Tuesday, 25 July 2023

உறவு



பொதுவாய் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காக பிரித்துக் கொள்ளலாம். 


இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு இருக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும். 

1 . நாத்திக உறவு.
2 . வியாபார உறவு
3 . நல் ஒழுக்க உறவு 
4 . அன்பான உறவு.

நாத்திக உறவு 

கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் முதல் வகை உறவே நாத்திக உறவு. நாத்தீர்கர்கள், பொதுவுடைமை வாதிகள், இந்த பட்டியலில் உள்ளவர்கள்.  

கடவுளை கண்டுகொல்லாதோர் அல்லது கடவுளை மறுப்போர் என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

ஆளும் அ தி மு க அரசாங்கத்தையோ, காங்கிரஸ் அரசாங்கத்தையோ, நீங்கள் விரும்ப வில்லை என்பதற்காகவோ, வெறுப்புடன் எதிர்க்கிறிர்கள் என்பதற்காகவோ அரசாங்கத்தின் வழக்கமான சலுகைகள்  உங்களுக்கு கிடைக்காமல் போகாது.

ரேஷனில் சக்கரை கிடைக்கும். அரசு நிர்வாகத்தில் வேலை கிடைக்கும். இதுபோல் நியதிப்படி கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.

அது போலவே கடவுளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடவுள் ஏற்ப்படுத்தி  வைத்திருக்கும் உலக வாழ்க்கை என்னும்  ஐம் பூத சிஸ்டம் நம்மை வெறுக்காது.

கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், இதயம் துடிக்கும், நியதிப்படி நடக்கக்கூடிய எல்லாம் முறைப்படி நடக்கும். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை  நிர்வாகம்.


ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு கிடைக்காது. சாவை வெல்லும் முக்தி, மோச்சம், பிறவி பிணியில் இருந்து விடுதலை என்பதெல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சலுகைகள்.

இந்த பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா, தற்சோதனை செய்யுங்கள். மாற விரும்பினால் மாறுங்கள். இதுவே போதும் என்றால் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.


வியாபார உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் இரண்டாம் வகை உறவே வியாபார உறவு. ஆன்மீக வியாபாரிகளுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு. 

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிசாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள்  உள்ளிட்டோர் இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காக கடவுளை விரும்புகிறவர்கள். 

சிலர் நான்தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் கடவுளே நான்தான் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள். 

இவர்களை நம்பி செல்பவர்களுக்கு சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும், சமாதியும் கிடைக்கவே கிடைக்காது. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்கு கடைசி மன்னிப்பும்  கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. 

நல்லொழுக்க உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வார் என்னும் மூன்றாம் வகை உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலவீரர் போன்ற நாத்திக வழி மகான்களே இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளை பற்றி பேசவில்லை. புகழவில்லை, கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுள் விரும்பும்  உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்ணியம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை, உள்ளிட்ட சகல நல்லொழுக்கங்களையும் கடுமையாக பின் பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளை கண்டுகொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களை கண்டு கொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.

இந்த வழி போற்றுதலுக்குரியது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமாய் இந்த வழியில் பயணிக்கலாம்.


அன்பான உறவு

கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர். கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் என்னும் நான்காம் வகை உறவே அன்பு வழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தார், சைவநாயன்மார்கள், சித்தர்கள் என பலரும் பின்பற்றும் உறவு. கடவுள் விரும்பும் அத்தனை நல்லொழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்வார்கள். அதே சமயம் கடவுளை புகழ்ந்து, போற்றி பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்யமாட்டார்கள். தன்னை புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாக வாழ்வார்கள்.


என்னிடம் பணம் கட்டி பூஜை செய்தால் வினைகள் தீர்ந்து விடும் என்பது போல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்.

தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் என்பதுபோல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள். நின்கடன் அடியேனையும் தாங்குதல். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்குப் போல் அடக்கமாய், எளிமையாய்,  தனியாய் வாழ்வார்கள்.

No comments:

Post a Comment