Sunday 28 January 2024

மகரிஷி அவர்களுடன்........13

மகரிஷி அவர்கள் பிப்ரவரி 1981ம் ஆண்டு திருச்சி வந்திருந்தபோது என்னைப் பற்றி, BHEL ல் நான் பார்க்கும் வேலை பற்றி, படிப்பு பற்றி நிறைய கேட்டறிந்து கொண்டார்கள். பிறகு அவர்கள் என்னிடம் " உங்களுக்கு இப்போது 27 வயதாகின்றது. திருமணம் செய்துகொள்ள ஏற்ற வயது. கூடிய சீக்கிரம் இல்லற வாழ்வில் இணைந்து குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவித்துவிட்டு கணவன் - மனைவியாக இருவரும் தொண்டு செய்ய வாருங்கள் " என அறிவுறுத்தினார்.

1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாலாவுடன் திருமணம் நடைபெற்றது. அப்போது மகரிஷி அவர்கள் அமெரிக்காவிலிருந்து வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதனை எனது  மூத்த சகோதரர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அந்த வாழ்த்துக் கடிதம் என்ற பொக்கிஷம் கிடைக்காமல் போய்விட்டது.

(மாலாவிற்கு முதலில் மனவளக்கலையில்அவ்வளவு விருப்பம் இல்லை. நான்கு ஆண்டுகள் கழித்துதான் தீட்சை பெற்றாள். இது பற்றி பிறகு...)

மகரிஷி சொன்ன பத்து ஆண்டுகளுக்கு முன்னரே  1988ம் ஆண்டு பெல் மன்ற பொறுப்பினை  ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1991ம் ஆண்டு நவம்பர் மாதம்  17ம் தேதி 200பேர்களுக்கான காயகல்ப பயிற்சி ஏற்பாடு செய்தேன். மகரிஷி விருப்பப்படி அப்போது பேராசிரியராகத் தொண்டாற்றிக்கொண்டிருந்த அ/நி N சோமசுந்தரம் / சென்னை அவர்கள் பயிற்சி நடத்தித் தர ஒப்புக்கொண்டிருந்தார்.

நவம்பர் 3ம் தேதி தினசரி செய்தித்தாளில் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் புயல், கடும் மழை இருக்குமென எச்சரித்திருந்தனர்.
உடனே மகரிஷி அவர்களுக்கு கடிதம் எழுதி நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்தியருள வேண்டினேன்.  மகரிஷி அவர்களும் உடனே வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். ( அக்கடிதம் கீழே- )

நவம்பர் 16ம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுதும் கன மழை. சென்னையிலிருந்து திருச்சி வரும் ட்ரெயின்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அ/நி சோமசுந்தரம் 17ம் தேதி காலை  மலைக்கோட்டை விரைவு வண்டியில் திருச்சி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த ட்ரைனும் கேன்சலாகி  விட்டது.  திருச்சியிலும் மிக அதிகமாக மழை பெய்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் 16ம் தேதி இரவு தவித்துக் கொண்டிருந்தேன். மகரிஷி அளித்திருந்த வாழ்த்து ஒன்றே நம்பிக்கையைத் தந்து கொண்டிருந்தது.

இரவு பத்து மணி சுமாருக்கு  வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கதவினைத் திறந்து பார்த்தால் அ/நி சோமசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அவசர வேலை காரணமாக அவர் 15ம் தேதி சேலம் சென்றுவிட்டு உடனே சென்னை திரும்புவதாக இருந்தாராம். ரெயில்கள் ரத்தான செய்தி கேட்டு பேரூந்தில் சேலத்திலிருந்து திருச்சி வந்ததாகக் கூறினார்.  

அன்று இரவு முழுதும் மழை விட்டபாடில்லை. 17ம் தேதி அதிகாலை மிக கனத்த மழை. மகரிஷி ஆசிகள் நிச்சயம் பயிற்சி நடத்த சிறப்பாக வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் பயிற்சி நடைப்ப்பெறும் இடமான கம்ம்யூனிட்டி ஹாலிற்குச் சென்றோம். ஹால் தரை முழுதும் ஈரம்.  சரியாக  8-30 மணிக்கு மழை நின்றது. சூரிய வெளிச்சம் தெரிந்தது. ஹால் தரையினை சுத்தம் செய்து துணிகள் கொண்டு உலர  வைத்து ஜமுக்காளம் விரித்தோம்.

மொத்தம் 292 பேர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். மிக சிறப்பான பயிற்சியாக அமைந்தது. 200 பேருக்கு மாத்திரம்தான் புத்தகம், சான்றிதழ் வாங்கி வைத்திருந்தோம். மீதமுள்ளோருக்கு பிறகு புத்தகம், சான்றிதழ்களை தபால் மூலம் அனுப்பி வைத்தோம்.

அ/நி சோமசுந்தரம் சேலத்திற்கே திரும்பி போவதாக கூறியதால் மாலை  5 மணிக்கு திருச்சி மத்திய பேரூந்து நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது மறுபடியும் கனத்த மழை ஆரம்பமாகி விட்டது. அவரை பேரூந்தில் ஏற்றிவிட்டு மகரிஷி அவர்களுக்கு  நன்றி சொல்லிக்கொண்டே வீடு திரும்பினேன்.

இந்த நிகழ்வு பற்றி மகரிஷி அவர்களிடம் " தங்கள் அருளாசிகளால்தான் 
 பயிற்சி நடைபெறும்போது மழை நின்று விட்டது " எனக் கூறியபோது மகரிஷி அவர்கள் " மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த விஷயமானாலும் இயற்கை ஒத்துழைக்கும். உங்களை போன்றோரின் தீவிரமான எண்ணங்களும்,  அழுத்தமான வாழ்த்துகளும்தான் காரணம் " என்றார்கள் அடக்கமாக.





 

No comments:

Post a Comment