Wednesday, 7 September 2022

இரத்த சுகர்

உடலில் கணையம் என்கிற ஒரு சுரப்பி வயிற்றின் பின் பாகம் இருக்கிறது. இது ஜீரணத்துக்கு தேவையான ஒரு என்சைமையும்( Enzyme ), இரத்தத்திற்கு வரும் இன்சுலினையும் ( Insulin ) சுரக்கிறது. 

உண்ணும் உணவானது உடலுள் பல இரசாயன மாற்றங்களை அடைந்து உடலை இயக்கும் சக்திக்கும், உடற் கட்டுக்கும்  உடல்  பராமரிப்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஆதாரமாய் மாறுகிறது. இதை வளர்சிதைமாற்றம் (Metabolism) என்கிறார்கள். இந்த செயல்  எல்லோருக்கும் ஒரே மாசீனி திரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அளவாய் மாறி இருக்கிறது. உண்ணும் உணவின் ஒரு பகுதி குளுக்கோசாக மாறுகிறது. குளுக்கோசானது சுகர் வடிவத்தில் இரத்தத்தில் காணப்படுகிறது. உடலுள் குளுக்கோஸ் எரிபொருளாக இருக்கிறது. நாம்  உண்ணும் சீனி, அரிசி, கோதுமை, உருளைகிழங்கு, பழங்கள், இனிப்புகள்  போன்றவை உடலில் குளுக்கோஸாக மாறுகிறது. 

இரத்தத்தில் இந்த குளுக்கோசை, கணையம் சுரக்கும் இன்சுலினானது சுமந்து கொண்டு திசுக்களைப் போய் அடைகிறது. கணையமானது போதுமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டும். போதுமான அளவு இன்சுலினை கணையத்தால்  சுரக்க முடியாத நிலை வருவதை டயாபெடீஸ் (Diabetes)  என்கிறார்கள். இன்சுலின் சுரக்காததால் திசுக்கள் குளுகோஸ் கிடைக்காமல் சோர்வடைகின்றன. இரத்தத்தில் குளுக்கோஸ் சேர்ந்து விடுகிறது. இதனால் கண், சிறுநீரகம், கால், நரம்பு மண்டலம் போன்றவை  பாதிப்படைகிறது.

கணையத்தில் இன்சுலின் சுரப்பது நின்று விடுமானால் அல்லது மிகக் குறைவாக இருக்குமானால் அதை டைப்-1 (Type-1) டயாபெட்டீஸ் என்றும், கணையம் ஓரளவு சுரப்பதை டைப்-2 (Type-2) டயாபெட்டீஸ் என்றும் கூறுகிறார்கள். டைப்-1 க்கு இன்சுலினை ஊசி மூலம் உடலில் ஏற்றுகிறார்கள்.  டைப் -2 க்கு மாத்திரை சாப்பிட ச்சொல்லுகிறார்கள்.

இரத்தத்தில் சுகர் இருப்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்துக்  கொள்ளலாம். பொதுவாக, காலை உணவுக்கு முன் இரத்தம் மற்றும் சிறுநீரிலும், காலை உணவு முடிந்து 2 மணி நேரத்தில் திரும்பவும் இரத்தத்திலும், சிறுநீரிலும் சுகர் பரிசோதிக்கப்படுகிறது.

காலை உணவுக்கு முன் இரத்தத்தில்     70----110  க்குள்  ஆரோக்கியமானது.
காலை உணவுக்கு பின் இரத்தத்தில்       70----140  க்குள் ஆரோக்கியமானது.

எப்பொழுது பார்த்தாலும்( Random )          70--- 140  க்குள்  ஆரோக்கியமானது.

துல்லியமாக பார்க்க  A1C TEST          6.5%----7.0%  க்குள்  ஆரோக்கியமானது.

சிறு நீரில் சுகரை கலர் மாற்றத்தை வைத்து நிர்ணயிக்கிறார்கள். இரத்த பரிசோதனையின் முடிவின்படியே சிகிச்சை தருகிறார்கள்.

