Showing posts with label துறவு. Show all posts
Showing posts with label துறவு. Show all posts

Thursday, 20 November 2014

துறவு.....3

அளவுமுறை

உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலை சாப்பிட்டுக் கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப் போக்கு என்றாகும். டாக்டரிடம் போனால் நோயிக்கு மருந்து கொடுப்பார். குணமான மறுகணமே மீண்டும் அளவுக்கு அதிகமாக உணவு நாடிப் போனால், வாழ்நாள் முழுதும் வயிற்றுப் போக்கு என்ற நிலை ஏற்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்? வேறு எந்தக் காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணத்திற்காச் சொன்னேன்.
அதே போல் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், உடல் வலுவிழந்து போகிறது, உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வு சீரழிகுறது. நாம் கெடுக்கிறோம். குடும்பம் பாதிக்கப்படுகிறது, சமுதாயம் தப்புவதில்லை.

ஐயுணர்வோடு மெய்யுணர்வு  இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறதென்றால், உறவிலேயே ஒரு தெளிவு,  அதாவது detachment in attachment வருகிறது. இதுதான் உறவிலேயே துறவு நிலை. இது அல்லாத துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டு விட்டு போவது தான் துறவு என்றால் இறப்பவர்கள் தான் துறவு நிலைக்குப் போகிறார்கள் என்று சொல்லலாம்.

நாம் வாழும் போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமையவேண்டுமே தவிர, நாம் இறந்த பிறகு துறவானால் என்ன, எதுவானாலும் என்ன? அவ்வாறு வாழும்போது வாழ்வு திருப்தியாக,  மென்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலேயும் எல்லை கட்டிக் கொள்ள வேண்டும், அளவு இட்டுக் கொள்ள வேண்டும்.

Wednesday, 12 November 2014

துறவு.....1


உண்மையான துறவு யாது?

ஒரு அன்பர் கேட்டார்:  “எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கிறார்களே!”  என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே போனீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான் இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? உணவைத் தானே நாடவேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்த தாக அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று.. அளவு முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இது வரைக்கும் தான் உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாகத் தெரிகிறது. அதைத் தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கேயே  அதோடு நிறுத்தக் கூடிய அறிவும்,  செயலும் வந்து விட்டன என்றால் அதாவது  அறிந்த அறிவுக்கு செயல் ஒன்று பட்டால் அது தான் துறவு.  “அடுப்பிலே சாதம் வைக்கிறீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு ஏன் இறக்குகின்றீர்கள்?”  என்று கேட்டேன் . “சட்டியில் உள்ளது அடிபிடித்து விடும்.” “வேக வைக்கின்ற வரை, உறவு, இறக்குவது துறவு. இதற்கு மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும் போது உடனே விடுதலை செய்து விட வேண்டும். அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு, அனுபவிக்க க்கூடிய முறை இந்த இரண்டு தெரிந்தால் அது தான் துறவு.