Showing posts with label உடல். Show all posts
Showing posts with label உடல். Show all posts

Wednesday, 26 November 2014

உடல் நலம் ....5

வருமுன் காப்போம்

உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை.  அதை சிகிச்சை (cure) என்று சொல்வார்கள். நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்னவென்றால், நோய் வராமலே தடுத்துக் கொள்வது என்பதாகும்.  அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு அதற்குறிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.

மருத்துவத் துறை விஞ்ஞானிகள் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்த நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. அதுவே என்ன ஆகும் என்று பார்போமானால், ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே, உறுப்பிலே அது ஆரம்பித்திருக்கலாம். உதாரணமாக, அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும்.  அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீ ரணம் போகுமா? போகாது. அதுபோல  நோய் ஒரு இடத்தில் இருக்கும், அதனுடைய அறிகுறி அல்லது வெளித் தோற்றம்  (symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே என்ன செய்கிறோம் என்றால்,  ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம்.  மருந்தின் மூலமாக  அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், அந்த வால்வு இயக்கங்கள் ஊக்கிவிடப் படுகின்றன. ஆனால், உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்ற பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப் பெறுகின்றன. சரியாக, திட்டமாக, அளவோடு, நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும்.  அந்த மாதிரி அந்த பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும். Aggravate ஆகும். விளைவு தலைவலி போய் திருகு வலி வந்த கதையாகலாம். அந்த ஒரு இடத்தில் ஏற்பட்ட நோய் போகும், மற்ற இடத்தில் நோய் வரும். எனவே தான் சொன்னேன் – சிகிச்சை (cure) என்பதை விட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.

Friday, 14 November 2014

உடல் நலம் ....4

உடலோம்பல் இறைவழிபாடு.

 இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடு, முறையோடு சாப்பிடுவோம். ஆனால், சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக்குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கித் துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையால் செய்யும் தவறுகள் தான் துன்பமாக விளைகிறது. இறையின் ஆற்றல் எல்லாம் சரியாக நடக்கிறது.

ஆனைல் நாம் ஆசையினால், மறதியினால், இறைவனின் செயலை மறந்த தினால் அதிகமாகச் சாப்பிட்டோம்.  இறைவன் செயலில் குறுக்கிட்டோம். உறுப்புக் கெட்டுவிட்டது. அதன் விளைவாக துன்பத்தை அனுபவிக்கிறோம். இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத்தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்கவேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பம் தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறபோது இறையுணர்வு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல், அதிகமாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வது இறை வழிபாடு தானே?

Saturday, 8 November 2014

உடல் நலம் ....2

தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி 
நினைவுக்கு எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்ச்சிகள் உருவாகியுள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலியில் இருந்த தால் அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும் வேறு விதமாகி விட்டன. ஆகவே, முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாகா..
இது சம்பந்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பல விதமான ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஆராய்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெரிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இறுதியாக ஆடவருக்கும், பெண்டிருக்கும், குழந்தைகளுக்கும், பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல் வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு சில பயிற்சிகளை ஒழுக்கு படுத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்குப் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரபிகள் இயக்கத்தை ஒழுங்கு படுத்தி, இரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. 
நோய் வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும், நீடித்த ஆயுளும் உண்டாகின்றன. அதன் மூலம் ஆனமீக தேட்டத்தில் வெற்றி பெற்று நான் இந்த மண்ணுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து  கொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சயம் நன்மை அடைவார்கள். எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.

Wednesday, 5 November 2014

உடல் நலம் ....1

ஊனுடலே வாகனம் 
நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்குள்ளாக நாம் சமுதாயத்தில் கடன் பட்டிருக்கிறோம். மற்றம் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று  அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனை திருப்பிப் தரும் வழியே கடமை எனப்படுகிறது. 
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மை கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வர வேண்டிய வரவும் நின்று போய் மருந்தென்றும் உப சரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான், கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம் ,ஊர், உலகம் என்று உடல் கடைமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப் பட்டது. 

இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள், பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடு பேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப்போகும்? உடலை எடுத்தால் தான்  அந்தப் பாவம் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது.  ஆகவே உடலை உயர்வாகக் கருதி சீர் கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.