A1C என்கிற இரத்த பரிசோதனை, டயாபெட்டீஸ் எந்த அளவிற்கு உடலில் கட்டுப்பாடாக இருக்கிறது என்பதை நமக்கும், மருத்துவருக்கும் தெரியப்படுத்துகிறது. இந்த பரிசோதனை இரத்த சிகப்பு அணுக்களில் எவ்வளவு சுகர் படிந்திருக்கிறது என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். A1C   யின் அளவு 6,5% முதல் 7% வரைக்குள்  இருப்பது ஆரோக்கியமானது. இச்சோதனை மிகத் துல்லியமானது. இச்சோதனையை 6 மாதத்துக்கு ஒரு முறை செய்து உடற்பயிற்சி, மாத்திரை போன்றவற்றின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

எந்த அறிகுறியும் இல்லாமல், நீண்ட நாள் கண்டுபிடிக்கப்படாமல், சிலரது உடலில் அமைதியாக  டயாபெட்டீஸ்  இருக்கிறது

இனிப்பு வகை உணவுகள், குளிர்பானங்கள், பாட்டில் பழரசங்கள் உடல் எடை அதிகமாக காரணமாகும்.  அதிக உடல் எடை  உடலில் இன்சுலின் குறைவதற்கு ஒரு காரணமாகும். எல்லாச்சத்தும், எல்லோருக்கும் தேவை.
ருசியுள்ள உணவெல்லாம் ஆரோக்கியமான உணவல்ல. தோல் அல்லது தவிடுடன் கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். காய், கீரை, மீன், நட்ஸ், பயிறு  வகை உணவுகள் நல்லது.

கார்போஹைட்ரேட் வகை உணவுகளுக்குத்தான் இன்சுலின் தேவை. புரோட்டீன் மற்றும் கொழுப்பு வகை உணவுகளுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை நினைவில் கொண்டு நாம் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் டயாபெட்டீஸ் வராமல், அல்லது வந்தபின் சமாளிக்கும் வழியாக பார்த்துக்கொள்ளலாம். கெட்டகொழுப்பு,  நல்ல கொழுப்பு வகை உணவு களையும் நினைவிற்கொள்ள வேண்டும்.


சுகர் வந்தபின், தவறாமல் மருத்துவரிடம்  பரிசோதனை, உணவுப்பழக்கம், மாத்திரை, உடற்பயிற்சி, பலவீனம் பற்றி ஆலோசித்துக்கொள்ள வேண்டியது கட்டயாமாகும். மருத்துவர் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு ஆலோசனை கூறுவார். டயாபெட்டீஸ்  சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்  கலந்துகொண்டு  புதிய  மற்றும்   பல்வேறு ஆலோசனைகளை பெறலாம்.


இரத்த சுகர் வராமல் இருப்பதற்குரிய கட்டுப்பாடுகள்.

வெள்ளை அரிசி உணவுகள், மைதா உணவுகள், சீனி உணவுகள், இவைகளை எளிமையான கார்போஹைட்ரேட்உணவுகள் (Simple Carbohydrate ) என்றும்,  தோல் அல்லது தவிடுடன் கூடிய தானியங்களை, கனிகளை, அவற்றிலுள்ள  கார்போஹைட்ரேட்டை  கடின கார்போஹைட்ரேட் ( Complex Carbohydrate  ) என்றும்  கூறுகிறார்கள்.

தோலுடன் கூடிய உணவுகளில் நார்ச்சத்து இருப்பதினால் ஜீரணம் மெதுவாகவே நடக்கும். அதனால் அவற்றிலிருந்து  சுகரானது மிகவும் மெதுவாக இரத்தத்திற்கு வருகிறது. இதனால் இன்சுலின் தேவையும் குறைந்த அளவு மெதுவாகவே தேவைப்படுகிறது.

எண்ணெய்யில்  செய்த உணவுகளை மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat Food) என்றும் கூறுகிறார்கள். இது திசுக்கள் சுகரை எடுத்துக்கொள்வதை மந்தப்படுத்துகிறது.

எளிமையான கார்போஹைட்ரேட் உணவு களுக்கு நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் திசுக்கள் எரிப்பதற்கு வேர்வை சிந்தும் உடலுழைப்பும் தேவைப்படுகிறது.

