என்ன காரணத்திற்காக இப்பதிவைச் சொடுக்கி உள்ளே வந்தீர்கள்?🙂
இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
முதலில் இது என்னவாக இருக்கும் என்ற ஐய்யம் எழும்?
இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்ப்பரிப்பு உங்களை இங்கே வர வைத்தது.
அதற்கான தூண்டுதலைக் கொடுத்தது உங்கள் மூளை தான். இதுதான் நம்முடைய மூளையின் உண்மையான தன்மை. புதிய/வித்தியாசமான தரவுகளை நோக்கிப் பயணிப்பது.
வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், முதலில் உங்கள் மூளையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் மொத்த உடலின் இயக்கத்திற்கான முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இங்கே அனைவருமே "படித்தால் வாழ்வில் முன்னேறி விடலாம்" என்ற ஒரு குறிப்பிட்ட வரியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் படிப்பது என்பதற்கு பதிலாக மூளைக்குத் தேவையான தரவுகளைக் கொடுப்பது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதைப் பற்றிய அடிப்படை அறிவு நமக்கு இருந்தால்தான், அதை நமக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம் எனும் அளவுக்கு நம் மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.
ஆனால் இந்த விஷயத்தை எத்தனை பேர் சரியாக அறிந்து, நம் மூளையை சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியே. நாம் அனைவருமே நாம் நினைத்துப் பார்ப்பதைவிட அளப்பரிய ஆற்றலைக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் அனைவருமே அந்நியன் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அத்திரைப்படத்தில் விக்ரமுக்கு Split personality disorder என்ற பிரச்சினையால் ஒரே உடலுக்குள் அந்நியன், அம்பி, ரெமோ என்ற மூன்று கதாபாத்திரம் வெளிப்படும். மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் வித்தியாசமாகத் தன்னை வெளிப்படுத்தும்.
இந்த Split personality disorder பற்றி இன்னும் சிறப்பாக Split எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கூறி இருப்பார்கள். ஒரே நபர் உடலில் 24 கதாபாத்திரங்கள் வந்து செல்லும். ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னவாக இருக்கிறதோ, அதற்கு ஏற்றவாறு உடலிலும் மாற்றம் ஏற்படும்.
- ஒரு பெண்ணின் கதாபாத்திரம் வரும்போது அதற்கான நளினமும்.
- ஒரு ஆறு வயது சிறுவன் வரும்போது அதற்குண்டான உடல் மொழியும்.
- பீஸ்ட் என்னும் கதாபாத்திரம் வரும்போது அதற்கேற்றவாறு மூர்க்கமான தன்மையும் வெளிப்படும்.
இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான பதிலையும் அத்திரைப்படத்தில் சிறப்பாக கூறியிருப்பார்கள்.
அனைத்திற்கும் நம்முடைய மூளை தான் காரணம். நாம் எதுபோன்ற விஷயங்களை அதில் செலுத்தி வைத்துள்ளோமோ, அதுவாகவே நாம் வாழ்கிறோம்.
நம் மூளைக்கு நாம் எதைப் பயிற்சி அளிக்கிறோமோ அதுவாகவே அது செயல்படுகிறது.
எனவே, நாம் நினைத்தால் நம்மை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நாம் உணர்வது மிக மிக அவசியம்.
நம்மால் முடியாதது என்று எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்துமே நாம் தேர்ந்தெடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment