Friday, 4 September 2026

மறக்கமுடியாத கிருஷ்ண ஜயந்தி - 1981 ஆகஸ்ட்

MAY THIS DAY FILLS YOUR LIFE
WITH PEACE, JOY &
DIVINE BLESSINGS!

 

மாலாவிற்கும், எனக்குமான திருமணம் ஆகஸ்ட் 1981ல் உறுதி செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலும், திருமணம் 10ம் தேதி எனவும் முடிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை, கூறைநாட்டில் திருமணம் நிகழ்த்த மாலாவின் அப்பா அங்கிருந்த தனது மிகப் பழைமையான வீட்டினை ( பல ஆண்டுகள் பூட்டியே இருந்தது ) புதுப்பிக்க மிகவும் பாடுபட்டார். மாலாவின் அப்பா, அம்மா இருவரும் மயிலாடுதுறையிலேயே தங்கி ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர்.

நான் அலுவல் காரணமாக டெல்லி செல்லவேண்டியிருந்தது. மயிலாடுதுறை சென்று அங்கு என் பெற்றோர்களிடம் திருமணம் விஷயமாக பேசிவிட்டு மாலா தம்பி குமாரை அழைத்துக்கொண்டு சென்னை வந்தேன். எங்கள் BHEL Guest Houseல் குளித்துவிட்டு மாலாவை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றேன்.

அன்று கிருஷ்ண ஜெயந்தி.

மாலா முகம் மலர கள்ளம், கபடற்ற அவளது எல்லோரையும் கவரக்கூடிய சிரிப்புடன் என்னை வரவேற்றாள். அங்கு காலை உணவு ஏற்றுக்கொண்டு சென்னையில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்து வேலைகளை முடித்துவிட்டு மறுபடியும் மாலா வீட்டிற்கு சென்றேன். அவள் தன்னால் முடிந்த அளவு வெல்ல சீடை, முறுக்கு போன்றவைகளை செய்து வைத்திருந்தாள். எனக்கு டெல்லி செல்ல GT express இரவு என்பதால் மாலாவின் சகோதரர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்களுடன் இரவு உணவினை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றேன்.

மாலாவிற்கு Spencer ல் ஒரு அழகான செண்ட் பாட்டிலும், அழகான கைக்குட்டைகளையும் வாங்கி பரிசளித்தேன். அவைகள் அவள் சகோதரர்களால் பயன்படுத்தப்பட்டது என் பின்னர் அறிந்தேன். ஆனால் அவள் அந்த செண்ட் பாட்டிலின் மூடியை பத்திரமாக பாதுகாத்தாள் .

அவளது சிரிப்பு அப்படியே என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டது. அவளது வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பினையும், அவளது வெகுளித்தனத்தினையும், எல்லோரையும் நல்லவர்களாக எண்ணிப்பழகும் பாங்கினையும் நான் பாதுகாத்தேன்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்னால் மேலும் பதிவிட முடியவில்லை.

1981ல் எடுக்கப்பட்ட அவளது போட்டோக்கள் கீழே -

( B&W photos app மூலம் கலராக்கப்பட்டது )






No comments:

Post a Comment