மாறிய கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் அதனால் உருவாகும் செல்களால்  இரத்தத்திலுள்ள சுகர் மற்றும்  இன்சுலினை குறைந்த அளவே பயன் படுத்த முடிகிறது. இரத்தத்தில் சுகர் அதிகரிக்க மாறிய கொழுப்பு வகை உணவுகளும்(Trans Fat Food) ஒரு முக்கிய காரணமாகும்.

தேவையான அளவு இன்சுலின் சுரந்து உடல் உழைப்பு இல்லாத  போது இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சுகரும், இன்சுலினும் கொழுப்பாக மாறி தோலின் அடியில் உறைந்து உடல் எடையை  அதிகரிக்கிறது. அதிக உடல் எடை பலவித ஆரோக்கிய குறைவிற்கு காரணமாகிறது.

புரோட்டீன் வகை உணவு களை  செல்கள்  பயன் படுத்து வதற்கு இன்சுலின் தேவையில்லை. எனவே தோலுடன் கூடிய கடலை, பயறு, மற்றும் பருப்பு, காய், கீரை, நட்ஸ், சீட்ஸ்,  போன்ற வைகளை மூன்று வேளை  உணவிலும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசி, மைதா மாவு உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

சீனி மற்றும் மாறிய கொழுப்பு உணவுகள் மெல்லக்கொல்லும் விஷமாகும். அவை  மனிதன் கண்டு பிடித்த இயந்திரங்களினால் தயாரிக்கப்பட்டு பல முக்கிமான சத்துக்கள் நீக்கப்பட்டு  பயன் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் காலையில்  திறந்த வெளியில் முப்பது நிமிடம் தடையின்றி ஏதாவது ஒரு உடற்பயிற்சிசெய்வது இரத்த சுகருக்கும், கொலஸ் டிரா லுக்கும், இரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் எடைக்கும் மிகவும் நல்லது.

யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் டயாபெட்டீஸ் வரலாம் என்பதை நினைவில் கொண்டு நல்ல உணவுகளிலும், உடற்பயிற்சியிலும் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நோய்களை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதில் உறுதி கொள்ளவேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு ஒன்பது வகை ஆரோக்கியங்கள்


 1.உடல் ஆரோக்கியம்

   2.மன ஆரோக்கியம்

   3.உணர்ச்சிகள்  ஆரோக்கியம்

   4.சமுக  ஆரோக்கியம்

   5.சுற்றுப்புற  ஆரோக்கியம்

   6.நிதி  ஆரோக்கியம்

   7.தொழில்  ஆரோக்கியம்

   8.ஆன்மீக  ஆரோக்கியம்

   9.அறச்செயல் ஆரோக்கியம்

 என  ஒன்பது  வகைப்படும் .

 மனிதன் :-  உலகிலுள்ள ஜீவரசிகளுள் மனித இனம் ஒன்றினால் மட்டுமே கண்டு பிடிப்பு களையும்  மாற்றங்களையும் செய்து உலக ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அல்லது அழிக்கவும் முடியும். கடந்த நூறு  ஆண்டுகளில் விஞ்ஞானம், தொழில், நுட்பம், முaன்னேற்றம், வளர்ச்சி, என்கிற  பெயரில் நாம் மிக வேகமாக உலக  ஆரோக்கியத்தை கெடுத்து  வருகிறோம்.

புவிவெப்பமடைதல், நன்மையான  ஜீவராசிகளின்  அழிவு, ஒழுங்கற்ற வானிலை  போன்ற பல  பாதிப்புகளை கண்கூடாக  காண்கிறோம்.

 இதேபோல்  தனி மனித  வாழ்க்கையும் அவனது சமூக வாழ்க்கையும் பல திசை களில் மாறி மனிதன் மனஅழுத்தம், சமத்துவமின்மை போன்ற வற்றால் தாக்கப்பட்டு சுயநலம், அலட்சியம், தீவிரவாதம் என பாதிக்கபட்டிருகிறான்

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு மேற்கண்ட  ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

1.உடல் ஆரோக்கியம் :- ஒவ்வருவரும்  தனது  உடல்  இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை  உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும்,  நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .

2.மனஆரோக்கியம்:- தினசரி மாறி வரும் நமது சூழ்நிலைகளிலுள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டும், தனது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காக அனைத்தையும் அனுசரித்தும் வாழ்வதே மன ஆரோக்கியம்.

