Sunday 19 August 2012

இப்தார் விருந்தில் முதல்வர் சொன்ன கதை !


நேற்று  இப்தார்  நோன்பு  திறக்கும்  நிகழ்ச்சியில்   தமிழக முதல்வர் சொன்ன  கதை -

நீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல் இறைப் பற்றுடன் இந்த நோன்பினை இஸ்லாமியப் பெருமக்கள் மேற்கொண்டு இருக்கும் இத் தருணத்தில், இறையருள் யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வறண்ட பூமி. அங்கே ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தைப் பார்த்தார் அந்த மனிதர். அப்போது இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழிவாயாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மனிதர், ஓடிய அந்தத் தண்ணீரை பின்தொடர்ந்து போனார். அங்கே ஒரு தோட்டக்காரர் மண்வெட்டியால் அந்தத் தண்ணீரை திருப்பிவிட்டு தன் தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தார். 

அந்த தோட்டக்காரரிடம் இந்த மனிதர் உங்கள் பெயர் என்ன என்று விசாரித்தார். அந்தத் தோட்டக்காரரும் தன் பெயரைக் குறிப்பிட்டார். உடனே அந்த மனிதர் கொஞ்ச நேரத்துக்கு முன்பு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் பெயரைச் சொல்லி உங்கள் தோட்டத்தில் மழை பெய்யும்படியாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது என்று கூறினார். அப்படியா என்றார் அந்த தோட்டக்காரர்.

உடனே அந்த மனிதர் இந்த அளவுக்கு உங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கிறதே, அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தோட்டக்காரர் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தில் எது விளைந்தாலும் அதை மூன்றாகப் பிரித்து விடுவேன். ஒரு பகுதியை தர்மம் செய்து விடுவேன். இரண்டாவது பகுதியை எனது குடும்பத்துக்காக வைத்துக் கொள்வேன். மூன்றாவது பகுதியை இதே நிலத்தில் மீண்டும் பயிர் செய்து விடுவேன் என்று கூறினார். இதிலிருந்து கடமை உணர்வுடன் இறைவனைத் தொழுகிறவர்களுக்கு மட்டும்தான் இறையருள் கிட்டும் என்ற உண்மை தெரிகிறது.

Advance Greetings - Mala & JP
இறை வழிபாட்டுடன், ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்யும் கடமை உள்பட இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கடமைகளையும் மேற்கொண்டு இறையருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment