Showing posts with label பாவமன்னிப்பு. Show all posts
Showing posts with label பாவமன்னிப்பு. Show all posts

Monday, 4 August 2025

மன்னிப்பு



சந்தோஷத்தை,

சஞ்சலத்தை,

சிலிர்ப்பை

என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்

அச்சத்தையும்,

முதல் மன்னிப்பு கோரல்

வெட்கத்தையும் தருவதாக...

மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,

பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,

பிறகு எல்லாம்

பழகி விடுகிறது.

செய்வதற்கு எந்த தவறும்

கேட்பதற்கு எந்த மன்னிப்பும்

குற்ற உணர்வு தருவதில்லை...

அப்புறம் பார்த்துக்கலாம்

என்கிற மனநிலை இருக்கிற வரை

தவறுகள் தொடரும்...

கடவுளே எத்தனை

பெரிய தவறுக்கும்

பாவமன்னிப்பு தரும்போது...

மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?

மன்னிப்பு கேட்கிற

எத்தனை பேருக்கு -

பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...

ஆனாலும்

தவறு செய்யாமல்

இருக்கப்போவதில்லை...

மன்னிப்பு கோராமலும்

இருக்கப்போவதில்லை...

எல்லாமே பாவனையாக,

மன்னிப்பு கேட்டு, கேட்டு...

மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -

மன்னிப்புக்கு மரியாதை

இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்

என்பதாலேயே பல

தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்

விழும் அடி,

ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே

என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -

நான் பாதிக்கப்படும் போது,

தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத

இயலாமையும் பிடிபடுகிறது...


கண்ணதாசன்.

Tuesday, 16 September 2014

பாவமன்னிப்பு .....2

ஒரு மதகுரு ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபா தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.

50 ரூபாவில் பாவமன்னிப்பா? எத்தனை மலிவு?

கூட்டம் முண்டியடித்துக்கொண்டு பாவமன்னிப்பு சீட்டை வாங்கியது.

ஒருவன் மட்டும் இரண்டு சீட்டுக்கள் கேட்டான்.

மதகுரு " ஒரு சீட்டு போதுமே. யார் இந்த மடையன்? எதற்கு இரண்டு சீட்டுக்கள் கேட்கிறான்? நமக்கென்ன, பணம் கொடுக்கிறான்.வாங்கிக்கொள்வோம்" என்று நினைத்த படி அவனுக்கு இரண்டு சீட்டுக்கள் கொடுத்தார். 

நல்ல வியாபாரம். மதகுரு மகிழ்ச்சியுடன் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டார், அடுத்த ஊரில் கடை விரிக்க.

வழியில் காடு. திடீரென ஒருவன் கையில் கத்தியுடன் அவர் முன் தோன்றினான்,

"பணமூட்டையை கொடுத்துவிடு, இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன்" என்று பயமுறுத்தினான்.

மதகுரு அதிர்ந்து போனார். "பாவி மதகுருவையே கொள்ளையடிக்கிறாயே இந்த பாவம் உன்னை சும்மாவிடாது"
என்று அலறினார்.

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே. இந்த பாவம் என்னை ஒன்றும் பண்ணாது" என்றான் அவன்.

அதெப்படி சாத்தியம்? என்று கேட்டார் மதகுரு.

"நான் இதற்காக பாவமன்னிப்பு சீட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் உன்னிடமே வாங்கியிருக்கிறேன். ஒருவன் உன்னிடம் இரண்டு சீட்டுகள் வாங்கினானே,னினைவிருக்கிறதா? அது நான் தான். ஒரு சீட்டு செய்த பாவங்களுக்கு. இன்னொன்று செய்யப்போகும் பாவங்களுக்கு." என்றான் அவன்.

மதகுருவால் எதும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் தன்னையும், அவனையும் சபித்துக்கொண்டு பணமூட்டையை அவனிடம் கொடுத்தார்.

Saturday, 13 September 2014

பாவமன்னிப்பு .....1

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.

ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம்   அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?''

அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை.சின்னச்  சின்னப்  பொய்கள்,சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?''

ஞானி சிரித்தார்.முதல் ஆளிடம்,''நீ போய் பெரிய பாறை ஒன்றைத்  தூக்கிவா,''என்றார்.

இரண்டாமவனிடம்,''நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.''என்றார்.

இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.

இப்போது ஞானி சொன்னார், ''சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்றார். 

முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.

இரண்டாமவன் தயக்கத்துடன்,''இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?''என்று கேட்டான்.

ஞானி சொன்னார்,''முடியாதல்லவா,அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.நீ சின்னச்  சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன்.யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.''