Monday, 8 June 2026
Wednesday, 4 March 2026
Monday, 25 August 2025
எனக்கு ஏன் நான்கு கால்கள் இல்லை? | கதை

புங்க மரக்கிளையில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி, ஒரே ஒரு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. குருவிக்குஞ்சு சற்று வளர்ந்து பறக்கவும் கற்றுக்கொண்டது. ஆனாலும் தாய்க்குருவி குஞ்சிடம், ‘நீ கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்ல வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு நீ விருப்பப்பட்ட இடத்திற்குப் பறந்து போகலாம்’ என்று சொல்லி இருந்தது.
எனவே குருவிக்குஞ்சு தன் கூடு இருந்த மரத்தின் அருகிலேயே பறக்கும். ஆங்காங்கே மரக்கிளைகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துப் பொழுதைப் போக்கும். மாலைப் பொழுதில் மீண்டும் தன் கூட்டிற்குத் திரும்பிவிடும். ஒரு நாள் சிலந்தி ஒன்று இரண்டு மரக்கிளை களுக்குத் தாவிக்கொண்டிருந்தது. அது தன் வாயிலிருந்து சுரக்கும் ஒரு பசையைக் கொண்டு பெரிய வலை பின்னுவதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.
சிலந்திக்கு எட்டுக் கால்கள் இருப்பதைப் பார்த்த குருவிக்குஞ்சுக்கு வியப்பாக இருந்தது.இன்னொரு நாள் பூனை ஒன்று எலியைத் துரத்துவதைப் பார்த்தது. அங்குமிங்கும் ஓடிய எலி பூனையிடம் அகப்படாமல் மரத்தடியி லிருந்த சிறிய பொந்துக்குள் ஒளிந்துகொண்டது. மற்றொரு நாள் நாய் ஒன்று பூனையைத் துரத்தியது. பூனையோ நாயிடம் அகப்படாமல் வேகமாக ஓடிச் சென்று மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.
இன்னொரு நாள் மலையிலிருந்து சில குரங்குகள் கிராமத்தின் எல்லைக்கு வந்தன. அவை ஒரு கொய்யா மரத்தின் கிளைகளில் தாவி ஏறின. மரத்தில் பழுத்துக் கிடந்த கொய்யாப் பழங்களைப் பறித்து உண்டன. மற்றொரு நாள் கிராமத்திலிருந்து ஆடுகளும் ஆட்டுக் குட்டிகளும் அந்த இடத்திற்கு வந்தன.
ஆடுகள் அங்கிருந்த செடிகளைத் தின்றன. சில ஆடுகள் தங்கள் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை உயர்த்தி, உயரமான கிளைகளில் உள்ள இலைதழைகளை உண்டன. ஆட்டுக் குட்டிகள் புல்வெளியில் துள்ளி விளையாடின.
இன்னொரு நாள் கிராமத்திலிருந்து சில சிறுவர்கள் வந்தார்கள். அருகிலிருந்த மாமரத்தில் ஏறி மாங்காய் களைப் பறித்து அவர்கள் தின்றார்கள். பிறகு தாழ்வான கிளைகளைக் கைகளால் பற்றித் தொங்கி, ஊஞ்சல் ஆடி விளையாடினார்கள். இவற்றை எல்லாம் பார்த்த குருவிக்குஞ்சின் மனதில் பல எண்ணங்கள் எழுந்தன.
‘மனிதர்களுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்கின்றன. பெரிய விலங்குகளுக்கு மட்டுமன்றி எலி, அணில் போன்ற சிறிய விலங்குகளுக்கும்கூட நான்கு கால்கள் இருக்கின்றன. சிலந்திக்குக்கூடப் பல கால்கள் இருக்கின்றன. ஆனால், நம்மைப் போன்ற பறவைகளுக்கு இரண்டு கால்கள் மட்டும்தானே இருக்கின்றன’ என்று குருவிக்குஞ்சு கவலைப்பட்டது.
உணவு தேடச் சென்ற தாய்க்குருவி கூட்டுக்குத் திரும்பியது. உடனே குருவிக்குஞ்சு, “அம்மா, இந்த உலகில் நம் பறவை இனத்திற்கு மட்டும் இரண்டு கால்கள்தானே இருக்கின்றன. இயற்கை நம்மை மட்டும் ஏன் இப்படிப் படைத்து வஞ்சித்தது?” என்று கேட்டது. “நீதான் இப்போது பறக்கக் கற்றுக்கொண்டாய் அல்லவா? நாளை காலை என்னோடு வா. நான் அழைத்துச் செல்கிற இடங்களில் என்னென்ன நடக்கிறது என்று பார். பிறகு உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றது தாய்க்குருவி.
மறுநாள் பொழுதுவிடிந்தது. தாய்க்குருவி குருவிக்குஞ்சை அழைத்துக்கொண்டு புறப்பட்டது. முதலில் ஒரு வேப்பமரத்திற்குக் குருவிக்குஞ்சை அழைத்துச் சென்றது தாய்க்குருவி. அங்கே ஒரு காகம் நன்கு பழுத்த வேப்பம் பழத்தைத் தன் அலகால் கொத்திப் பறித்து விழுங்கியதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.
பிறகு தாய்க்குருவி ஒரு வாதுமை மரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒரு கிளி தனக்குக் கிடைத்த ஒரு கொட்டையைத் தன் அலகால் உடைத்து, உள்ளிருந்த பருப்பை எடுத்து உண்டதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. பிறகு இரண்டும் ஒரு குளக்கரைக்குச் சென்றன. அங்கே ஒரு மயில் நீர் அருந்திக்கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. திரும்பி வரும் வழியிலேயே சில புறாக்கள் தங்கள் சிறகுகளை அலகால் கோதிக்கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.
இறுதியாக இரண்டும் ஒரு பனைமரத்தின் அருகில் வந்தன. அங்கே தூக்கணாங்குருவிகள் மெல்லிய நார்களைத் தங்கள் அலகால் பின்னி, அழகான கூட்டை உருவாக்கிக் கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. பிறகு தாய்க்குருவியும் குருவிக்குஞ்சும் தங்கள் கூட்டிற்கு வந்துசேர்ந்தன. தாய்க்குருவி தன் குஞ்சிடம், “இன்று நாம் வெளியே சென்றபோது பல வகைப் பறவைகளைப் பார்த்தோம். அவற்றிலிருந்து நேற்று நீ கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொண்டாயா?” என்று கேட்டது.
“அம்மா, பல வகைப் பறவைகளைப் பார்த்தோம். ஆனால், அவற்றில் என் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது என்று புரியவில்லையே...” என்றது குருவிக் குஞ்சு. “மனிதர்களுக்குக் கைகளும் கால்களும் இருக்கின்றன, விலங்குகளுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன. ஆனால், நம் பறவை இனத்திற்கு இரண்டு கால்கள்தானே இருக்கின்றன என்று வருத்தப்பட்டாய்.
இயற்கை நமக்கு அலகு எனும் சிறந்த உறுப்பைத் தந்திருக்கிறது. நம் இனம் தன் அலகால் பழங்களைப் பறிக்கிறது, கொட்டைகளை உடைக்கிறது, உணவை உண்கிறது, குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுகிறது, நீர்அருந்துகிறது, சிறகுகளைக் கோதி சுத்தம் செய்கிறது. இதை எல்லாம் நீ பார்த்தாய் அல்லவா! எல்லாவற்றுக்கும் மேலாக அலகால் எவ்வளவு அழகாகக் கூடுகட்டுகிறது.
பறவை இனமாகிய நமக்கிருக்கும் அலகால் எத்தனையோ வேலைகளைச் சிறப்பாகச் செய்யும்படி இயற்கை படைத்திருக்கிறதே” என்று சொன்னது தாய்க்குருவி. “ஆமாம் அம்மா, இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு சிறப்பைத் தந்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது குருவிக்குஞ்சு.
