The world is one giant 'Hall of Sisyphus.'
ஆல்பர் காம்யுவின் சிசிபஸ் ஒரு கிரேக்கப் புராணக் கதாபாத்திரம்.
ஒரு மலை உச்சிவரை பாறையை உருட்டிச் செல்ல வேண்டும்.
உச்சியை அடைந்தவுடன் அந்தப் பாறை மீண்டும் கீழே உருண்டு விழும்.
மீண்டும் தள்ள வேண்டும். மீண்டும் விழும்.
இப்படியே முடிவில்லாத சுழற்சி.
இது ஒரு தண்டனைக் கதை மட்டுமல்ல. மனித வாழ்வின் உருவகம்.
காம்யு ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார்.
"பாறை மீண்டும் விழும் என்று சிசிபஸ்ஸுக்கே தெரியும். இருந்தும் ஏன் அவன் மீண்டும் தள்ளுகிறான்?"
அவரது பதில்:
வாழ்க்கையின் அர்த்தம், பாறை உச்சியை அடைவதில் இல்லை.அதை மீண்டும் மீண்டும் தள்ளத் தேர்ந்தெடுக்கும் மனிதனின் மனநிலையில்தான் இருக்கிறது.
ஒரு ரயில் நிலையத்தில் மூவர் சந்திக்கிறார்கள்.
ஒருவர் அலுவலகம் செல்லும் குடும்பஸ்தன்.
ஒருவர் நாடெங்கும் அலைந்து திரியும் துறவி.
மற்றொருவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் இளைஞன்.
இளைஞன் கேட்டான்:
"ஒருவருக்கு குடும்பச் சுமை.
ஒருவருக்கு மோட்சத் தேடல்.
இருவருமே தினமும் ஒரே போராட்டம்.
இதிலிருந்து தப்பிக்க முடியாதா?"
துறவி புன்னகைத்தார்.
"நீ இரண்டு மனிதர்களைப் பார்க்கிறாய்.
நான் இரண்டு சிசிபஸ்களைப் பார்க்கிறேன்."
குடும்பஸ்தன் தன் பையை இறுக்கப் பிடித்தபடி சொன்னான்:
"என் வேலை நாளை மீண்டும் தொடங்கும் என்று எனக்குத் தெரியும்.
கடன் முடிந்தாலும் புதிய செலவு வரும்.
பிரச்சினை முடிந்தாலும் வேறு பிரச்சினை வரும்.
இருந்தும் நான் மீண்டும் கிளம்புகிறேன்."
துறவி சிரித்தார்.
"என் மனமும் அப்படித்தான்.
அமைதியைத் தேடுகிறேன்.
அடுத்த நாளே அது மீண்டும் அலைபாய்கிறது.
என் பாறையும் தினமும் மீண்டும் மலையடிவாரத்திற்கே வருகிறது."
இளைஞன் அமைதியாக இருந்தான்.
துறவி கடைசியாகச் சொன்னார்:
"குடும்பஸ்தனின் பாறை; குடும்பம்.
துறவியின் பாறை; மோட்சம்.
மாணவனின் பாறை; எதிர்காலம்.
வணிகரின் பாறை; சந்தை.
கலைஞனின் பாறை; படைப்பு.
பாறை மட்டும் மாறுகிறது.
சிசிபஸ் மட்டும் மாறுவதில்லை.
அதனால்தான்...
இந்த உலகம் ஒரு மாபெரும் 'சிசிபஸ் கூடம்'.
இங்கே யாராலும் பாறையைத் தள்ளாமல் வாழ முடியாது.
ஞானம் என்பது பாறை இல்லாத வாழ்க்கையைத் தேடுவது அல்ல.
தனக்கான பாறையை அர்த்தமுள்ளதாக்கி உருட்டுவதுதான்.
No comments:
Post a Comment