Saturday, 16 April 2022

எங்கே கடவுள்? எது கடவுள்? - பாரதியார்

 


ஒரு நாள் ஒரு சீடன் பாரதியிடம் கேட்டான், குருவே, நான் இறைவனைக் காண வேண்டும். அவர் எப்படி இருப்பார் ? எங்கே இருப்பார் ? இராமர்  போல, கிருஷ்ணர் போல, சிவன் போல, திருமால் போல இருப்பாரா ? கோவிலில்,  குளத்தில்,மரத்தில், மலையில் ...எங்கே காணலாம் அவரை என்று கேட்டான்.

பாரதி பதில் சொன்னான்....வேதாந்தத்தின் உச்சம் அந்த  பாடல்கள்.

கடவுள் என்பவர் இரவி வர்மா வரைந்த படங்களில் உள்ளதைப் போல இருக்க மாட்டார்.

இந்த உலகம்  எல்லாம் அவன் படைத்தது என்பதால் எல்லாவற்றிலும் அவன் இருப்பான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எல்லாம் மனிதனின் மடமை. எல்லாம் அவன் படைத்தது . அதில் உயர்வு ஏது , தாழ்வு ஏது ?




பாரதி  சொல்கிறான்:






கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

கழுதையை, கீழான பன்றியை, தேளைக் கண்டு தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும். 

சிவன் எங்கு இருக்கிறான்...எப்படி இருப்பான்....அழுக்கை சுமக்கும் கழுதை, அழுக்கை  உணவாக உண்ணும் பன்றி, விஷத்தை கக்கும் தேள் அவற்றின் பாதத்தில் சிவன் இருக்கிறான். 

சொன்ன பின் பாரதி யோசிக்கிறான்...அடடா எல்லாம் இறைவனின் அம்சம் என்று  சொல்ல வந்த நானே தவறு செய்து விட்டேனே என்று  நினைக்கிறான். கழுதையை  வெறுமனே சொன்ன பாரதி பன்றியை கீழான பன்றி என்று சொல்லி  விட்டான். விலங்குகளுக்குள் என்ன உயர்வு தாழ்வு.....

 தவறை திருத்துகிறான் அடுத்த வரியில் 

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

குப்பையையும் மலத்தையும் வணங்க வேண்டும்  என்றான்.அதிலும் கடவுள் இருக்கிறான். கடவுள் என்பவன்  வில்லேந்தி,சங்கு சக்கரம் ஏந்தி, திரி சூலம் ஏந்தி  வருபவன் அல்ல. கூளத்திலும் மலத்திலும் இருப்பவன். 

மீண்டும் பாரதி யோசிக்கிறான்.  அடடா மீண்டும் தவறு நிகழ்ந்து விட்டதே...அது என்ன  இறைவனை கழுதை, பன்றி, தேள், கூளம் , மலம் என்று சொல்லி ..வருகிறேன்..


ஏன்  குயிலை, மயிலை,  சந்தனத்தை, வைரத்தை,தங்கத்தை சொல்லாமல் விட்டு  தாழ்ந்த பொருள்களையே சொல்லிக் கொண்டிருக்கிறோமே ... என்று நினைக்கிறான்....அடுத்த வரியில் அதையும் திருத்துகிறான் .....

கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

சுற்றியுள்ள எல்லா பொருளும் தெய்வம் என்றான். 

பொருளே தெய்வம் என்றால் உயிர்களை என்ன  சொல்லுவது ? 

நீங்கள் வேண்டி விரும்பி வணங்கும் கடவுள் உங்களை சுற்றி எல்லா இடத்திலும்  இருக்கிறான். நீங்கள் தான் அவற்றை விட்டு விட்டு நீங்கள் நினைத்த  வண்ணத்தில் இறைவன் வேண்டும் என்று அடம்  பிடிக்கிறீர்கள். அப்படி வர வில்லை என்றால்  இறைவனை நீங்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டீர்கள். 

நீங்கள் விரும்பிய வண்ணம்  இராமனாகவோ,க்ரிஷ்ணனாகவோ, எசுவாகவோ  இறைவன் வர வேண்டும்....இல்லை என்றால் அவன் இறைவன் இல்லை, உங்களைப்  பொருத்தவரை.

விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே

கடவுள் விண்ணில் மட்டும் அல்ல, மண்ணும் அவனே.  

கோவிலை விடுங்கள் - விக்ரகங்களை விடுங்கள் - படங்களை விடுங்கள் - 

எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர பிரமத்தை உணருங்கள். 

ஓர் உருவம் ஓர் நாமம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ! ....என்பார் மணிவாசகர்.

அவனுக்கு எத்தனை பெயர்கள்  ... மரம், செடி, கொடி , வண்டி, காவல்  காரன்,பால் காரன்,  தபால் காரன், வேலைக்காரி, வாத்தியார், நண்பன்,  மாணவி,  கணவன், பிள்ளைகள், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவன்....

ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ....
நெட்டில்  சுட்டது

No comments:

Post a Comment