3..உணர்ச்சிகள் ஆரோக்கியம்:- நாம் உணர்ச்சிவயப்படும் போது வெளிபடுத்தும்  உணர்ச்சிகள் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர கெடுதல் செய்வதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே உணர்ச்சிகள் ஆரோக்கியம் .

4.சமூக ஆரோக்கியம்:- வீட்டிலுள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் அண்டைவீட்டாரிடமும், நண்பர்களிடமும் பணி இடத்திலும், மற்றும் நாம் உறவாடும் அனைவரிடமும் நாம் வைத்திருக்கும் உறவின் தரம்  சமூக ஆரோக்கியமாகும்.

5.சுற்றுப்புற ஆரோக்கியம் :-  கற்று,நீர் ,மண் மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் சுற்றுவட்டாரத்தை வளமாகவும் ,மகிழ்ச்சிதரகூடியாதகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது சுற்றுப்புற ஆரோக்கியமாகும் .

6.நிதி ஆரோக்கியம்:- பணம்  இல்லையானால் அமைதியும், மகிழ்ச்சியும்  வாழ்க்கையில் இருக்காது.சரியாக திட்ட மிடல், கடின உழைப்பு, சிக்கனம் சேமிப்பு, முதலீடு என தேவைக்கேற்ப பணத்தை பெருக்கிக் கொள்வதே
 நிதி ஆரோக்கியமாகும்

7.தொழில்  ஆரோக்கியம்:-    ஏதாவது ஒரு தொழிலில் நம்மை  ஈடுபடுதிக் கொள்கிறோம். வேலையில் நமக்குள்ள விருப்பம், நமது திறமை வேலையிடத் துள்ள நல்ல சூழ்நிலை, திருப்தியான வருமானம் மற்றும் வசதிகள் ஆகியன தொழில் ஆரோக்கியமாகும் .

8.ஆன்மீக ஆரோக்கியம்:- காற்று, நீர், மண்,கடல், வெப்பம் போன்ற சுற்றுப்புறத்தின் உரிமையை மதித்தும்,  பிற உயரினங்களின் உரிமைகளை மதித்தும் அவை மகிழ்ச்சியுடன் வாழ விருப்பம் கொண்டும் அவைகளுடன் இணக்கமாய் இருந்து இந்த ஆன்மீக நோக்கத்தை அறிந்து, ஆன்மீகப் பாதையில் வாழவேண்டும். நீதி நெறி யுடன் (ethics)நன்னடத்தையோடு (moral) நன்மதிப்புடன்( value )வாழுவதே ஆன்மீக ஆரோக்கியமாகும்
                     
9.அறச்செயல் ஆரோக்கியம்:- மனிதன் மனம் போன போக்கில் போககூடியவன். ஆணவம், சுயநலம், பொறமை, சாமர்த்தியப்பேச்சு என்பன தன்னுள் இருப்பதை  அறியாதவன். அதன் விளைவு களில் சிக்கி வாழ்க்கையை களிப்பவன். எளிமை, தூய்மை, கடமை, நியாயம் போன்ற குணங்கள்  தான்  இந்த இயற்கையையும் தன்னையையும் சிறப்பாக வாழவைக்கும்.என்பதை அலட்ச்சிய படுத்தி வாழ்பவன்.  உலகம் போற்றும்  நல்ல குணங்களை கொண்டிருப்பதே அறச்செயல் ஆரோக்கியமாகும்.


 சிறந்த உடல் நலம் பெற சரியான ஆரோக்கியத்திர்க்காக சிரமப்படவேண்டும் மேற்கூறிய பிரிவுகளில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை பாதிக்கலாம் இதனால் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்த அனைத்து பிரிவு களையும் புரிந்துகொண்டு சரியாக நடக்கும் ஒருவர் சிறந்த உடல் நலம் பெற்று சாதிப்பவராவார்.

எல்லா நேரமும் எல்லா பிரிவுகளையும்ஒருவரால் சிறப்பாககடை பிடிக்க முடியும்  என்பது உண்மையில் நடக்ககூடிய காரியமல்ல. எந்த ஒருவரும் முழு ஆரோக்கியமுடையவர் என்றோ, முழு ஆரோக்கியம் இல்லாதவர் என்றோ இருப்பதில்லை.

நல்ல ஆரோக்கியம் முதல் மரணம் வரை உள்ள இடைப்பட்ட ஒரு இடத்தில நம் ஆரோக்கியம் இருக்கிறது .

மனிதனுடைய அமைதியான வாழ்க்கைக்கு மேற்கண்ட  ஒன்பது  வகையான ஆரோக்கியங்கள் மிக முக்கியமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது .

ஆரோக்கியத்துக்குரியநடவடிக்கைகளை அதிக அளவு தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது நல்லது

நல்ல ஆரோக்கியத்தை நாடி அந்த வழிகளை கடைபிடிக்கும் குணாதிசயங்கள் நமக்கு இருக்க வேண்டும்.


நன்றி : WhatsApp செய்தி 

Sunday, 4 September 2022

SUNDAY MOTIVATION

 


ஞாயிற்றுக் கிழமை - வைரமுத்து

 

ஞாயிற்றுக்  கிழமையென்பது சக்தி.

ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசுதட்டி  வைக்கும் துப்புரவுநாள்.

பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை.

சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற  ஞாயிற்றுக் கிழமை பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை என்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம்.

மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா்.

அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள்.

ஞாயிற்றுக் கிழமை என்பது உறக்கமல்ல விழிப்பு.

பூமி விழிக்குமுன்பே புலன்கள் விழித்து விடவேண்டும்.

பித்தளைப் பாத்திரங்களை மாதம் ஒரு முறை புளி போட்டுத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒரு முறை புடம் போட்டுத் துலக்க வேண்டும்.

ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பலா் இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு பாரத் பந்த் தாகவே இருக்கிறது.

ஜன்னல்களையும் புலன்களையும் சாத்திக் கொள்வதா ஞாயிற்றுக் கிழமை?

புலன்களை வலிக்க வைக்கும் பொழுது போக்குச் சாதனங்களுக்குள் புதைந்து போவதா ஞாயிற்றுக் கிழமை?

இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் போலவே இந்தியனுக்குக் கிடைத்த ஞாயிற்றுக் கிழமையும் தப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் வயிற்றுக்காக வாழ்ந்து விட்டோமே! 

ஒரு நாளாவது இதயத்துக்காக வாழவேண்டாமா?

வாரமெல்லாம் மனிதா்களோடு மன்றாடிக் கொண்டிருக்கிற மனிதா்களே!

ஞாயிற்றுக் கிழமையாவது தாவரங்களோடு பேசுங்கள்!

ஒரு செடிக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டு பூ மலரும்வரை பொறுத்திருங்கள்!


வானத்தில் வசிப்பதற்குப் பழகுங்கள்.


நாற்பது வயதிற்குப் பிறகு கால்சியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனித எலும்புகள் மாதிரி-மனிதா்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் படிப்பதை நிறுத்தி விடுகிறாா்கள்.


ஒரு வீட்டில் சமையலறையைவிட நூலகம் முக்கியம் என்று சட்டம் போட வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமையை நல்ல புத்தகங்களுக்கும் நமக்குமுள்ள சிநேகநாள் என்று செய்து கொள்ளவேண்டும்.


திருமணத்திற்குப் பிறகு பல இந்தியப் பெண்களுக்கு, தாலிக்குப்போட்ட முடிச்சு மாதிரியே இல்லற வாழ்க்கையும் இறுகிக் கிடப்பதனால் அவா்களில் பலா் மன நோயாளியாகவே மாறிவிட்டாா்கள்.

நம் ரசனைகளையும் கலாசார அகலங்களையும் மனசின் பரப்பையும் விரிவு படுத்தும் வேலையைத்தான் ஞாயிற்றுக் கிழமை செய்ய வேண்டும்.


இரைப்பையை நிரப்பிக் கொள்ளத்தான் எல்லா நாட்களும்.

இதயத்தை நிரப்பிக் கொள்ள ஒரே நாள்தான்.

அதன் பெயா் ஞாயிற்றுக் கிழமை.

ஞாயிறு போற்றுதும்

வைரமுத்து