமடைந்தோம். மகரிஷி அவர்கள் விரும்பியபடி எல்லா மன்றங்களுக்கும் இக்கையேட்டுப் பிரதி அனுப்பப்பட்டது.

இக்கையேடு ஐந்துமுறை தேவைக்கேற்ற திருத்தங்கள் செய்யப்பட்டு பெல் அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டவுடன் ஆறாவது முறையாக தேவையான விஷயங்களுடன் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டது.  இதனைக் கீழே காணலாம் -







பெல் மன்றத்தில் (தற்போது அறிவுத் திருக்கோயிலில்) இதுவரை ஒன்றரை லட்சம் அன்பர்களுக்கு இலவசமாக  உடற்பயிற்சி சொல்லித்தந்துள்ளோம். இன்றும் இது தொடர்கின்றது.
உடற்பயிற்சி நிறைவு செய்தால்தான் தீட்ஷை என்ற முறை இப்போதும் கடைபிடிக்கப்படுகின்றது( 12 நாள் அடிப்படைப் பயிற்சியில் ஓரளவு இதனைக் கடைபிடிக்கின்றோம் ).

அடுத்த பதிவினில் இன்னொரு செய்தியுடன்..

No comments:

Post a Comment