Monday, 4 August 2025
பொறாமை, சோகம், கோபம், பேராசை.
ஒரு ஊரில் ஒரு _சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு._
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல,_ *தனக்குக் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.*
மனிதர்களுக்கு இடையே சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள *கோபத்தை அது சேகரிக்கும்.* இன்னொரு இடத்தில் இருக்கும் *ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும்.* பொறாமை தீயில் ஒருவன் எரிவதைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் *பொறாமையை சேர்த்துக் கொள்ளும்.*
இப்படி பார்க்கும் இடமெல்லாம் *வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.*
மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்!_ _பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!! பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!...
அடுத்த சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு சேகரிப்புகளினால் நிரம்பித் தளும்பியது....
ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது.இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.!!!
சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப்பார்த்த அதனுடைய நண்பனான கிளி, *என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?"...என்றது.
நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை!... வேகமாகச் செயல்பட முடியவில்லை.... எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.
நண்பனான கிளி, அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது.
அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!.. என்றது குருவி.
அட, அப்படியா?.... என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன் என்றது கிளி.
எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன். என்றது குருவி.
அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்... என்றது கிளி.
சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை என்றது குருவி.
கிளி நண்பன் விடவில்லை. எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன் என்றது அது.
சரியென்ற குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது....
அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான *பொறாமையை* எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.
ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது..
சிறிது காலம் சென்ற பின்னர் அது கிளியைச் சந்தித்த போது சொன்னது...
நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பைவிடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.
மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!...... என்றது சிட்டுக்குருவி.
ஆமாம்! ஆமாம்! மிகச் சரியாகச் சொன்னாய்..
என்று தலை ஆட்டியபடியே பறந்தது கிளி.!
Friday, 1 August 2025
இன்றைய அரசியல் நிலைமை - கதை
இன்றைய அரசியல்வாதிகளுக்கான கதை
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும்.
அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான்.
அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனான்.
ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,
"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன சலுகைகள் ஒன்றைக்கூட செய்யவில்லையே! ஏன் மன்னா?"
மன்னன் பதிலேதும் பேசவில்லை. சில நாட்கள் கழித்து அந்த மெய்க்காப்பாளனை அழைத்துக் கொண்டு நதிக்கு மீன் பிடிக்கச் சென்றான்.
மெய்க்காப்பாளன் தூண்டிலில் புழுவை மாட்டிக் கொடுக்க கொடுக்க அதை வாங்கிய மன்னன் நதியில் மீன் பிடித்தான். நிறைய மீன்கள் சிக்கின.
மன்னன் மீண்டும் அரண்மனைக்கு கிளம்பும் முன் மெய்க்காப்பாளனிடம் கேட்டான்,
"வீரனே! நான் மீன் பிடிப்பதற்கு முன்பாக மீனுக்கு விருப்ப உணவாக இருக்கும் புழுக்களை தூண்டிலில் மாட்டி என்னிடம் கொடுத்தாயே!
இப்பொழுது இரண்டு கூடை நிறைய மீன்கள் பசியால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு ஏன் நீ புழுவை இப்பொழுது உணவாக வழங்கவில்லை?"
வீரன் சட்டென பதில் சொன்னான்,
"மன்னா! நமது நோக்கம் புழுவைக் காட்டி மீன்களை பிடிப்பது தானே தவிர மீன்களைப் பிடித்து அதற்கு புழுக்களை உணவாக அளிப்பது அல்ல"
மன்னன் சிரித்துக் கொண்டே கேட்டான்,
"இப்பொழுது புரிகிறதா? நான் ஏன் மன்னனாகும் முன் மக்களிடம் சொன்னவைகளை மன்னனான பின் செய்யவில்லை என்று..!"
நீங்கள் எதையோ கற்பனை செய்தால் நம்முடைய கம்பெனி பொறுப்பில்லைங்க!! 😄😄😄

















