இன்றைக்கு எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..!
சிறுவயதில் நான் அடிக்கடி பார்த்து ரசித்த எங்கள் ஊர் கோவில் யானை பற்றி போட்டோவுடன் செய்தி வந்திருந்தது.
இந்த யானை பற்றி என் முதல் நினைவுகளில் எழுதியுள்ளேன்.அதன் போட்டோவைத் தொலைத்துவிட்டேன் என்றும் கூறியிருந்தேன். இன்றைக்கு யானையின் போட்டோவைப் பார்த்ததும் உடனே ஊருக்குச் சென்று யானையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.
( எனது முதல் நினைவுகள் பதிவினைப் படிக்க click HERE )
மயிலாடுதுறையில் பழைமையும், பிரசித்தியும் வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 60 வயதுடைய அபயாம்பாள் என்கிற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
விழாக்காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால்தான் விழா களைகட்டும். 50 ஆண்டுகளாக இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்பட்டு வருகிறார் யானை அபயாம்பாள்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் யானை ஆர்வலர் ஒருவர் இந்த யானைக்கு கோடைக்காலத்தில் ஷவர் வசதி ஏற்படுத்தித் தந்தார். கடந்த வருடம் செல்வந்தர் ஒருவர் யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்தார். இந்நிலையில், மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக கோடை வெம்மையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தால் யானையின் அவதியை சிந்தித்த வனவிலங்கு ஆர்வலரான நட்சத்திரா குழுமத் தலைவர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் என்பவர் மயிலாடுதுறை யானை கொட்டகையில் இரண்டு மின்விசிறி அமைத்துத் தந்துள்ளார்.
50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கொட்டகையில் காற்று வீசுவதால் யானை அபயாம்பாள் ஈக்களின் தொந்தரவு நீங்கி, கோடையின் தாக்கம் குறைந்து குதூகலமடைந்து, அடிக்கடி உற்சாகமாக பிளிறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment