Showing posts with label Hospitality. Show all posts
Showing posts with label Hospitality. Show all posts

Monday, 2 June 2025

விருந்தோம்பல் - நேற்றும் இன்றும்

 

விருந்தோம்பல்… நேற்றும் இன்றும்!

விருந்தோம்பல் என்பது ஒரு கலை. அது நம் நாட்டுக்கே உரியது. அது தமிழரின் ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது. விருந்தோம்பலை ஒரு அறம் என்றே நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இல்வாழ்க்கையில் இந்த அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலர் திருவள்ளுவர். நாம் ஒருவருக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை கிடைக்க வழி செய்வோமானால் நமது இல்வாழ்க்கை சிறப்பாக அமையும் என கூறுகிறார் அவர். விருந்தோம்பல் நம் நாட்டின் பண்டைக்காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருக்கிறது. ‘‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்ற குறளில் அதை விருந்தோம்பல் குறித்து தெளிவாகக் கூறி இருக்கிறார். அதாவது அனிச்சமலர் முகர்ந்து பார்த்த உடனேயே வாடிவிடுமாம். அதுபோலதான், நமது முகம் மாறி இருந்தால் விருந்தினர் நமது மனநிலை குறித்து தெரிந்து கொள்வார்கள் என்கிறார் வள்ளுவர்.
அந்தக் காலத்தில் வீடுகளில், வீட்டு வாசலில் திண்ணை வைத்து கட்டும் பழக்கம் தமிழர்களிடம் வெகுவாக இருந்தது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும், உறவினர்களையும் அடுப்பங்கரை வரையிலும் அழைத்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்கு வகை வகையாக சமைத்துக் கொடுத்து உபசரிப்பார்கள்.

விருந்தினராகவோ, உறவினராகவோ இல்லாமல் சாதாரணமாக தெரிந்தவர்களாக இருந்தால் வீட்டினுள்ளே வராண்டா வரையில் வரவழைத்து உபசரிப்பார்கள். முகம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களை விரட்டுவது கிடையாது. அவர்களையும் வரவேற்று, வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர வைத்து, தங்களது வீட்டில் சமைத்த உணவைக் கொடுத்து உபசரிப்பார்கள். இது நமது தமிழ்ச் சமூகம் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் மரபு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் திண்ணையில் கொடுப்பது பெரும்பாலும் சாத்தியப்படாது. இப்போது திண்ணை என்பது கிராமப் புறங்களில் கூட சில வீடுகளில் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் நமது விருந்தோம்பல் மரபு தொடர்ந்தபடிதான் இருக்கிறது. நாம் சில வகை உணவுகளை சமைத்து சிலரைத் தேடிப் போய்க் கொடுக்கிறோம். இப்போது வீடுகளில் சமைத்து விருந்தளிக்கா விட்டாலும் உணவகங்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் சென்று விருந்தளிக்கிறோம். சில நிகழ்ச்சிகளை முன்னிட்டும், பதவி உயர்வு, புதிய வேலை உள்ளிட்ட சமயங்களில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்கிறோம். அந்த சமயங்களில் அவரவர் வசதிக்கேற்ப ஃபைவ் ஸ்டார், த்ரீ ஸ்டார், சாதாரண நடுநிலையான ஹோட்டல்களில் பார்ட்டி எனும்பெயரில் இன்னும் நமது விருந்தோம்பலை தொடர்கிறோம்.

விருந்தினர் நமது வீட்டிற்கு வரும்போது, அவர்கள் முன்பு கணவன் – மனைவி சண்டையிட்டுக் கொள்வது, நம் பிள்ளைகளை அவர்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது, டிவி தொடர் பார்த்துக் கொண்டு ஏனோ தானோவென்று பேசுவது போன்ற அநாகரிகமான செயல்கள் புரிதல் கூடாது. விருந்தினர் நம் வீட்டில் தங்கிவிட்டுச் செல்லும் நாட்கள் வரை அக்கறை கலந்த அன்போடு கவனிக்க வேண்டும் எனவும் நமது முன்னோர் நமக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள்.இன்றைய அவசர யுகத்தில் நின்று பேசவும், நலம் விசாரிக்கவும் கூட சூழல்கள் வாய்ப்பது இல்லை. இத்தகைய காலகட்டத்தில் விருந்தோம்பல் என்பது மறந்து போன ஒரு சொல்லாகவும் மாற வாய்ப்புகள் ஏற்படுகின்றன. முற்காலத்திலோ விருந்தோம்பலுக்கு யாரும் வராத நிலைதான் கவலை அளிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் கண்ணகிக்கு இல்லறத்தின் தலையாய அறமான விருந்தோம்பும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாம். `அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடனும் இழந்த என்னை’ என்று கண்ணகி தன் மனதில் எண்ணி வருந்துவதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இது அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. இதை நாம் அனைவரும் உணர்ந்து, மறைந்து கொண்டு வரும் விருந்தோம்பலின் சிறப்பை நாம் மறந்து விடாமல் கடைபிடிப்போம். நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு விருந்தளிப்போம். நம் தமிழ் மரபின் தொடர்ச்சியாய் வாழ்ந்து காட்டுவோம்!

விருந்து

மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்கிறார் ஒளவையார் அதாவது நாம் உண்கின்ற உணவை புதிதாய் வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு இருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருமந்திரம், அகத்தியம், திருக்குறள் என பல நூல்கள் விருந்தோம்பலை பற்றி அழகாக கூறுகின்றன.

ஆனால் இன்று அடுத்தவர்களை உபசரிக்கும் பண்பு குறைந்து விட்டது. இன்றைய தொழில்நுட்ப உலகம் சமூக வலைத்தளங்கள் உறவுகளுக்கிடையிலான நெருக்கத்தை குறைத்து ஒற்றுமை இல்லாத போலியான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருப்பது வெளிப்படையான உண்மையாகும்.

விருந்தினர்

தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சமாக விருந்தோம்பல் பண்பாடு யாரை உபசரிக்க தோன்றியது என்பதனை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் விருந்தினர்கள் என்போர் யார் எனக் கூறப்படுகின்றது.

விருந்து எனும் சொல்லிற்கு புதுமை என்று பொருள். விருந்தினர் என்பது புதிதாக வந்து இருக்கக்கூடியவர்கள். அவர் தமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் விருந்தினராக மாட்டார்கள். எமக்கு யார் என்று தெரியாத புதியவர்கள் தான் விருந்தினர்கள் என்று இலக்கியங்கள் நமக்கு கூறுகின்றன.

விருந்தோம்பலும் அதிலுள்ள அறிவியலும்

தமிழர்களின் ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணியிலும் ஓர் அறிவியலுள்ளது. வரும் விருந்தினர்களுக்கு வாயில்களில் நீர் வைக்கப்பட்டிருக்கும். இதில் விருந்தினர்கள் கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே வருவார்கள். இதனால் கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

வாழை இலையில் உணவை பரிமாறுவார்கள். வாழை இலையின் குறுகிய பாகம் அமர்ந்து இருப்பவரின் இடது புறமாக வைக்கப்படும். சாதம், அதற்கான கூட்டு வகைகள் போன்றன அடிக்கடி எடுத்து உண்ணக்கூடியவை இதனால் அவை தடிப்பான பகுதியிலும் அடிக்கடி பயன்படுத்தப்படாத ஊறுகாய், உப்பு போன்றவை மற்றைய பகுதியிலும் இருக்கும்.

மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு

இன்று தமிழர் பெருமை பேசும் மரபுகள் எத்தனையோ மறக்கப்பட்டு விட்டது. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்த பண்புகளை நாம் நமது இயல்பிற்கும் நவீன வாழ்க்கை முறைக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைத்துள்ளோம்.

பசித்தவர்களுக்கு உணவளிக்கும் பண்பில்லாமல் பகட்டுக்கு உணவளிக்கும் நிலை வந்துள்ளது. பகுத்துண்டு விருந்தோம்பலை மேற்கொண்ட இனம் இன்று நெறி தவறிப்போய் கொண்டிருக்கின்றது.

சமகாலத்து பயன்பாடு

சமகாலத்து மேற்கத்திய உலகில் விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவை இன்னமும் இருக்கின்றது.

விருந்தோம்பல் சேவைத் தொழிற்துறை என்பது உணவகங்கள், சூதாட்டக்களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உட்படுத்தும். ஹாஸ்பிடல், ஹாஸ்டல் எனும் சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டவையே.

இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன.

முடிவுரை

முன்னோர்களின் வழிப்போக்கர்களை உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பினை முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்றாலும் பசியால் வருவோருக்கு அவர்களை புறக்கணிக்காமல் இன்முகத்துடன் வரவேற்று உணவளிக்க வேண்டும்.

நம் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்றைக்கும் மங்காதவை. இவற்றை நாமும் பின்பற்றி வாழ்வதே சிறப்பானதாகும்.

விருந்தோம்பல்

 

விருந்தோம்பல் அன்றும் இன்றும்

  • விருந்தோம்பல் என்பது அன்றைய காலங்களில் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது.
  • புதிதாக வரக்கூடிய நபர்கள் இரவில் தங்குவதற்காக தங்கள் வீட்டின் முன்புறம் திண்ணை அமைத்ததோடு, அதில் தலை வைக்க திட்டு போன்ற அமைப்பையும் நம் முன்னோர் அமைத்து இருந்தனர்.
  • ஆனால் இன்று வீடு கட்ட கூடிய நபர்கள் அது போன்ற அமைப்பில் கட்டுவது கிடையாது.
  • ஏனெனில் அறிமுகமில்லாத புதிய நபர்களை விருந்தினர்களாக ஏற்கும் மனப்பக்குவம் அவர்களிடத்தில் கிடையாது.
  • அதே போன்று அன்றைய காலங்களில் தங்களுடைய வீட்டு விசேஷங்களில் அவர்களுடைய பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கும் வெளியூர் விருந்தினர்களுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் முற்கால மக்கள் செய்து வந்தனர்.
  • ஆனால், இன்று இது நடைமுறையில் கிடையாது.
  • ஏனெனில் இன்று பொதுவாக விசேஷம் என்று வருகின்ற சமயத்தில் அதற்காக தனியே மண்டபம் எடுத்து அதில் நடத்துவதன் காரணமாக இது போன்ற வழிமுறைகள் தவறிவிட்டது.

விருந்தோம்பல் - திருக்குறள்

 திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் (விருந்தோம்பல் 9) படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:
1. மனைவியுடன் வீட்டில் இருந்து பொருள்களைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் தன்மையுடையதாகும்.
2. விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது, சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் அது விரும்பத்தக்கது அன்று.
3. நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக்கெடுதல் என்பது என்றுமே இல்லாத ஒன்றாகும்.
4. முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.
5. விருந்தினரைப் போற்றி உணவிட்டபின் எஞ்சியதைத் தான் உண்ணுகின்றவனுடைய நிலத்தில் விதைக்காமலேயே பயன் விளையும்.
6. வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்க்கின்றவன் வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
7. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிலானது என்று கூற முடியாது. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற தன்மை உடையதாக அமையும்.
8. விருந்தினரை மதித்து உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர் பின்னர் பொருளை வருந்திக் காத்துப் பயனை அடையாமல் போனோமே என்று வருந்தும் நிலையை அடைவர்.
9. செல்வச் செழிப்புடன் இருக்கும் காலத்தில் வறுமை என்பது விருந்தோம்பலைப் போற்றாத அறியாமையாகும் அது. அறிவில்லாதவர்களிடம் மட்டுமே காணப்படும்.
10. அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடிவிடும் விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம் மலராமல் வேறுபட்டுத் தோன்றிய உடனேயே வாடிவிடுவர்.




விருந்தோம்பல் - வாழ்வியல் பண்பு

உலகில் வேறெங்கும் காண இயலாத உயரிய வாழ்வியல் பண்பு ஒன்று தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது என்றால் அது "விருந்தோம்பல்” என்பதே ஆகும். விருந்தினர்கள் முகம் மலர்வதைக் கண்டு அகமகிழ்ந்தவர்களே தமிழர்கள் ஆவர். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படைத்திடும் அழகியப் பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அரசனாய் இருந்தாலும் சரி, வறுமை வாட்டினாலும் சரி “பகுத்துண்டு வாழ்வதே வாழ்வு” என முன்னிறுத்தியதால்தான் தமிழனின் வாழ்வியல் முறை உலகின் சிறந்த வாழ்வியலாகத் திகழ்கின்றது.

"விருந்தே தானும்புதுவது புனைந்த யாப்பின் மேற்றே" என்றுத் தொல்காப்பியம் கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தோடுண்” என்கிறார் ஒளவையார். திருக்குறளில் விருந்தோம்பலுக்கென்று ஒரு அதிகாரமே உள்ளது. இதுவே, தமிழர் வாழ்வில் விருந்தோம்பலுக்குரிய முக்கியத்தை உணர்த்துகிறது.

இல்லறத்தின் தலையாயநெறி விருந்தோம்பல் என்பதனைச் சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் எடுத்துரைக்கின்றன. விருந்தோம்பலில் உபசரிக்கும் பாங்கே முதன்மையானது. முகம் மலர்ந்து உபசரிக்கும் போது, விருந்துப்பொருள் உப்பில்லாதக் கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும் என்பதை

“ஓப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாத கூழிட்டாலும் உண்பதே அமுதமாகும்
முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின், கப்பிய
பசியினோடு கடும்பசி ஆகுமன்றோ”

என்றப் பாடலும்

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

என்றத் திருக்குறளும் விளக்குகின்றன.

உறவினர்களுக்கு உணவு முதலியனத் தந்துப் பாதுகாத்தல் சுற்றம் ஓம்பலாகும். பழந்தமிழர்களின் மரபுகளில் விருந்திட்டுச் சுற்றம் ஓம்புதல் குறிப்பிடத் தகுந்த வழக்கமாகும். மேலும், ‘காகம் கரைவதை’ விருந்தினர் வருகையைத் தெரிவிக்கும் சகுனமாகத் தமிழர்கள் கருதியுள்ளனர்.

திருவிழா நடைபெறும் நாட்களில், பெரியப் பானைகளில் உணவு தயாரித்து, சுற்றத்தாருக்கும், புதிதாக விழாப் பார்க்க வரும் விருந்தினருக்கும் பைந்நிணம் கலந்த நெய்ச்சோற்றை விருந்தாகத் தந்திருக்கின்றனர். இலக்கியம் கூறும் இந்த மரபு இன்றையத் திருவிழாக்களிலும் காணப்படுகிறது.

தங்களுக்கு என்று உணவைப் பத்திரப்படுத்தாமல் அனைவருக்கும் தந்துவிட்டு எஞ்சிய சோற்றை தலைவி விரும்பி உண்டுள்ளாள் என்பதை

“சாறு அயர்ந்தன்ன மிடா அச்சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணைஆகத் தேற்றிப் பிறங்கு மலை”

என்றப் பாடல் விளக்குகிறது. மேலும், உணவு வேண்டி வரும் விருந்தினர்கள் தடையில்லாமல் உண்டு மகிழ்ந்து சென்று வர வாயில் கதவை திறந்தே வைத்திருக்கும் வளமனைகளும், பகுத்துண்டு வாழும் இல்லறச் சிறப்பும் குறிஞ்சிப்பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நம் முன்னோர், இரவுப் பொழுதில், உணவுக்கு வழிதேடி வரும் புதியவர்கள் தடுமாறா வண்ணம் அறிவிப்புச் செய்து உணவு வழங்கியுள்ளனர் என்பதைக் குறுந்தொகைப் பாடல் பதிவுசெய்கிறது.

மேலும், அக்காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவே அறச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையில் உள்ள அறச்சாலையில் பல வகை உணவுகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டதாக ‘மதுரைக் காஞ்சி’ என்னும் நூல் எடுத்துரைக்கிறது. அதன் அடிப்படையில் இன்றும் பல இடங்களில், கோவில்களில், அன்னச் சத்திரங்கள் வைத்து உணவு வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒரு பண்பாட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல விளையாட்டுகளேப் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், விளையாட்டில் கூட விருந்தோம்பும் மரபு கூறப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்து தலைவி சிற்றில் இழைத்து விளையாடும் பொழுதில், விருந்தினனாகத் தலைவன் வரக் கேட்பதை

“தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும்,சிறுசோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக,எய்த வந்து,
‘தடமென் பணைத்தோள் மடநல்லீரே!
எல்லம் எல்லன்று அசைவு மிக உடையேன்
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?”

என்றப் பாடல் விளக்குகிறது. விருந்தோம்பும் பழக்கம் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்படுதல் இதன் மூலம் புலனாகின்றது. இன்றும் கூட, நாம் குழந்தைகளுக்கு முதன் முதலில் கற்றுக் கொடுக்கும் விளையாட்டு "கைகளைப் பிசைந்து, கீரை மற்றும் பருப்பு கடைந்து அனைவருக்கும் கொடுத்து, தானும் உண்ணுமாறு செய்யும்" பருப்புக் கடையும் விளையாட்டே ஆகும். இன்று வரையில் நமது பண்பாட்டில் விருந்தோம்பல் பண்பு நிலைத்து நிற்க, இந்த பண்பாட்டுத் தொடர்ச்சியேக் காரணமாகும். இந்த உயரியப் பண்பாட்டை நாமும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.

விருந்தோம்பல் - பொன்மொழிகள்

 


 வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர்.

- செக்

 வருகிற விருந்தினரை வரவேற்று, போகிறவரை விரைவில் வழியனுப்பு.

- போப்

 விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

- தமிழ்நாடு

 மருந்தேயாயினும் விருந்தோடு உண்.

- தமிழ்நாடு

 முதல் நாள் விருந்தாளி, மறுநாள் தொந்தரவு.

- இந்தியா



 அம்மான் வீடானாலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக்கும்.
- இந்தியா

 விருந்தென்றால், வீடு நிறையக் கூட்டம்; உபவாசமென்றால், உலகமே திரும்பிப் பார்ப்பதில்லை.

- சீனா

 விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கௌரவிக்க வேண்டும்.

- அரேபியா

 விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது. (நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்)

- ஆப்கானிஸ்தானம்

 நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன்.

- பல்கேரியா

 வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, வீட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன்

- பின்லாந்து

 விருந்தாளியின் பார்வை கூர்மையானது.

- ஐஸ்லாந்து

 முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி போய்விடவும். இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம்.

- லிதுவேனியா

 விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்முடன் தங்க விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

- ரஷ்யா

 விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.

- ஸ்பெயின்

 விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது.

- சுவீடன்

 புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம்.

- லத்தீன்

 அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி.

- சீனா

 கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம்.

- அபாகிரைஃபா




 மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும்.

- ஹாலந்து

 விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான்.

- பிரான்ஸ்

 விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது.

- பிரான்ஸ்

 மூடர்கள் விருந்து நடத்துகிறார்கள், அறிவாளிகள் அதை அனுபவிக்கிறார்கள்.

- இத்தாலி

 இன்று விருந்து, நாளை உபவாசம்.

- லத்தீன்

 பெரிய விருந்தும் சிறிது நேரம்தான்.

- யூதர்

 விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை.

- இங்கிலாந்து

 விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள்.

- இங்கிலாந்து

விருந்தோம்பல் - அன்றும் இன்றும்


 

விருந்தோம்பல் - விவேக சிந்தாமணி


 

விருந்தோம்பல் - குறள்


 

விருந்தோம்பல் - திருக்குறள்


 

விருந்தோம்பல் - குறள்


 

விருந்தோம்பல் - குறள்


 

விருந்தோம்பல் - குறள்


 

HOSPITALITY


 

HOSPITALITY MEANS....


 

HOSPITALITY IS ABOUT RELATIONSHIPS


 

HOST


 

ONE STAR.....FIVE STARS


 

SIMPLE HOSPITALITY


 

HOSPITALITY IS....