Wednesday, 25 March 2026
Tuesday, 24 March 2026
மனைவியை இழந்த கணவனின் நிலை என்ன
இந்த கேள்விக்கு வைரமுத்துவின் வரிகள் சிறப்பான புரிதலைத் தரும்.
'எல்லாரும் ஒரு நாளைக்குச் சாகத்தான போறோம்' என்ற உலக ஆறுதல் சொல்லிவிட்டுக் கலைந்துபோனது சொந்தம். இழவு வீட்டில் 'போயிட்டு வாரேன்' என்று சொல்லக்கூடாது என்பதனால் குடையோடு சேர்த்துக் கும்பிட்டுவிட்டு நகர்ந்து கொண்டது நட்பு.
இப்போது தனிமை. வறுத்தெடுக்கும் தனிமை. அனாதைத் தனிமை. எப்போதும் இருக்கிற உலகம்தான். அவருக்கு அப்படித் தோன்றவில்லை. "பூசணிக்கா உலகம் சுண்டவத்தலாச் சுருங்கிப் போச்சோ?" மொக்கராசு, முருகாயி, உறவுகளைப்போல ஓடி விடாத ஆடுமாடுகள் இப்போதைக்கு இவ்வளவு தான் அவரது உயிருள்ள உலகம். நிலம் பெண்டாட்டி இந்த இரண்டைத் தவிர வேறு சம்பவங்களற்ற வாழ்க்கையில் கிராமத்து மனிதனின் மூளையில் நினைவு தப்புவதில்லை.
'சுக்கு அறியாத கசாயமா? அழகம்மா அறியாத சம்சாரமா?' மழை நின்றபிறகும் இலை சொட்டும் நீராய் கண்ணீரும் நினைவுகளும் சொட்டிக்கொண்டேயிருந்தன.
வெந்நீர் ஊற்றிக் குளிக்கும்போது "பாத்துக்கிட்டே பாசாங்கு பண்றவ... தேச்சுவிடறது.... எம் முதுகுதான் எனக்கு எட்டலையே" என்று கூப்பிட்டால் "ஒனக்கு முதுகு மட்டுமா எட்டல.. மூளையுந்தான் எட்டல" என்று சிரிச்சுக் கேலி செய்யும் சிறுக்கியாச்சே!
"கருமாத்தூர்க்காரன் பத்திரிக்க வச்சிருக்கான். செய்முறைக்குக் காசில்ல" என்று குட்டிபோட்ட பூனை மாதிரி அவளைச் சுற்றிச்சுற்றி வந்தால், முணுமுணுத்துக்கொண்டே அடுக்குப்பானை உருட்டி அரிசிக்குள் புதைத்துவைத்திருக்கும் அஞ்சோ பத்தோ எடுத்துச் சிரித்துக்கொண்டே நீட்டுகிற சிறுவாட்டுக்காரியாச்சே!
கார்த்திகைதீபம் முடிந்த மறுநாள் மிச்ச எண்ணெயைச் சிந்தாமச்சிதறாம சீசாவில் ஊத்தி மண்சட்டிகளையெல்லாம் கழுவிக் கவுத்து அடுத்த கார்த்திகைக்குப் பத்திரப்படுத்துற சிக்கனக்காரியாச்சே.
'நாக்கு மதமதங்குது... ஒரு வெத்தல இருந்தாக் குடுக்கறது' என்று உத்தரவு போட்டு ஒரு பிச்சைகேட்டால் இடுப்பில் இருக்கும் வெத்தலப் பையை உருவாஞ்சுருக்கு அவிழ்த்து, உள்ளே கைவிட்டுத் தடவித் தடவிப் பார்த்து, அஞ்சுரூபாய்த் தாளை ஐந்தாய் ஆறாய் மடித்துவைத்ததுபோன்ற ஒரு வெத்தலையை எடுத்து பாதிப்பாக்கு வைத்து, கட்டை விரல் நகத்தில் சுண்ணாம்பு கிள்ளி நீட்டுவாள் அதை சாவகாசமாக எடுத்து வாங்கி மேலும் கீழும் தூக்கிப்பார்த்துத் தொடையில் வைத்து உள்ளங்கையால் வெத்தலைக்கு இஸ்திரி போட்டாலும் அது வேட்டைநாய்க்காது மாதிரி வெடச்சே நிக்கும். "ஏண்டி! கொமரிவெத்தல கேட்டாக் கெழவி வெத்தல தாரவ" என்று கிண்டலடித்தால் பாக்கு மெல்லப் பல்லில்லாத கெழவனுக்குக் கொமரி வெத்தல கேக்குதா? கொமட்ல இடிப்பேன்" என்று சிணுங்கிக் கொஞ்சும் செல்ல விளையாட்டுக்காரியாச்சே!
பொழுதுவிடிஞ்சும் என்னைக்காவது பொத்திப் படுத்திருந்தா, "என்னாச்சு ஆம்பள.. என்னாச்சு" என்று பதறிப்போய் ஓடிவந்து நெற்றியில் கைவைத்துப் பார்க்கிற நேசக்காரியாயிற்றே!
ஐப்பசி கார்த்திகையில அடைமழையடிக்க, ஊதக் காத்துக்குப் பயந்து சாக்குக்குள்ள உடம்புசெலுத்தி உக்காந்திருந்தா - பனங்கல்கண்டு போட்டுச் சுடச்சுடச் சுக்குத்தண்ணி வச்சுக்குடுக்கிற வைத்தியக்காரியாச்சே!
அப்பன் ஆத்தா ஊத்துற கஞ்சி இருவது வயசு வரைக்குந்தான். அதுக்குப் பெறகு நாப்பத்தஞ்சு வருசம் ரெண்டு நேரமோ மூணுநேரமோ நித்த நித்தம் கஞ்சி கத்து ரெண்டாந் தாயாச்சே!
வந்துசேர வாகனம் ஏதும் கெடைக்காம சந்தையிலயிருந்து நடைபுடிச்சு நடுச்சாமத்துக்கு வந்து சேர்றப்ப, கண்ணசந்தாக் கதவுதொறக்க முடியாதுன்னு பச்சத்தண்ணிய மாறிமாறிக் கால்ல ஊத்தி முழிச்சுக்கிட்டேயிருந்து, செருப்புச் சத்தம் கேக்கப் படக்குன்னு கதவு தொறக்குறவளாச்சே!
"பேயத்தேவருக்கும் முருகாயிக்கும் ஒரு காலத்துல ஒரு தொடுப்பு இருந்திருக்கப்பா" என்று அவள் காதுபட நடுத்தெருவில் நாலுபேர் பேச அது உண்மையில்லை என்று நெஞ்சார நம்பிய அவள் ஊர் அம்பலக் கல்லில் ஏறிநின்று - "ஏலே பொண்டுப் பயலுகளா! எம்புருசன் வீரியக் காரன்டா... இன்னம் பத்துப் பொம்பளைகளுக்குப் பதில் சொல்லுவான்டா. ஆனாலும் சொல்றேன் - அழகம்மா மச்சம் பாத்தவன் ஆயுசுக்கும் ஒருத்தியப் பாக்க மாட்டாண்டா" என்று புயலடிச்ச உழவுகாடாய்ப் புழுதிகிளப்பிவிட்டு வந்தவளாச்சே!
அப்பன் பாட்டன் பண்ண புண்ணியம், 'அவ எனக்குப் பொண்டாட்டியா வாச்சது'. நான் பண்ண பாவம், 'எனக்கு முன்ன அவ போய்ச் சேந்தது'.
தாம்பத்தியத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான மனைவியும் பிறக்கிறார்கள். உடல் தேவை என்னும் சாம்பல் உதிர்ந்த பிறகுதான் உள்ளிருக்கும் அன்பின் கங்கு துலக்கமாகிறது.
பெற்றவர்கள் மறைந்துபோக - உடன்பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத் தேடி ஒதுங்கிக் போக - நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிப் போக- பெற்று வளர்த்த பிள்ளைகள் 'கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க' என்று கண்ணுக்குத் தெரியாத தங்களின் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்துக் கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாய் 'ஆள விடு சாமி' என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் பொது மனைவியின் மடிசாய்கிறான் கணவன்; கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.
படம் படமாய் விரியும் நினவுகளில் குடங்குடமாய் அழுது கொண்டிருந்தார் பேயத்தேவர். அடித்துப் போட்டாலும் கேட்க ஆளில்லாத அந்த அத்துவானக் காட்டில்.
"மனசும் ஒரு சுடுகாடுதான் போலிருக்கு. இல்லாட்டி இத்தன நெனவு வந்து பேயாட்டம் ஆடுமா?" என்றும் உதடு திறந்து ஒரு முறை சொல்லிக்கொண்டார்.
ஒரு விதவைக்குக் காட்டப்படும் கரிசனம் விதவனுக்கு உண்டோ? இல்லை. அதையும் நினைத்துச் சோகம் சொட்டச் சிரித்துக்கொண்டார்.
இந்த இறுதி வரிகளில் இருக்கின்றது நிதர்சனமான பதில்.
























































