Sunday, 5 July 2026

தஞ்சை பெரிய கோவில்

 


தஞ்சை பெரிய கோவில் சொல்லப்படாத உண்மைகள் என்ன?

தஞ்சை பெரிய கோவில்

UNESCO (யுனெஸ்கோ) அமைப்பும், வரலாற்று ஆய்வாளர்களும் இந்தக் கோவிலைப் பத்திச் சொல்ற சில உண்மைகளை பார்ப்போம் யுனெஸ்கோ இந்தக் கோவிலை பழைய கட்டடம்னு (Dead Monument) சொல்லல.

இது இன்னமும் உயிர் துடிப்போடு இருக்குற ஒரு "Living Temple".

1987-லேயே இதைப் பாராட்டி அங்கீகாரம் கொடுத்தவங்க, அப்புறமா கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலையும் சேர்த்து "Great Living Chola Temples"-ன்னு ஒரு பெரிய பட்டத்தையே கொடுத்திருக்காங்க.

இது நம்ம சோழர்களோட கட்டிடக்கலைக்குக் கிடைச்ச உலகளாவிய அங்கிகாரம்.

இப்போ கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, தஞ்சாவூர் சுத்துப்பட்டுல எங்கேயுமே பெரிய பாறைகளோ, கிரானைட் கற்களோ கிடையாது. ஆனா, இந்தக் கோவில் முழுக்க முழுக்க டன் கணக்கான கிரானைட் கற்களால கட்டப்பட்டிருக்கு. சுமார் 45 கிலோமீட்டர் தூரத்துல இருந்து இந்தப் பாராங்கற்களை எப்படிக் கொண்டு வந்திருப்பாங்க?

அந்த காலத்துல லாரியும் கிடையாது, கிரேன் வசதியும் கிடையாது. ஆனா, ராஜராஜ சோழனோட அசாத்திய நிர்வாகத் திறமையால, யானைகளையும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் வச்சு இந்த மகா யாகத்தையே நடத்தி முடிச்சிருக்காங்க.

இது அந்த காலத்து உலகத்துக்கே ஒரு பெரிய இன்ஜினியரிங் சவால்

அதுலயும் அந்த கோபுரத்துக்கு உச்சியில இருக்குற அந்த 8 டன் எடையுள்ள ஒற்றைக்கல் எப்படி மேலே போச்சுன்னு கேட்டா, தலை சுத்தும்.(மொத்தம் எட்டு நந்திக் கற்களை ஒன்னா சேர்த்து, அதுக்கு நடுவுல ஒரு பெரிய கல்லை வச்சு ரொம்ப நேர்த்தியா செதுக்கியிருக்காங்கன்னு தெரியுது. அந்த எட்டு கற்களையும் ஒன்னா இணைச்ச விதம் எப்படிப்பட்டதுன்னா, தூரத்துல இருந்து பாக்குறப்போ அது கண்டிப்பா ஒரே கல்லு மாதிரி தான் தெரியும், )

ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா, சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பெரிய மண் சரிவை (Ramp) உருவாக்கி, அது வழியா யானைகளை வச்சு உருட்டி இழுத்துட்டுப் போய் அங்க வச்சிருக்காங்க. அதே மாதிரி கோவில் வாசல்ல இருக்குற அந்தப் பிரம்மாண்டமான நந்தி சிலையும் 25 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது. (பிற்காலத்தில் கட்டப்பட்டது )

இதெல்லாம் பார்க்கும்போது "இது மனுஷன் கட்டுனதுதானா?"ன்னு டவுட்டே வரும்.

நிஜமான ஆச்சரியம் என்னன்னா, இந்தக் கோவில் சுவர்கள்ல இருக்குற 1000-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தான்.

இது சாமி கும்பிடுற இடமா மட்டும் இல்லாம, அந்த காலத்துல ஒரு பெரிய 'டேட்டா சென்டர்' மாதிரி இருந்திருக்கு. யார் எவ்வளவு வரி கட்டுனாங்க, கோவில்ல ஆடுறவங்க யாரு, பாடுறவங்க யாரு, நிலத்தை எப்படி அளந்தாங்கன்னு அக்குவேறா ஆணிவேறா எல்லாத்தையும் வெட்டி வச்சிருக்காங்க. இதைப் பார்த்தே சோழர்களோட பொருளாதாரத்தையும், நேர்மையான ஆட்சியையும் நாம தெரிஞ்சுக்கலாம். இந்தக் கோவிலுக்கு கல்வெட்டுகள்ல "தக்ஷிண மேரு" (தெற்கின் மேரு மலை) அப்படின்னு ஒரு கெத்தான பேர் இருக்கு.

ஆரம்பத்துல ராஜராஜன் இதுக்கு வச்ச பேரு "ராஜராஜேஸ்வரம்". காலப்போக்குலதான் இது பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில்னு அன்பா அழைக்கப்பட ஆரம்பிச்சது.

சோசியல் மீடியாவில வர்ற மாதிரி நிழல் விழாது, சக்கர வரைபடம்னு வர்ற கதைகளை விட, இந்த நிஜமான வரலாற்று உண்மைகளும், சோழர்களோட இன்ஜினியரிங் மூளையும் தான் நம்மள ஆச்சரியப்பட வைக்குது. இது வெறும் கற்களால் ஆன கட்டிடம் இல்ல , இது தமிழர்களோட அதிகாரம், அறிவு, கலாச்சாரம் அப்படின்னு எல்லாத்தையும் தாங்கி நிக்கிற ஒரு காலப் பெட்டகம்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்து, அங்கிருந்த கருவறைச் சுவர்களில் இருந்த ஓவியங்கள் எல்லாம் மங்கத் தொடங்கின.

நாயக்கர் காலத்தில் அந்தப் பழைய ஓவியங்கள் மேல் புதிய ஓவியங்களை வரைந்து மறைத்துவிட்டார்கள். இது கிட்டத்தட்ட 1930-கள் வரை யாருக்குமே தெரியாமல் இருந்தது.

​எஸ்.கே. கோவிந்தசாமி (S.K. Govindaswami): 1931-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.கே. கோவிந்தசாமி அவர்கள் கோவிலின் கருவறைப் பகுதியை ஆய்வு செய்தபோது, தற்செயலாக ஒரு சுவரோவியத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்திருப்பதைப் பார்த்தார்.

இரண்டு அடுக்குகள்: அந்த உடைந்த பகுதிக்கு அடியில் இன்னொரு அழகான ஓவியம் தெரிந்தது. மெல்ல மெல்ல ஆய்வு செய்தபோதுதான் தெரிந்தது, நாயக்கர் கால ஓவியங்களுக்கு அடியில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர் கால ஓவியங்கள் அப்படியே பத்திரமாக இருக்கின்றன என்று.

ராஜராஜனின் முகம்: அப்படி வெளிப்பட்ட ஓவியங்களில் ஒன்றுதான் உலகப்புகழ் பெற்ற "ராஜராஜ சோழன் தன் குரு கருவூர் தேவருடன் இருக்கும் ஓவியம்". நீண்ட காலமாகக் கல்வெட்டுகளில் மட்டுமே படித்து வந்த அந்த மாமன்னனின் உருவத்தை முதன்முதலில் உலகம் கண்ணால் பார்த்த தருணம் அதுதான்

பொதுவாக இந்தியக் கலை வரலாற்றில் அரசர்களின் உருவங்களை ஓவியமாக வரைவது மிகக் குறைவு. ஆனால், தன் குருவுக்குப் பின்னால் அடக்கமாக நின்று சிவனை வணங்கும் கோலத்தில் ராஜராஜன் இருக்கும் அந்த ஓவியம், அவருடைய பக்தியையும் பெருந்தன்மையையும் ஒருசேரக் காட்டுகிறது. இன்று நாம் பார்க்கும் ராஜராஜ சோழனின் சிலைகளுக்கெல்லாம் ஒரு அடிப்படை ஆதாரமாக இருப்பது இந்தச் சுவரோவியம்தான்

No comments:

Post a Comment