19-ம் நூற்றாண்டு... காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் வறண்டு விவசாயம் பொய்த்துப் போக, ஆங்கிலேய அரசாங்கம் ஒரு பெரிய சிக்கலை சந்தித்தது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க, கரிகால சோழன் கட்டிய பழைய 'கல்லணை' பயனற்றுப் போய்விட்டது என்று நினைத்து, அதை இடித்துவிட்டு அல்லது முற்றிலும் மாற்றி அமைக்க ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அனுப்பப்பட்டார்.
அவர் பெயர் சர் ஆர்தர் காட்டன். மிகச் சிறந்த நீர்ப்பாசன பொறியியலாளரான அவர், தனது குழுவோடு கல்லணையை ஆய்வு செய்யத் தொடங்கினார். ஆனால் ஆற்றில் இறங்கி அஸ்திவாரத்தை ஆராய்ந்தபோது அவர் கண்ட காட்சி, அவரது ஒட்டுமொத்த பொறியியல் அறிவையும் சுக்குநூறாக்கியது!
ஆர்தர் காட்டனுக்கு ஒரே குழப்பம்... "ஒரு நதியின் அடித்தளத்தில் பாறையே இல்லை, முழுவதும் தளர்வான மணல் மட்டுமே இருக்கிறது. வெறும் மணலின் மீது இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு அணை எப்படி 1800 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரியின் காட்டாற்று வெள்ளத்தை தாங்கி நிற்கிறது? சிமெண்ட் இல்லை, கான்கிரீட் இல்லை... இது எப்படி சாத்தியம்?" என அவர் வியந்து போனார்.
அப்போதுதான் சோழர்களின் அந்த உலகத்தரம் வாய்ந்த ரகசிய தொழில்நுட்பம் அவருக்குப் புரிந்தது! ஓடும் ஆற்று நீரில் பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போடுவார்கள். அந்தப் பாறைகள் நீரின் அழுத்தத்தால் மணலில் புதையும். அதன் மீது மீண்டும் பாறைகளை வைத்து, ஒரு விதமான ஒட்டும் களிமண்ணை (Interlocking system) பயன்படுத்தி எந்தவித நவீன இயந்திரமும் இல்லாமல் இந்த பிரம்மாண்ட அணையைக் கட்டியிருந்தனர்.
கல்லணையை இடிக்க அல்லது மாற்றியமைக்க வந்த ஆர்தர் காட்டன், அதைச் செய்வதற்குப் பதிலாக சோழர்களின் தொழில்நுட்பத்தின் காலில் விழுந்தார். அந்தத் தொழில்நுட்பத்தை அப்படியே காப்பியடித்து, அதே முறையில் கொள்ளிடத்தில் 'கீழணை' மற்றும் கோதாவரி ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய அணையையும் கட்டினார். மேலும், அந்தத் தமிழனின் சாதனைக்கு 'The Grand Anicut' (கல்லணை) என்று பெயர் சூட்டி உலகறியச் செய்தார்!
இன்று நம்மிடம் பல நவீன இயந்திரங்களும், பெரிய தொழில்நுட்பங்களும் இருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு தலைசிறந்த ஆங்கிலேயப் பொறியாளரையே தலைசுற்ற வைத்த நம் கரிகால சோழனின் கட்டமைப்பு, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பெருமை அல்லவா?
No comments:
Post a Comment