Monday, 4 April 2022

கவிஞர் கண்ணதாசன் - சுய விமர்சனம்

 



கவிஞர் கண்ணதாசன் தன்னைப்பற்றி எழுதிகொண்ட சுய விமர்சனம் :









வனது வாழ்க்கை அதிசயமானதுதான்.  எந்த ஒரு சராசரி மனிதனும் இப்படிப் பட்ட வேடிக்கையான வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான்.  அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப் படுவது அவனது இயற்கையான சுபாவம்.

இந்த வாரம் அவனை நான் சந்தித்தபோது, அவனுக்காக இரக்கப்பட்டேன்.  நரகம், சொர்க்கத்தை உணரத் தெரிந்த அவனுக்கு, அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.

தவறுகளின் மீது நின்று கொண்டே அவற்றை மறந்து விட அவன் முயன்றான்.  சில நேரங்களில் நியாயம் கற்பிக்கவும் முயன்றான்.  அதனால் அவன் நெஞ்சு அழும்போதே, வாய் சிரித்துக் கொண்டிருந்தது.

பரமஹம்ஸர் சொன்னதைப் போல பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான் :

ஆறுமாதம் சிரமப்பட்டு ஒரு சீடன் நீரில் நடக்கக் கற்றுக் கொண்டானாம்.  கங்கையில் நடந்து அவன் கரையேறியதும், பகவான் அவனைப் பார்த்து அனுதாபத்தோடு, ‘நாலணா கொடுத்தால் ஓர் ஓடக்காரன் இந்த வேலையைச் செய்து விடுவானே!  இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கி விட்டாயே! என்றாராம்.

வாழும் காலம் மிகவும் குறுகியது. செயலற்ற காலம் ஒன்று வரக் கூடும். இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும்.

இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவையல்ல.  ஆனால் நிரந்தரமாக விளையாடப் போகிறவன் போலவே வாழந்து பார்த்தான்.

அவனது அரசியல் வேடிக்கையானது.  அவனது தேர்வுகள் சிரிப்புக் கிடமானவை.  கடந்த முப்பதாண்டுகளாக ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடுவதாக நினைத்து, மேலும் மேலும் அவற்றிலேயே சிக்கிக் கொண்டான்.  இப்போது அஸ்தமன சூரியன் கிழக்கு வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது.

தான் பசுமையாக இருந்தபோது காய்த்துக் குலுங்கிய காலங்களை எண்ணிப் பார்க்கிறது.  கண்ணாடியில் பார்த்தால் உருவம் இப்போது அழகாக இருக்கிறது. உள்ளம்தான் தனது பரந்த மைதானத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்று விட்டது.

ஏக்கர் கணக்கில் இருந்த நிலம் கிரவுண்ட் கணக்கிலாகி, இப்போது செண்டுக் கணக்கில் ஆகி இருப்பது போன்ற ஒரு மயக்கம். 
ஆர்ப்பாட்டங்களில் இருந்து ஒதுங்கிவிட்டதாலே, பெரிய கண்டங்களில் இருந்து தப்பியாகி விட்டது.  ஆனாலும் மெய் சிலிர்க்கக்கூடிய உற்சாகம் மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆற்றங்கரைகளில் துள்ளிக் குதித்து, பசுமையான மலைகளின் காற்றில் உலாவி, குற்றாலத்து அருவியிலே கிருஷ்ணா !, கிருஷ்ணா ! என்று குளித்து, ‘வாழ்க்கை அற்புதமானது எண்றெண்ணிய மனது, பட்டியில் அடைபட்ட ஆட்டுக் குட்டி போல் சுற்றிச் சுற்றி வருகிறது.

பாம்புக்குப் பிடாரனின் கூடை வசதியாக இருநதாலும், அது வாழந்த காடுபோல் ஆகுமா?

