Saturday, 6 December 2014

பக்தி....10

இன்றைய ஆன்மிகத்தின் கசப்பான யதார்த்தம் இதுதான். 

 அந்த இறைவனையே இவர்களுடைய இன்ப வாழ்க்கைக்கு ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிகப் பத்திரிகைகளைக் கொஞ்சம் பாருங்களேன்.

""கடன் தொல்லை தீர யாரை வணங்க வேண்டும்?''

""நீண்டநாள் நோய் தீர எந்தத் தெய்வத்திடம் முறையிட வேண்டும்?''

""ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதால் உண்டாகும் நன்மைகள்?''

இப்படித் தலைப்புகள் இருந்தால்தான் ஆன்மிகப் புத்தகங்கள் விற்கின்றன. இந்த வார்த்தைகளுடன் இருக்கும் பத்திரிகையைக் கண்டால் அவை கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆன்மிகமே தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

இன்று நம்மிடையே அட்டவணை ஆன்மிகம் வந்துவிட்டது! ஆம்... கடன் தொல்லை தீர ஒரு கடவுள்; காதல் கைகூட மற்றொரு கடவுள்; மகளுக்குத் திருமணமா மற்றொரு தெய்வம்; பதவி உயர்வுக்கு ஒன்று, பந்தயத்தில் ஜெயிக்க வேறொன்று, நோயில்லாமல் வாழ ஒரு தெய்வம், வம்பு வழக்கில்லாமல் வாழ ஒரு தெய்வம்!

இப்போதெல்லாம் கடவுளின் சட்டையைப் பிடித்துக் கேட்கத் தொடங்கி விட்டோம். உன்னை வணங்கினால் எனக்கு என்ன தருவாய்? நம் அறியாமையை நினைத்து ஆண்டவன் சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இடையில் இருக்கும் சில ஆன்மிகத் தரகர்கள் நம் அறியாமையையும் அன்பின்மையையும் வைத்துத் தொழில் செய்து கொண்டு பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! இதுதான் இன்றைய அவல நிலை.

என் நண்பர் ஒருவர் - அமெரிக்காவில் ஒரு பெரிய கார்  தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்தியாவை விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. திடீரென்று ஒருநாள் தனது 14 வயது மகனுடன் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஏதோ நேர்த்திக்கடன் பாக்கியாம் ரொம்ப நாளாய். அதை நிறைவேற்ற வந்திருந்தார். கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்துகொண்டு வெளியே வந்தோம். இவர் தனது மகனிடம் ஒரு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து வாயில் உண்டியலில் போட்டுவிட்டு வரச்சொல்லிவிட்டு என்னுடன் வெளியே பேசிக் கொண்டிருந்தார். நெடுநேரம் ஆயிற்று. பையனைக் காணவில்லை. உள்ளே சென்று பார்த்தால் உண்டியலின் எதிரே அதையே உற்றுநோக்கியபடி நின்று கொண்டிருந்தான். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, "அமெரிக்காவில் இயந்திரங்களில் பணம் போட்டால் ஒரு கோகோ கோலா வரும். ஒரு பர்கர் வரும். குறைந்தபட்சம் ஒரு சின்ன சாக்லேட்டாவது வரும். இந்தியாவில் 100 ரூபாய் போட்டும் ஒன்றும் வரவில்லையே. இந்த இயந்திரம் பழுது ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். என் நண்பன் சொன்னது சரிதான். இந்தியாவில் இயந்திரங்கள் எல்லாம் பழுதான நிலையில்தான் இருக்கும் என்று. அது ரொம்ப சரி. இண்டியா இஸ் எ பேட் கன்ட்ரி'' என்றான்!

அவன் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்து விட்டோம். அதன்பின் உண்டியலைப் பற்றியும் இந்திய வழிபாட்டு முறைகளையும் விளக்கினோம். ஆனால் உண்மையில் கோயில் உண்டியலில் பணம் போட்டு கோக்கோ கோலாவை எதிர்பார்ப்பதற்கும், உண்டியலில் பணம் போட்டதால் புண்ணியத்தை எதிர்பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

அமெரிக்க நண்பனோ தனது பழைய நேர்த்திக்கடனைச் செலுத்தாததால் தன் பதவி உயர்வு தள்ளிப் போகிறதோ என்று சந்தேகித்து சில லட்சங்களைச் செலவழித்துக் கொண்டு டெக்ஸாசில் இருந்து திருவல்லிக்கேணி வந்திருக்கிறான்! நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டு இறைவனிடம் பதவி உயர்வு தர வேண்டுகிறான். பிள்ளையோ உண்டியலில் போட்ட நூறு ரூபாய்க்கு கோகோ கோலா போன்ற பொருளை எதிர்பார்க்கிறான்! இதில் எந்த வித்தியாசமும் இல்லைதானே!

""தனக்குத் தர வேண்டிய நேர்த்திக் கடனை நிர்த்தாட்சண்யமாக வசூல் செய்யும் கந்துவட்டிக்காரனாக நீ பார்த்தசாரதியைப் பார்த்தாய். உன் மகன் கண்ணனை ஒரு வியாபாரியாகப் பார்த்தான். எனக்கு என்னவோ உன்னைவிட உன் மகன் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது!'' என்றேன் நண்பனிடம்.

நண்பனுக்குப் பேச்சு வரவில்லை. அவன் பார்வையில் இப்போது ஒரு புரிதல் உணர்வு இருந்தது!

("கண்ணா வருவாயா!' என்ற நூலில் வரலொட்டி ரெங்கசாமி).

நன்றி - தினமணி கதிர்  30-11-14

No comments:

Post a Comment