Tuesday 9 October 2012

முக்கனி பா


மைசூர் பா மாதிரி முக்கனி பா இனிப்பு செய்யும் முறை பற்றி
தனது திருஅருட்பாவில் சொல்லியிருக்கிறார் இராமலிங்க வள்ளலார் அவர்கள் -

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே, 
தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்
….தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி, 
இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
….எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே, 
அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
….அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல்  அணிந்து     அருளே!


முக்கனி பா  செய்முறை  



முக்கனிகளான மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பலாப்பழம் இந்த மூன்றினையும் பிழிந்து  சாறினை  சக்கைப் போக வடிகட்டி தனித்தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.


மூன்று சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதில் சர்க்கரையும் கற்கண்டு பொடியையும் அதிகமாகக் கலந்து சுத்தமான நல்ல தேனை ஊற்றி போதுமான அளவு பசும்பாலும்  தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை பொடி  செய்து சேர்த்து  இளஞ்சூட்டில் கிளறவும். பிறகு நயம் நெய் சேர்த்து கிளறி 

இறக்கி ஆற விடவும்.

இந்த இனிப்பில் கொஞ்சம் வாயில் போட்டால் எப்படி இருக்கும்?




இதைவிட இனிப்பாக இருக்குமாம் இறைவன் எனும் தெள் அமுது !

தில்லையம்பலத்திலே  நடனமாடிடும்  நடராஜனே  -
உன்னுடைய பாதமலர்களை என் பாமாலையால் 
அலங்கரிக்கின்றேன் ,
அன்புடன் ஏற்று எனக்கு அருள்வாயாக!

என முடிக்கின்றார் வள்ளலார்.

தெள் அமுது  பற்றி விரைவில்........

1 comment:

  1. இனிப்பாகவும் சுவையாக இருந்தது.

    ReplyDelete