அழகான மாளிகையின் தொட்டியில் எவ்வளவுதான் உணவுப் பொருட்கள் விழட்டுமே, ஆற்றில் கிடப்பது போன்ற சுகம் மீனுக்கு வருமா?

ரத்ததின் வெள்ளோட்டம் குறையக் குறைய, அந்த நாள் ஞாபகம் நெஞ்சைச் சுடுகிறது.

நான் அவனைச் சந்தித்தபோது, சிரித்துக் கொண்டே அழுதான்; அழுதுகொண்டே சிரித்தான்.  பாவம்! இப்போது மனிதன் மாறிவிட்டான்.

ஒரு சுகமான இடைக்காலமே இப்போது அவன் வாழ வேண்டிய அவசியத்துக்குக் காரணமாகிறது.  இல்லையென்றால், ராஜாமாதிரி வாழ்ந்தவன், சந்நியாசி மாதிரி வாழக்கூடாது என்ற கொள்கை அவனுக்கு உண்டு.

‘அதிசயங்கள் நிகழ்த்திய பெருமையோடு ஆவி பிரிந்து விடவேண்டும்.” என்பான், ‘மாரடைப்பால் மரணம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் ‘ என்பான்.

அவனது நிறம் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அவனது கற்பனை மகாநதியில் இன்னும் வெள்ளம் நுங்கும் நுரையுமாக பொங்கியே வருகிறது.

ஆத்ம ராகத்தில் மெய்சிலிர்க்க, இரண்டு கைகளையும் பின்னுக்குக் கட்டியபடி முன்னும் பின்னும் உலாவும் போது வானம் கீழே இறங்கி அவன் கால்களை முத்தமிடுகிறது. 
அவனுக்கு உலகத்தில் எதுவுமே பெரிதல்ல.  சம்பாதிக்கத் தெரிந்தவன்; பத்திரப்படுத்தத் தெரியாதவன். சேமிப்பு இல்லாத காரணத்தால், பல நேரங்களில் கண்ணீரையே எண்ணிப் பெட்டியில் வைக்க வேண்டியதாயிற்று.

முப்பது வருட முட்டாள்தனத்தில் அவன் சேமித்த சொத்துக்கள், அவனது எழுத்துக்களே!

அவையும் இல்லாமற் போயிருக்குமானால், பூமியில் முளைத்து நிற்கும் தூங்குமூஞ்சிமரங்களில் அவனும் ஒன்றாகி இருந்திருப்பான்.

எப்போது தன் மதத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றில் தலையிட்டானோ, அப்போதே அவனது உற்சாகம் குறையத் தலைப்பட்டது.  இது ஒருவகையில் தெய்வத்தின் பரிசே! 
ஆயிரம் இருக்கட்டும்.  அவனது வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதமான பெருங்கதை.  தனது காதல் கதைகளில் தன்னை நேசித்த பெண்களையும், தன்னிடம் அன்பு செலுத்திய உள்ளங்களையும் அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்.

இவ்வளவு நாடகத் திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது.

இன்றைய இளைஞர் சமுதாயம் முழுமைக்கும் எப்படி வாழக் கூடாது என்று போதிக்க அவனுக்குச் சக்தி உண்டு.

கள்ளம் கபடமற்ற அந்த வாழ்க்கையில் கங்கையின் புனிதமும் இருக்கிறது. வைகையின் வறண்ட தன்மையும் இருக்கிறது. 
கடந்த ஜூன் இருபத்து நான்காம் நாள், ஐம்பத்து நான்கு வயதை எட்டிவிட்ட அந்த அதிசய மனிதனைப் பார்த்தபோது அவனது ஆதங்கங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் கடந்து, கண்களில் பரவி நின்ற தெளிவையே என்னால் காண முடிந்தது.

அவனுக்கு முதுமை வரவில்லை என்பதுபோல், அவனது உருவம் இருந்தது.  தத்துவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அவனிடம் இருந்து விடைபெற என்னால் முடியவில்லை...காரணம் இது என் சுய தரிசனம்.


No comments:

Post a Comment